IST (GMT+5.5)

இந்த வார தியானம்

(Meditation for the Week)


வேறொரு பிரமாணம் (Another Law)


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மைசெய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை. (ரோமர் 7:18)

பரிசுத்த ஆவியானவர், அப்போஸ்தலனாகிய பவுல் மூலமாக பரிசுத்த வேதத்தில் மேற்கண்ட வசனத்தில் ஒரு முக்கியமான வேத சத்தியத்தை, ரகசியத்தை நமக்கு விளக்குகிறார். அதாவது, நன்மை செய்ய வேண்டும் என்ற விருப்பம் நம் எல்லோருக்குள்ளும் இருந்தாலும் அது நிஜத்தில் எவ்வளவு தூரம் உண்மையாக இருந்து நாம் நன்மை செய்கிறோம் என்பதை நாம் நன்கு அறிவோம். இந்த போராட்டம் நம் மாம்சத்தில் அதாவது இந்த உலக வாழ்க்கையில் நம் சரீர முயற்சியில் இருப்பதாக வேதம் நமக்கு உணர்த்துகிறது. இதை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள, நன்மை செய்ய வேண்டும் என்ற விருப்பம் நம் மனதில் அதாவது நம் ஆத்துமாவின் ஒரு பகுதியான நம் மனதில் இருந்தாலும் அதை செய்து நிறைவேற்ற நம் உடலின் உதவி நமக்கு தேவை. ஆனால் நம் உடலின் அவயவங்களில் இந்த போராட்டம் அதாவது நன்மை செய்ய வேண்டும் என்கிற விருப்பம் செயல் வடிவமாக, விரும்பினபடியே செய்து முடிக்கப்பட முடியாதபடி இந்த போராட்டம் அதற்கு பெரும் தடையாக இருக்கிறது.

இந்த போராட்டத்தில் நமக்கு தோல்வி ஏற்படும்போது என்ன நடக்கிறது என்பதை பரிசுத்த வேதம் எப்படி சொல்கிறது:

ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். (ரோமர் 7:19)

இந்த தோல்விக்கு  என்ன காரணம்? முதலாவது,

அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. (ரோமர் 7:20)

நமக்குள் இருக்கும் பாவம் - அதாவது நாம் செய்து கொண்டிருக்கும் பாவங்கள், செய்த பாவங்களின் பலன் (Result of Sin), அந்த பாவங்களின் வேர் (Roots of Sin) நமக்குள் எவ்வளவு ஆழமாய் ஊடுருவி இருக்கிறது என இந்த காரணங்களே இந்த போராட்டத்திற்கு காரணம்.

இரண்டாவதாக, நன்மை செய்ய வேண்டும் என்ற நம் மனதின் விருப்பத்திற்கு  எதிராக வேறொரு பிரமாணம் அல்லது ஒரு சட்டம் நம் உடலின் அவயவங்களில் போராடுவதை பரிசுத்த வேத வசனம் நமக்கு உறுதியாக சொல்கிறது:

ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது. (ரோமர் 7:23).

 அப்படியானால், அந்த பிரமாணம் (the law) அல்லது சட்டம் என்ன?

மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது. (கலாத்தியர் 5:17)

நமக்கோ அல்லது மற்றவர்களுக்கோ நன்மை செய்ய வேண்டும் என்ற விருப்பம் தேவனாகிய கர்த்தரிடத்தில் இருந்து நம் ஆவியில் கொடுக்கப்பட்டு, பின் அது நமது ஆத்துமாவிற்குள் அதாவது நம் மனதிற்குள் ஒரு விருப்பமாக தோன்றுகிறது. ஆனால், மேற்சொன்ன பிரமாணத்தின்படி இரத்தமும் சதையுமாகிய நம் உடல், நம் மாம்சம் அதை எதிர்க்கிறது. அதாவது நன்மை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை செயல்வடிவமாக்க ஒத்துழைப்பதில்லை. இதில் நமக்கு நன்மை என்பது நாம் விட்டுவிட விரும்பும் ஒரு பாவமாக இருக்கலாம் அல்லது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பிரியமாக நடக்க விரும்பி செய்ய விரும்பும் ஒரு காரியமாக, பரிசுத்த வேதத்தின் படியான வேறெந்த நன்மையாகவும்  இருக்கலாம்.

நம் சரீரத்தின், மாம்சத்தின் இந்த எதிர்ப்பை அழித்து நம் உடலும் ஆண்டவருக்கு கீழ்படிந்து நமக்கும், மற்றவர்களுக்கும் நன்மை செய்வது எப்படி? இந்த போராட்டத்தை நாம் ஜெயிப்பது எப்படி?

  • நம் ஆவி, ஆன்மா அல்லது ஆத்துமா உடன் நம் சரீரத்தையும் அதாவது நம் உடலின் ஒவ்வொரு அவயவத்தையும் முற்றிலுமாக ஆண்டவருக்கு ஒப்புக் கொண்டுக்க வேண்டும்.

நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள். (ரோமர் 6:13)

உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிறபிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள். (ரோமர் 6:19)

  • தேவனுடைய ஆவியானவருக்கே கீழ்படிந்து அவர் நடத்துகிறபடியே நாம் நடக்க வேண்டும்.

பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். (கலாத்தியர் 5:16)

  • ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு சொல்லியபடியே நாம் அதிகமாக ஜெபிக்க வேண்டும்.

நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். (மத்தேயு 26:41)

மேற்கண்டவைகளை நாம் செய்ய, இந்த போராட்டத்தில் வெற்றி பெற முதன்மையாக நாம் செய்ய வேண்டியது, பரிசுத்த ஆவியானவரை நாம் பெற்றுக்கொள்ளும்படியாக தேவனிடத்தில் வேண்டிக்கொள்ள வேண்டியதே ஆகும். பரிசுத்த ஆவியானவர் நம்மை நிரப்பும் பொழுது தனிப்பட்ட முறையில் (in a personalized way) பரிபூரணமாக நமக்கு உதவி செய்து இந்த போராட்டத்தில் நமக்கு ஜெயத்தை தந்து தேவனுக்கேற்ற விதமாய் நம்மை பரிசுத்தமாய் எப்பொழுதும் காத்து நடத்துவார். அப்பொழுது நாம் நன்மை செய்கிறவர்களாய் இருப்போம்.


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email