IST (GMT+5.5)

இந்த வார தியானம்

(Meditation for the Week)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


வேஷந்தரித்து, மறுதலித்து


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

மேலும், கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. (2 தீமோத்தேயு 3:1)

எப்படியெனில், மனுஷர்கள்

தற்பிரியராயும்,
பணப்பிரியராயும்,
வீம்புக்காரராயும்,
அகந்தையுள்ளவர்களாயும்,
தூஷிக்கிறவர்களாயும்,
தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும்,
நன்றியறியாதவர்களாயும்,
பரிசுத்தமில்லாதவர்களாயும்,
சுபாவ அன்பில்லாதவர்களாயும்,
இணங்காதவர்களாயும்,
அவதூறு செய்கிறவர்களாயும்,
இச்சையடக்கமில்லாதவர்களாயும்,
கொடுமையுள்ளவர்களாயும்,
நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்,
துரோகிகளாயும்,
துணிகரமுள்ளவர்களாயும்,
இறுமாப்புள்ளவர்களாயும்,
தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,

தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. (2 தீமோத்தேயு 3: 2-:5)

கர்த்தராகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை சமீபித்து இருக்கிற இந்த கடைசி காலங்களின் கடைசி நாட்கள் எப்படி கொடிய காலமாயிருக்கும் என்பதை,  மனித  சுபாவங்கள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி வேதம் மேற்கண்டவாறு பல்வேறுபட்ட மனிதர்களை குறித்து சொல்லி எச்சரித்து, இப்படிப்பட்டவர்களை நாம் விட்டு விலகி கர்த்தருடைய வழியில் தொடர்ந்து நாம் நடந்து நிலைத்திருக்க வேண்டும் என்று போதிக்கிறது.

மேற்கண்ட மனிதர்களில் கடைசியாக குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வகை "தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்கள்" என்று வேதம் சொல்கிறது.

பரிசுத்த வேதம் "தேவபக்தி" என்றால் என்ன என்பதைக் குறித்து கீழ்க்கண்ட வசனங்கள் நமக்கு தெளிவாக விளக்குகிறது.

அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார். (1 தீமோத்தேயு 3:16)

சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது. (1 தீமோத்தேயு 4:8)

போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். (1 தீமோத்தேயு 6:6)

பொய்யுரையாத தேவன் ஆதிகாலமுதல் நித்திய ஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம்பண்ணி, அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி, (தீத்து 1:3)

இந்த தேவபக்தியின் (godliness) மையமும், இரகசியமும் நம்மைப் போல இரத்தமும் சதையும் உடைய மனிதனாக வெளிப்பட்டு சிலுவையில் உலக மனிதர்கள் அனைவரின் பாவ,சாப நோய்களை, பாடுகளை சுமந்து இறந்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து என்றென்றும் உயிரோடு இருக்கிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே. மட்டுமல்ல, இந்த தேவபக்தி வெறும் இந்த உலக வாழ்க்கைக்குரியதாக மட்டுமில்லாமல் நம்மை நித்திய ஜீவனுக்குள் அதாவது, இந்த உலக வாழ்க்கைக்கு பிறகும் என்றும் அழியாமல் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோடு வாழும் வாழ்க்கைக்கும் உரியதாகும்.

இந்த தேவபக்தி, நம் சரீர முயற்சிகளினாலோ, சடங்கு சம்பிரதாயமாக செய்யப்படுகிற காரியங்களினாலோ நமக்குள் உருவாக முடியாது. ஆண்டவர் இயேசுவினிடத்தில் நாம் உண்மையாக வேண்டிக்கொள்ளும் போது,  ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்ளும் அறிவினால் அவருடைய திவ்விய வல்லமை இந்த தேவபக்தியை நமக்கு தருகிறது. இதையே பரிசுத்த வேதம் கீழ்காணும் வசனத்தில் விளக்குகிறது:

தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி, (2 பேதுரு 1:3)

ஆனால், சிலர் இந்த தேவபக்தியின் பெலனை (Power of godliness) ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்து, அதாவது இந்த பரிசுத்த வேதம் போதிக்கும் தேவபக்தியின்படி நடப்பதினால் பெலன் ஒன்றும் இல்லை மறுதலித்து, ஆனால் வெளி உலகுக்கு தேவபக்தியை கொண்டிருப்பது போல வேஷந்தரித்து வாழுகிறார்கள்.  இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைக் குறித்து பரிசுத்த வேதம் கீழ்க்கண்ட வசனங்களில் விளக்குகிறது.

ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால், அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும்பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி, கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு. (1 தீமோத்தேயு 6:3-5)


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email