IST (GMT+5.5)

Palm Sunday


ஓசன்னா!

(Hosanna - "oh save!", an exclamation of adoration)


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

முன்நடப்பாரும் பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். (மத்தேயு 21:9)

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, எருசலேம் நகரத்திற்கு வெளியிலிருந்து நகரத்தை நோக்கி ஒலிவ மலைக்கு அருகே வருகிற பொழுது, திரள் கூட்ட மக்களும், சீஷர்களும் அதுவரை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினால் செய்யப்பட்ட அளவற்ற அற்புதங்களை, நன்மைகளை, அவர் தம் போதனைகளை நினைத்து மிகுந்த சந்தோஷத்தோடு மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்தின்படி ஆண்டவரை துதித்து புகழ்ந்து பாடினார்கள்.

அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள். அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள். (மத்தேயு 21:10-11)

ஆனால், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோ எருசலேம் நகரத்திற்குள் நுழைந்தவுடன், அந்த நகரத்தை அந்த நகரத்து மக்களை நினைத்து கண்ணீர் விட்டழுதார்.

அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர் விட்டழுது, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது. (லூக்கா 19:41-42)

காரணம், இந்த எருசலேம் நகரத்தில் வெகு சிலரான மக்களே உண்மையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தங்கள் மேசியா என்றும், மெய்யாகவே பிதாவாகிய தேவனுடைய ஒரே சொந்த பிள்ளையென்றும் நம்பி அவரை முழு உள்ளத்தோடு தங்கள் இரட்சகராக, தெய்வமாக ஏற்றுக் கொண்டார்கள். ஆனால்,இந்த வெகு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அவரை தங்கள் ஊரைச் சேர்ந்த ஒரு சாதாரண மனிதராக மட்டுமே அவரை ஏற்றுக் கொண்டார்கள். மதத் தலைவர்களும், வேத பண்டிதர்களும், மத போதகர்களுமோ இன்னும் ஒருபடி மேலே சென்று ஆண்டவர் இயேசுவை சர்வவல்ல தேவனுக்கு எதிரியாக பார்த்து அவரை கொலை செய்யவும் முயன்றார்கள். அவர்கள், ஆண்டவர் இயேசு செய்த அற்புதங்களைக் கூட மிகவும் விமர்சித்து, ஆனால் மறுக்க முடியாத அந்த அற்புதங்களின் உண்மையினிமித்தம் வேறு வழியின்றி அதை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. பரிசுத்த வேத கட்டளைகளை, நியாயப்பிரமாணத்தை வெறும் சடங்கும், சம்பிரதாயமுமாக கடைப்பிடித்து வந்த அவர்களுக்கு அந்த பரிசுத்த வேதம் முன்னறிவித்த, எத்தனையோ தீர்க்கதரிசிகளின் மூலமாக தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட, காணக்கூடாத சர்வ வல்லமையுள்ள தேவனே இந்த மனுக்குலத்தை மீட்கும் மீட்பராக, தங்கள் சொந்த இரட்சகராக மனிதனாக வெளிப்பட்டு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவாக தங்கள் முன் இருந்ததை அறியமுடியாமல் போனதை நினைத்து, அந்த அறியாமையினால் அவர்கள் சந்திக்கப்போகும் மிகப்பெரும் அழிவையும், பாடுகளையும் நினைத்து ஆண்டவர் மிகுந்த வேதனையோடு கண்ணீர் விட்டழுதார்.

" உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால்.."(லூக்கா 19:43).

ஒருவேளை நாமும் இந்த நிலையிலிருந்தால்,  உண்மையாய் ஆண்டவர் இயேசுவை அறிந்து, அவரையே நம் சொந்த இரட்சகராக, கர்த்தராக ஒரே தெய்வமாக முழுமையாய் ஏற்றுக் கொண்டு அவரை தொழுதுகொள்ளாமல், பழக்கத்திற்காகவோ பாரம்பரியத்திற்காகவோ அவரை தொழுது கொண்டால் அல்லது எத்தனை முறையோ ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைக் குறித்து கேள்விப்பட்டும் அவரை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் போனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மையும் பார்த்து அன்று போலவே இன்றும் கண்ணீர் விட்டழுகிறார்.

மாறாத, அளவற்ற அதே உண்மை அன்போடு இன்று நம்மை அழைக்கிறார். அதிசீக்கிரமாக இரண்டாம் முறையாக இந்த உலகிற்கு நியாதிபதியாக வரப்போகும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினிடத்தில் அப்பொழுது நாம் இரக்கத்தையும், மனதுருக்கத்தையும், தயவையும்  எதிர்பார்க்க முடியாது. காரணம், அப்பொழுது அவர் நீதியுள்ள நியாதிபதியாய் இந்த உலகத்தை நியாயந்தீர்க்க வருகிறார். இந்த உலக மக்கள் அனைவருக்காகவும் தன்னையே கல்வாரி சிலுவையில் பாவத்தை போக்கும் பலியாய் அற்பணித்தும் தன்னை நிராகரித்த, மறுதலித்த உலகத்தை நியாயந்தீர்க்க வருகிறார்.

...இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள். (2 கொரிந்தியர் 6:2)

தாமதமின்றி இன்றே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம் சொந்த இரட்சகராக, கர்த்தராக ஒரே தெய்வமாக முழுமையாய் ஏற்றுக்கொண்டு, அவர் தம் பரிசுத்த வழியில் அவருடைய கட்டளைகளை கைகொண்டு அவரில் அன்பு கூர்ந்து அவர் பிள்ளைகளாய்  முடிவு வரை நடப்போம்.

அப்பொழுது ஆண்டவர் இயேசு கிறிஸ்து இரண்டாம் முறை வரும் போது நாமும் தைரியமாய் துதிக்கலாம்,

கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா (மத்தேயு 21:9)


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


 

Print Email