IST (GMT+5.5)

இந்த வார தியானம்

(Meditation for the Week)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


நம்மை நாமே


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம். (1 கொரிந்தியர் 11:31)

நம் வழிகளையும், செய்கைகளையும், நோக்கங்களையும், நினைவுகளையும் கூட தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிறுத்தி, அதாவது பரிசுத்தவேத வசனத்தின் வெளிச்சத்தில் நிறுத்தி, உயிருள்ள, நடுநிலையான மனசாட்சியோடு அவைகளை ஒவ்வொரு நாளும் நாம் நிதானித்து, ஆராய்ந்து பார்த்தாலே நாம் எப்படிப்பட்டவர்களென்று தெளிவாக அறிந்து கொள்ள முடியும். அப்படி அறிந்து கொண்ட நிலையை மறைக்காமல் கர்த்தரிடத்தில் அறிக்கை செய்து அவருடைய உதவியை நாடும் போது அவர் நமக்கு எப்பொழுதும் உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார்.

நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா.) (சங்கீதம் 32:5)


நம்மை நாமே இப்படி நிதானித்து அறிந்து கொள்வதால் என்ன பலன்?

நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம். (1 கொரிந்தியர் 11:32)

கர்த்தருடைய இரண்டாம் வருகைக்குப் பிறகு நியாத்தீர்ப்பின் நாளிலே மற்றவர்களோடு சேர்த்து நம்மையும், அதாவது எவ்வளவு சொல்லியும் பாவ வழிகளை விட்டு திரும்பாத,கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக, ஒரே தெய்வமாக ஏற்றுக்கொள்ளாத, கர்த்தருடைய பிள்ளை நான் என்று சொல்லிக்கொண்டு எல்லா பாவ காரியங்களையும் செய்கிற மற்றவர்களோடு சேர்த்து நம்மையும் ஆண்டவர் நரக அக்கினி தண்டனைக்கு தீர்ப்புச் செய்யாமல், நாம் நம்மை அறிந்து கொள்ள வாய்ப்புகள் தந்து, நம்மை தமக்கு பிரியமான பரிசுத்த பிள்ளைகளாக மாற்றும்படியாக ஆண்டவர் நம்மை சிட்சிப்பதைக் குறித்தே மேற்கண்ட பரிசுத்த வேத வசனம் நமக்கு விளக்குகிறது. மேலும்,

அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே. கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள். நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? (எபிரெயர் 12:5-7)

நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு. (வெளிப்படுத்தின விசேஷம் 3:19)

இப்பொழுது தேவனாகிய கர்த்தர் கிருபையாக நமக்கு கொடுத்திருக்கிற இந்த நேரத்தை வீணாக்கி, நம்மை நாம் நிதானித்து அறிந்து கொள்ள மறுக்கும் போது அல்லது நம்மை நாமே நல்லவர்களாகவும், கர்த்தருக்கு பிரியமானவர்கள் என்று நினைத்துக் கொள்ளும் போது,

நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. (1 யோவான் 1:8)

எனவே,

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் (இயேசு கிறிஸ்து) உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். (1 யோவான் 1:9)


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email