IST (GMT+5.5)

Jesus on the Cross


சிலுவையிலும்


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து,  பிதாவாகிய தேவனுடைய சித்தம் நிறைவேற்ற தன்னையே பிதாவுக்கு ஒப்புக் கொடுத்து, இவ்வுலகின் மனுகுலத்தை பாவத்திலிருந்து, அந்தகார இருளிலிருந்து தம் பரிசுத்த இரத்தத்தால் மீட்டு, மீண்டும் பிதாவின் அன்பின் உறவிலே ஒப்புரவாக்கி நிலைநிறுத்தி தேவ சித்தம் நிறைவேற்றினார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து  தாமே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறதினால்,  நித்திய ஜீவ வாழ்வை என்றும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுடன் நாம் வாழ நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது, அவர் நமக்காக கல்வாரி சிலுவையில் தம்மையே பழுதற்ற பலியாய் ஒப்புக்கொடுத்து, இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை முழு உள்ளத்தோடு நம்பி விசுவாசித்து ஏற்றுக் கொள்வது தான். நம் அக்கிரமங்கள், பாவங்கள், சாபங்கள்,நோய்கள், பிசாசின் சோதனைகள் எல்லாவற்றையும் நமக்காக ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம் மீது ஏற்றுக்கொண்டு, நாம் தண்டனை அனுபவித்து பலியாக வேண்டிய இடத்தில், அவர் நமக்காக பலியானதை முழு உள்ளத்தோடு நம்பி விசுவாசித்து ஏற்றுக் கொள்வது தான். இந்த ஒரு நம்பிக்கை நம் வாழ்வையே மாற்றி நம்மை அவரிடம் கொண்டு சேர்க்கும். இந்த உலகில் வாழும்போதும், இந்த உலகத்தை விட்டு மரணத்தின் வழியாக மறு உலகம் சென்ற பிறகும் என்றும் அவர் நம்முடன் இருப்பார். நாம் அவர் பிள்ளைகளாய் என்றும் அழியா வாழ்வோடு அவருடன் பரலோகத்தில் இருப்போம்.

முப்பத்து மூன்றரை ஆண்டுகள் இந்த பூமியில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மனிதனாக வாழ்ந்த போதும், அவருடைய மனு வாழ்வின் கடைசி வினாடி வரை சிலுவையில் அவருடைய கடைசி சொட்டு இரத்தமும் இந்த பூமியில் சிந்தப்பட்டு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போதும், அந்த மகா பயங்கரமான மரண வேதனையோடும், உடலெல்லாம் நொறுக்கப்பட்டு உடலிலும் சொல்லிமுடியாத வேதனையோடும், ஒட்டுமொத்த மனுக்குலத்தின் பாவ சாபமும் பாரங்களும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தபோதும் அவரிடம் மாறாமல் வெளிப்பட்ட ஒன்று  அன்பு. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு. அந்த அன்பு நிறைந்தவராய் சிலுவையில் தொங்கிகொண்டிருந்த போது அவர் மொழிந்த ஏழு திருவார்த்தைகள்:

முதல் வார்த்தை:

அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள். (லூக்கா 23:34)
(தன்னை சிலுவையில் அறைந்த மக்களுக்காய், அவர்கள் செய்வது என்ன என்றே தெரியாமல் செய்கிறார்கள் என்று சொல்லி மிகுந்த அன்போடு தம் பிதாவிடம், சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனிடம் அவர்களை மன்னிக்க வேண்டினார்)

இரண்டாவது வார்த்தை:

இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். (லூக்கா 23:43)
(ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அவமானப்படுத்தும்படியாக இரண்டு திருடர்களுக்கு நடுவில் அவர் சிலுவையில் அறையப்பட்ட போதும், அதில் ஒரு திருடன் மனம் வருந்தி, மனம் திருந்தி அவரிடம்  மன்னிப்பு வேண்டி அவரை முழு மனதோடு தன் இரட்சகராக,தெய்வமாக ஏற்றுக் கொண்டபோது அவனை மன்னித்து அவனுக்கு என்றும் அழியா ஜீவ வாழ்வை அளித்து தன் ராஜ்யம், அதாவது பரலோகத்தில் சேர்த்து கொண்டார்.)

மூன்றாவது வார்த்தை:

அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான். (யோவான் 19:26-27)
(ஆண்டவர் இயேசு கிறிஸ்து சர்வ வல்லமையுள்ள கடவுளாக இருந்தும், இந்த உலகத்தில் தான் மனிதனாக பிறந்து வாழ்ந்து போது, அவருக்கு தாயாக இருந்த மரியாளை தனக்கு அன்பான சீஷனிடம் ஒப்புவித்து, தன் உலக வாழ்வின் கடமைகளையும் பூரணமாக நிறைவேற்றினார்)

நான்காவது வார்த்தை:

ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். (மத்தேயு 27:46)
(இந்த வார்த்தையை ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொல்லும் வரை பிதாவாகிய தேவனோடு இருந்த மிக உன்னத உறவை தன் மீது சுமத்தப்பட்ட மனுக்குலத்தின் பாவ சாபத்தால் இழந்து, நாம் இருக்க வேண்டிய இடத்தில் அவர் இருந்து நமக்காக கதறுகிறார்.)

ஐந்தாவது வார்த்தை:

அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். (யோவான் 19:28)
(தாகமாயிருக்கிறேன் என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொல்லும் போது, இரத்தமும் சதையுமாய் முழுமையாக ஒரு மனிதனாகவே தாகத்தில் தவிக்கிறார்)

ஆறாவது வார்த்தை:

இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். (யோவான் 19:30)
(பிதாவாகிய தேவன், தம் ஒரே சொந்த மகனென்றும் பாராமல் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நமக்காக கல்வாரி சிலுவையில் ஒப்புக்கொடுக்க, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் மனுக்குல மீட்பை, பாவ மன்னிப்பை தம் இரத்தத்தினால் உண்டாக்கி தம் பிதாவின்சித்தம் முழுமையாக செய்து முடித்து நிறைவேற்றிய பின் அவர் சொன்ன வார்த்தையே " முடிந்தது".)

ஏழாவது வார்த்தை:

இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார். (லூக்கா 23:46)
(பிதாவாகிய தேவனிடத்தில் இருந்து ஆண்டவர் இயேசு கிறிஸ்து மனிதனாக புறப்பட்டு வந்து தேவ சித்தம் யாவும், தனக்கு கொடுக்கப்பட்ட பணிகள் யாவும் செய்து முடித்து நமக்கு முன் மாதிரியாக, பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொல்லி மீண்டும் தன் பிதாவிடமே தன் ஆவியை ஒப்புகொடுத்து அவரிடமே சென்று சேர்கிறார்)

நாம் என்றும் பின்பற்ற வேண்டியவர், என்றும் நமக்கு முன் மாதிரியான அன்பின் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒருவரே.

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14:6)


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email