IST (GMT+5.5)

இந்த வார தியானம்Sharon Rose Ministries

(Meditation for the Week)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


வெறுமையாய் அனுப்பிவிடாமல்


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

அவனை விடுதலைபண்ணி அனுப்பிவிடும்போது அவனை வெறுமையாய் அனுப்பிவிடாமல், (உபாகமம் 15:13)

பரிசுத்த வேதத்தில், பழைய ஏற்பாட்டில் மேற்கண்ட வசனம்,  ஒரு எபிரேயனுக்கு விலைபட்டுப் போன ஒரு எபிரேய சகோதரனை ஏழாம் வருடத்தில் விடுதலை செய்து அனுப்பி விட வேண்டும் என்ற தேவ கட்டளையின்படி செய்யும் போது அதை எப்படி செய்ய வேண்டும் என்பதைக் குறித்து சொல்கிறது. இதை பற்றி உபாகமம் 15-ம்  அதிகாரத்தில் 1-15 வசனங்களில் விளக்கமாக அறிந்து கொள்ளமுடியும். தன்னிடத்தில் வேலை செய்து விடுதலையாகி போகிற தன் எபிரேய சகோதரனுக்கு தன்னை விட்டு சென்ற பின்பு அவன் நன்றாக வாழ்ந்து பிழைத்திருக்கும்படி அவனுக்கு உதவியாக மிருக ஜீவன்கள், ஆலையின் பொருட்கள், களத்தின் விளை பொருட்கள் என தாராளமாய் கொடுத்து அனுப்ப தேவனாகிய கர்த்தர் மிகுந்த மனதுருக்கத்தோடு இந்த கட்டளையை கொடுக்கிறார்.

அவனை விடுதலைபண்ணி அனுப்பிவிடும்போது அவனை வெறுமையாய் அனுப்பிவிடாமல்,உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததின்படி, உன் ஆட்டுமந்தையிலும் உன் களத்திலும் உன் ஆலையிலும் எடுத்து அவனுக்குத் தாராளமாய்க் கொடுத்து அனுப்பிவிடுவாயாக. (உபாகமம் 15:13-14)

நியமிக்கப்பட்ட வருடங்கள் எல்லாம் வேலை செய்து, விடுதலையாகி போகும்போது தேவனாகிய கர்த்தர் வெறுங்கையாய் அனுப்பாமல் மிகுந்த அன்போடு மனதுருக்கத்தோடு பிழைத்திருந்து நன்றாய் வாழ்ந்திருக்க தேவையான அனைத்தையும் கொடுத்து அனுப்புகிறார்.

இதைப்போலவே, பரிசுத்த வேதத்தில் புதிய ஏற்பாட்டில் ஒரு சம்பவத்தை நாம் அறிந்து இருக்கிறோம். மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன் போதனைகளை கேட்க வந்த திரளான மக்கள் மூன்று நாளளவும் தன்னிடத்தில் தங்கியிருந்து தன் போதனைனகளை கேட்டு அவர்கள் வீடு திரும்பும் பொழுது அவர்களை பசியோடு அனுப்பிவிடாமல், அதே அன்போடு, மனதுருக்கத்தோடு ஒரு அற்புதம் செய்து அவர்களை பசியாற்றி அனுப்புகிறதை நாம் பரிசுத்த வேதத்தில் (மாற்கு 8:1-9) காணலாம்.

அந்த நாட்களிலே திரளான ஜனங்கள் கூடிவந்திருக்கையில், அவர்கள் சாப்பிடுகிறதற்கு ஒன்றுமில்லாதபோது, இயேசு தம்முடைய சீஷரை அழைத்து: ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் இப்பொழுது என்னிடத்தில் தங்கியிருந்த மூன்றுநாளாய்ச் சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள். இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்தவர்களாகையால், நான் இவர்களைப் பட்டினியாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் சோர்ந்துபோவார்களே என்றார். (மாற்கு 8:1-3)

இறுதியாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலக வாழ்வு முழுவதும் மேற்கண்ட அற்புதங்கள், நன்மைகள் போல எவ்வளவோ எண்ணிலடங்கா நன்மைகளை நமக்குத் தந்து, அற்புத அதிசயங்கள் செய்து அதே அன்போடு மனதுருக்கத்தோடு நம்மை தம் பிள்ளைகளாக்கினவர், அப்படியே முடிவு பரியந்தம் நாம் வாழ எதிர்பார்க்கிறார். அப்படியே நாம் வாழும்போது, இந்த உலக வாழ்வின் முடிவிலும் அவர் நம்மை வெறுமையாய் அல்ல, மிகுந்த பலன்களை நமக்கு தந்து பரலோகத்தில் என்றென்றும் தம்மோடு வாழும்படி கிருபை செய்கிறார். பரிசுத்த வேதத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே மொழிந்த வார்த்தைகள் (மத்தேயு 25:31-46) இதை நமக்கு சொல்கிறது.

அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான். (மத்தேயு 25:21)

அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். (மத்தேயு 25:34)

அந்தப்படி, ... நீதிமான்களோ நித்தியஜீவனை அடையவும் போவார்கள் என்றார். (மத்தேயு 25:46)

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. (வெளிப்படுத்தின விசேஷம் 22:12)

ஆகவே, ஆண்டவர் கிருபையாய் தந்திருக்கும் இந்த வாழ்வின் மீதமிருக்கும் நாட்களை கர்த்தராகிய இயேசுவின் பிள்ளைகளாய் வாழ அவரிடமே நம்மை, நம் வாழ்வை ஒப்புக்கொடுத்து வாழ்வோம்.

அதி சீக்கிரமாய் வரப்போகும் ஆண்டவர் இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம். பரிசுத்த ஆவியானவர் தாமே நமக்கு உதவி செய்வாராக. ஆமென்.


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email