IST (GMT+5.5)

இந்த வார தியானம்

(Meditation for the Week)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


எல்லா மனுஷருக்காகவும்


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

...எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும் (1 தீமோத்தேயு 2:1)

பரிசுத்த வேதத்தில் மேற்கண்ட வசனத்தில், நமக்கு சொல்லப்பட்டபடியே இது நம் மீது இருக்கும் மிக முக்கியமான கடமையாகும். நம் மீது? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக, உலக தோற்றத்திற்கு முன்னமே பிதாவாகிய தேவன் நம்மை தம் பிள்ளைகளாகும்படி தம்முடைய திருவுள சித்தத்தின்படி முன்குறித்து, நம்மை நேசிக்கும் தம்முடைய  மாறாத அன்பினால், தம் கிருபையினால்  தம் சொந்த குமாரனாகிய, மகனாகிய கிறிஸ்து இயேசுவின் பரிசுத்த இரத்தத்தையே விலையாய் கொடுத்து பிதாவாகிய தேவன் மீட்டுக் கொண்ட நம் மீது, இருளின் அதிகாரத்திலிருந்து தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு பிதாவாகிய தேவன் மீட்டுக்கொண்ட நம் மீது, பாவ அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி தம்முடைய இரட்சிப்பை அருளிச் செய்து தம்முடைய நித்திய ஜீவனுக்கு நேராக பிதாவாகிய தேவன் நடத்திக் கொண்டிருக்கும்  நம் மீது இருக்கும் மிக முக்கியமான கடமை எல்லா மனுஷருக்காகவும் நாம் வேண்டிக்கொள்வதாகும்.

கர்த்தரை அறியாத குடும்பத்தினர், நண்பர்கள், வேலை செய்யும் இடங்களில் சக ஊழியர்கள், நாம் குடியிருக்கும் இடங்களில் உள்ளவர்கள், இன்னும் முகமறியா எல்லா மனுஷருக்காகவும் வேண்டிக்கொள்வதாகும்.

அப்படியானால், எல்லா மனுஷருக்காகவும் என்னவென்று வேண்டிக்கொள்வது?

எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். (1 தீமோத்தேயு 2:4)

தேவ கிருபையினால், தேவ அன்பினால் நாம் இரட்சிக்கப்பட்டது போலவே, மற்ற எல்லோரும் இரட்சிக்கப்படவும், வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்கிற அறிவை  அடையவும் நாம் வேண்டிக்கொள்ள வேண்டும். அதோடு அவர்களுடைய நல் வாழ்விற்காகவும் ஜெபிக்க வேண்டும். இப்படி எல்லோரும் இரட்சிக்கப்படுவது என்பது பிதாவாகிய தேவனுடைய சித்தமாகவும் இருக்கிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்த காலமெல்லாம், பிதாவின் சித்தம் நிறைவேற்றுவது ஒன்றையே தம் நோக்கமாக கொண்டிருந்தார். அப்படியே செய்து முடித்தார். அவருடைய வழியில் நடக்கிற நமக்கும் அதுவே நம் வாழ்வின் நோக்கமாகும்.

தேவனுடைய பார்வையில், ஒரு மோசமான, துன்மார்க்கமான மனிதனின் சாவை கூட, அதாவது அவன் கடைசிவரை மனம்திரும்பி இரட்சிக்கப்படாமல், அதாவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஏற்ற ஒரு வாழ்க்கை வாழாமல் இறந்து, கர்த்தருடைய நியாத்தீர்ப்புக்கு பின் நரக அக்கினியில் தள்ளப்படுவதை தேவனாகிய கர்த்தர் விரும்பவில்லை என்றே பரிசுத்த வேத வசனம் கூறுகிறது.

துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். (எசேக்கியல் 18:23)

மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். (எசேக்கியல் 18:32)

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோவான் 3:16)

உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.(யோவான் 3:17)

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை தாமதித்தால், அதற்கான காரணம் கூட,

தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். (2 பேதுரு 3:9)

இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல. (மத்தேயு 18:14)

எனவே நாம் எல்லா மனுஷருக்காவும் விண்ணப்பங்களையும் (supplications), ஜெபங்களையும் (prayers), வேண்டுதல்களையும் (intercessions), ஸ்தோத்திரங்களையும் (thanks giving) செய்து பிதாவாகிய தேவனுடைய சித்தம் நிறைவேற்றி அவருக்கு பிரியமான பிள்ளைகளாயிருப்போம்.

நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. (1 தீமோத்தேயு 2:3)


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email