IST (GMT+5.5)

இந்த வார தியானம்

(Meditation for the Week)


ஆபிரகாமும் அந்நிய பாஷையும் - பகுதி 2


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார். (ஆதியாகமம் 17:2)

நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார். (ஆதியாகமம் 17:8)

உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளெல்லாம் எட்டாம்நாளிலே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும். (ஆதியாகமம் 17:12)


கடந்த பகுதியிலே (முதல் பகுதி), தேவனாகிய கர்த்தர் எப்படி ஆபிரகாமுக்கு சரீரத்திலே  - விருத்தசேதனமாகிய - ஒரு அடையாளத்தை  ஏற்படுத்தி, அதன் மூலம் சரீரப் பிரகாரமாக ஜீவன் கடந்து சென்று தேவன் வாக்கு பண்ணினவைகளை பெற்றுக் கொள்ள காரணமாக இருந்தது என்பதை தியானித்தோம்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான புதிய ஏற்பாட்டில்,  இந்த விருத்தசேதனம் என்கிற இந்த காரியம் எப்படி நிறைவேறியது என்பதை பரிசுத்த வேத வசனம் இப்படி விளக்குகிறது:

ஏனெனில், மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள். (பிலிப்பியர் 3:3)

ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்கிற நாமே விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்கள். ஆவியினாலே தேவனாகிய கர்த்தரை ஆராதிப்பது என்பதை அந்நிய பாஷையிலே தேவனை ஆராதிப்பது மற்றும் ஜெபிப்பது என்பதை  கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்கள் குறிக்கிறது.

ஏனெனில், அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான். (1 கொரிந்தியர் 14:2)

என்னத்தினாலெனில், நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம்பண்ணினால், என் ஆவி விண்ணப்பம்பண்ணுமேயன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும். (1 கொரிந்தியர் 14:14)

மேலும், அப்.பவுல் மூலமாக பரிசுத்த ஆவியானவர் வேதத்தில், நம்முடைய பாஷையிலும், அந்நிய பாஷையிலும் பாடுவதைக் குறித்து இப்படி சொல்கிறார்:

இப்படியிருக்க, செய்யவேண்டுவதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம்பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம்பண்ணுவேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன். (1 கொரிந்தியர் 14:15)

இப்படியாக, ஆவியிலே பேசுவது, பாடுவது என்பது அந்நிய பாஷையிலே பேசுவது, பாடுவது என்பதே என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெற்று, அந்நிய பாஷையிலே பேசுகிறவர்களுக்கு, வாயிலே கொடுக்கப்பட்டிருக்கிற மிக விசேஷித்த ஒரு அடையாளம், ஒரு நாளும் அறிந்திராத, கறை படாத சுத்தமான, அவர்களுடைய ஆவியிலிருந்து (பரிசுத்த ஆவியானவர் மூலமாக) பேசப்படுகிற, கர்த்தரோடு அவர்களை இணைத்திருக்கிற மொழியே அது. அதாவது அந்நிய பாஷையே அது.  அது, இயற்கை அறிவினால், மூளை அறிவினால் உண்டாகாமல், அதைத் தவிர்த்து, ஆவிக்குரிய மண்டலத்திலிருந்து வருகிறதும், தேவனுடைய சித்தத்தையும், இருதயத்தையும் வெளிப்படுத்துகிறதுமாயிருக்கிறது.

பல கிறிஸ்தவர்களால், தங்கள் வாழ்வைக் குறித்த தேவ சித்தத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட காரியத்தில் தேவ சித்தத்தை அறிய முடிவதில்லை.

அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார். (ரோமர் 8:26-27)

பரிசுத்த ஆவியானவர், நம் மூலமாக அந்நிய பாஷையில் வேண்டிக்கொள்ளும் போது, அது தேவனுடைய பரிபூரண சித்தத்தின் படியே இருந்து, அந்த விண்ணப்பம் தேவனால் பதிலளிக்கப்படுகிறது.

நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள்; நீங்கள் சண்டையும் யுத்தமும்பண்ணியும், நீங்கள் விண்ணப்பம்பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை. நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள். (யாக்கோபு 4:2-3)


நாம் ஆவியில் ஜெபிக்கும் போது, அதாவது அந்நிய பாஷையில் ஜெபிக்கும் போது சிருஷ்டிக்கும் ஜீவன் நம் நாவில் இருந்து புறப்பட்டு, பாய்ந்து செல்லும் இந்த ஜீவன் ஆபிரகாமுக்கு கொடுக்கப்பட்ட ஆசீர்வாதங்களை நமக்காய் பெற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறது. நாம் அதிகமாய் அந்நிய பாஷையிலே ஜெபிக்க வேண்டும். இது தேவன் நமக்கு நியமித்திருக்கிற நித்திய நோக்கங்களில் நாம் நடக்கவும், தேவன் நமக்கு வாக்குப்பண்ணினவைகளை நாம் பெற்றுக்கொள்ளவும், தேவன் நமக்கு கொடுத்த ஒரு ஈவு (Gift).

நம்முடைய பிராதான ஆசாரியராகிய இயேசு கிறிஸ்து, நம் மூலமாக (பரிசுத்த ஆவியானவரால் அந்நிய பாஷையில்) வேண்டிகொள்ளும்போது, அது பிதாவாகிய தேவனால் பதிலளிக்கப்படுகிறது.

இதைக்குறித்து பரிசுத்த வேதத்தில் பழைய ஏற்பாட்டில், இப்படியாக சொல்லப்பட்டிருக்கிறது:

பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல்; இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள். (ஏசாயா 28:11-12)

இதுவே புதிய ஏற்பாட்டில்,

மறுபாஷைக்காரராலும், மறுஉதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்; ஆகிலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே. (1 கொரிந்தியர் 14:21)


ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அப்.பேதுருவை சாத்தான் மேற்கொண்டு விடாதபடி ஜெபித்தார் :

பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார். (லூக்கா 22:31-32)

நமக்காக நம்முடைய பிராதான ஆசாரியராகிய இயேசு கிறிஸ்து, நம் மூலமாக (பரிசுத்த ஆவியானவரால் அந்நிய பாஷையில்) வேண்டுதல் செய்ய வேண்டியதாயிருக்கிறது. அப்பொழுது, நம்மைக் குறித்த தேவ சித்தமும், திட்டங்களும் நிறைவேறும்.


நம்முடைய அறியாமையினிமித்தம், தேவன் நமக்கு அருளிய இந்த மிகப்பெரிய, வல்லமையான ஈவை (Gift) நாம் உதாசீனப்படுத்தினால், ஆவிக்குரிய வாழ்வில் நாம் ஒரு ஏழ்மையை உண்டாக்கி விடுவோம்.

பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல்; இதுவே ஆறுதல் ... (ஏசாயா 28:11-12)


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email