IST (GMT+5.5)

இந்த வார தியானம்

(Meditation for the Week)


ஆபிரகாமும் அந்நிய பாஷையும்


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று. (கலாத்தியர் 3:13-14)

நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் சுதந்திரம் (Spiritual Inheritance) ஆபிரகாமிற்கு தேவனால் வாக்கு பண்ணப்பட்ட கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கியது.

  1. பொருளாதார மற்றும் உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்கள் (Financial & Material)
  2. சத்துருக்களின், எதிரிகளின் மீது ஜெயம் (Victory over enemies)
  3. தேவனோடு மிக நெருங்கிய - ஒரு சிநேகிதனை போன்ற ஆழமான உறவு (A profound relationship with God a friend of God)
  4. கனி கொடுக்கும், கனிகள் நிறைந்த வாழ்க்கை (Fruitfulness)
  5. (நம்மைக் குறித்த தேவனுடைய) நித்திய நோக்கத்தை நிறைவேற்றுதல் (Fulfilled our destiny)
  6. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை சுதந்தரித்து கொள்ளுதல் (Promise to inherit the land)


அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். (கலாத்தியர் 3:6,9)

தேவனாகிய  கர்த்தர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இந்த ஆசீர்வாதங்கள் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்ட ஆபிரகாமின் சந்ததிக்கு  கொண்டு செல்ல ஒரு உடன்படிக்கையை ஆபிரகாமோடு செய்து வாக்கு பண்ணப்பட்ட தேசத்தை ஆபிரகாமின் சந்ததி அடையும்படியாகவும், தேவனுடைய நோக்கங்ககளை, வாக்குத்தத்தங்களை ஆபிரகாமின் சந்ததிக்கு கொண்டு சேர்க்கும்படியாகவும் (biologically) கர்த்தர் நியமித்த அவருடைய அடையாளமும், வழியும், அச்சாரமுமே ஆபிரகாமின் சரீரத்தில் செய்யப்பட்ட விருத்த சேதனம். இந்த விருத்தசேதனம் ஆபிரகாமை குறித்த கர்த்தருடைய நோக்கங்கள், வாக்குத்தத்தங்கள் நிறைவேற உதவியது.

அதுபோல, ஆவிக்குரிய பிரகாரமாக (Spiritually), கிறிஸ்து இயேசுவை சொந்த இரட்சகராக, கர்த்தராக விசுவாசித்து இரட்சிக்கப்பட்ட நம்மோடு தேவனாகிய கர்த்தர் உடன்படிக்கை செய்து, நம்மைக் குறித்த தேவனுடைய நோக்கங்கள், வாக்குத்தத்தங்கள் நிறைவேற தேவனாகிய கர்த்தர் நமக்கு,நம் வாழ்வில் கொடுத்த அடையாளமும் (Seal) அச்சாரமுமே (Earnest)  பரிசுத்த ஆவியானவர்.

நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். (எபேசியர் 1:13)

நமக்கு அடையாளமாய் கொடுக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரே நம்முடைய சுதந்திரத்தின் அச்சாரமாயிருக்கிறார். (The word (அச்சாரம்) earnest here is the Greek word  and it means a pledge, i.e. part of the purchase-money or property given in advance as security for the rest)

உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே. அவர் நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார். (2 கொரிந்தியர் 1:21-22)

 கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி - இது நம் இரட்சிப்பையும், அச்சாரத்தையும் - இது பரிசுத்த ஆவியானவரின் முத்திரையையும் குறிக்கிறது.

மேல்வீட்டறையில், சீஷர்கள் பெந்தேகொஸ்தே நாளன்று பெற்ற பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் சீஷர்களைக் குறித்த தேவ நோக்கங்களை, வாக்குத்தத்தங்களை சீஷர்கள் பூரணமாக  பெற்றுக்கொண்டு அவற்றிற்குள் பிரவேசிக்க உதவியது.

நாம் பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்தை பெற்றுக்கொள்ளும் போது, தேவனாகிய கர்த்தர் நம் வாயில் அருளும் ஒரு அடையாளம் அந்நிய பாஷை, இந்த அந்நிய பாஷையின் மூலமாக நம் வாயிலிருந்து புறப்படும் ஜீவன், நாம் நம்மைக்குறித்த தேவ நோக்கங்களுக்குள், வாக்குத்தத்தங்களுக்குள் நம்மை பிரவேசிக்க செய்கிறது.

ஆபிரகாமின் சரீரத்தில் தேவனால் கொடுக்கப்பட்ட தேவ உடன்படிக்கையின் அடையாளமாகிய விருத்த சேதனம் மூலமாக ஜீவன் புறப்பட்டு சென்றது. ஆவிக்குரிய ஜீவன் தேவனாகிய கர்த்தரால் நம் வாயில் அந்நிய பாஷை மூலமாக அருளப்பட்டிருக்கிறது.

அதையே வேதத்தில் அப்.பவுல் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்:

ஏனெனில், மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள். (பிலிப்பியர் 3:3)

அந்நிய பாஷையில் பேசும் போது நம் வாயிலிருந்து ஜீவன் வெளிப்படுகிறது, அது கர்த்தருடைய காரியங்களை பிறப்பிக்கிறது.

நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்தஆவிக்குள் ஜெபம்பண்ணி, (யூதா 1:20)

மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று. (கலாத்தியர் 3:13-14)


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email