IST (GMT+5.5)

இனிய கிறிஸ்து இயேசு உயிர்த்தெழுந்த நன்னாள் வாழ்த்துக்கள்


அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார், சீக்கிரமாய் திரும்ப வருகிறார்


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்...(மத்தேயு 28:6)

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, பிதாவாகிய தேவனுடைய சித்தம் நிறைவேற்ற தன்னையே கல்வாரி சிலுவையில் பலியாக ஒப்புக் கொடுத்து, இறந்து, மூன்றாம் நாளில் தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார். கல்லறையில், அவருடைய உடலுக்கு கந்தவர்க்கங்களை இடச்சென்ற பெண்களை பார்த்து தேவ தூதன் சொன்ன வார்த்தையே பரிசுத்த வேதத்தில் மேற்கண்ட வசனம்.

மெய்யாகவே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார். ஆகவே தான் இன்றும் அவர் ஒருவர் மட்டுமே சொல்கிறார்:

மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.(வெளிப்படுத்தின விசேஷம் 1:18)

ஆண்டவர் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நன்னாளை நினைவு கூர்ந்து, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு சிலுவையில் சம்பாதித்து கொடுத்த ஜெயத்தை, வெற்றியைகொண்டாடும் நாம், ஆண்டவர் இயேசுவின் இந்த இரட்சிப்பின் சுவிசேஷத்தை- நற்செய்தியை (Gospel of Jesus OR Gospel of Salvation) அறிந்திருக்கிற நாம் இங்கே மற்றுமொரு முக்கிய சத்தியத்தை - உண்மையையும் நினைவில் கொள்ளவேண்டியது மிக அவசியம். அது என்ன?

அது தேவ ராஜ்யத்தின் சுவிசேஷம் (Gospel of Kingdom), அதாவது அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார், மனுக்குலத்தை நியாயந்தீர்க்கும் நியாயாதிபதியாக சீக்கிரமாய் பூமிக்கு மீண்டும் வருகிறார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு அவர் ஆளுகை செய்யும் அவருடைய ராஜ்யமான பரலோக ராஜ்யம் அவரோடு கூட பூமிக்கு இறங்கி வருகிறது. பூமியை ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஆளப்போகிறார். எனவேதான்,

... இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் (Kingdom of Heaven) சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார். (மத்தேயு 4:17)

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த இரத்தம் விலைக்கிரயமாய் கொடுக்கப்பட்டு மீட்கப்பட்ட நாம் (எபேசியர் 1:7, கொலோசியர் 1:14), நம் இரட்சிப்பின் பரிபூரணத்தை அடைய நாம் ஆண்டவர் ஆளுகை செய்யப்போகும் அவருடைய ராஜ்யத்திற்கு நாம் தகுதியுள்ளவர்களாக, என்றென்றும் அவரோடு நாம் வாழ, நாம் அவருடைய இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாவது மிக முக்கியமாகும்.

அதற்கு, நம்மை முற்றிலுமாய் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு அவர் சித்தம் செய்து, அவர் பெயரை மகிமைப்படுத்தி அவருக்காக வாழ அர்ப்பணிபோம். அப்பொழுது, தேவனாகிய கர்த்தர் தம் பரிசுத்த ஆவியானவரால் நம்மை நிறைத்து, அவர் தம் இரண்டாம் வருகைக்காக நம்மை முத்திரை செய்து (எபேசியர் 4:30) நம்மை ஆயத்தப்படுத்துவார். தேவ ராஜ்யம் நம்மை கொண்டு சேர்ப்பார்.

இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். (வெளிப்படுத்தின விசேஷம் 22:20)

Print Email