IST (GMT+5.5)

இந்த வார தியானம்Sharon Rose Ministries

(Meditation for the Week)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


ஓய்வு நாள் (The Day of Rest)


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம். (யாத்திராகமம் 20:10)

வானத்தையும் பூமியையும் தம் வார்த்தையினால் சிருஷ்டித்த தேவனாகிய கர்த்தர், ஆறு நாட்களில் தம் சிருஷ்டிப்பு அனைத்தையும் முடித்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார் என்று பரிசுத்த வேத வசனங்கள் நமக்கு விளக்கிச் சொல்கிறது:

கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். (யாத்திராகமம் 20:11)

தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். (ஆதியாகமம் 2:2-3)

அப்படி கர்த்தர் தாமே ஓய்ந்திருந்து நமக்கு ஆசீர்வாதமாக்கி, பரிசுத்தமாக்கித் தந்த ஓய்வு நாளைக் குறித்து தேவனாகிய கர்த்தரின் கட்டளை என்ன? நாம் செய்ய வேண்டியது என்ன?

ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; (யாத்திராகமம் 20:8)
Remember the sabbath day, to keep it holy. (Exodus 20:8)

நீங்கள் ஆறுநாள் வேலைசெய்யவேண்டும், ஏழாம் நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாய் இருப்பதாக; அது கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; ... (யாத்திராகமம் 35:2)

என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படிக்கு அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும் என்றேன். (எசேக்கியல் 20:20)

மேற்கண்ட பரிசுத்த வேத வசனமாகிய தேவனாகிய கர்த்தரின் இந்த கட்டளை (பத்துக் கட்டளைகளில் இது நான்காவது கட்டளை) திட்டமும் தெளிவுமாக நமக்கு போதிப்பது எல்லாம் நாம் ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும் என்பதே. அதாவது, முதலாவது ஓய்ந்து இருக்க வேண்டும், இரண்டாவது பரிசுத்தமாய் ஆசரிக்க வேண்டும். அது மட்டுமல்ல, சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரே நம்முடைய தேவன், தெய்வம் என்பதை நாம் அறியும்படிக்கு  தேவனாகிய கர்த்தருக்கும் நமக்கும் அடையாளமாகவும் இருக்கிறது.

ஓய்ந்து இருத்தல் மற்றும் பரிசுத்தமாய் ஆசாரித்தல் என்றால்?

என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால், அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று. (ஏசாயா 58:13-14)

வாரத்தின் ஆறு  நாட்களும் நம்முடைய தேவைகளுக்காக, மற்றவர்களுக்காக, மற்ற காரியங்களுக்காக வேலை செய்கிறோம் நேரத்தை செலவு செய்கிறோம். ஆனால், பரிசுத்த ஓய்வு நாளில் கர்த்தரின் பாதத்தில் காத்திருந்து அவருடனான அந்த அன்பின் உறவில் பலப்பட, அவருடைய அன்பின் உறவின் ஆழங்களுக்குள் செல்ல ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோடு நம் நேரத்தை செலவிடுதல் ஆகும். மட்டுமல்ல ஆண்டவருடைய பணிகளுக்காகவும், அவருக்காய் செய்கிற ஊழியங்களுக்காகவும் நம் நேரத்தை செலவு செய்தல் ஆகும்.

வேறொரு வார்த்தையில் சொன்னால் நம் ஆவி, ஆத்துமா மற்றும் உடல் என இம்மூன்றிலும் ஆண்டவர் இயேசுவுக்குள் மன மகிழ்ச்சியை, இளைப்பாறுதலை, பெலனை  பெற்றுக்கொள்வதாகும்.

கர்த்தர் நமக்கு நன்மை செய்ய, நம்மை தமக்குள் பலப்படுத்த, நம்மை ஆசீர்வதிக்க, நம்மை நேசிக்க, நம்மோடு உறவாட மற்றும் நாம் நம் சிருஷ்டிகராம் தேவனாகிய கர்த்தரை தொழுது கொள்ள நமக்கு ஏற்படுத்திக் கொடுத்த ஆசீர்வதிக்கப்பட்ட நாள் தான் பரிசுத்த ஓய்வு நாள். எனவே ஒவ்வொரு ஓய்வு நாளிலும் கர்த்தருக்குள் ஓய்ந்திருந்து இளைப்பாறி, பரிசுத்தமாய் ஆசரித்து நம் தேவனாகிய கர்த்தரின் கட்டளை நிறைவேற்றுவோம், அவரோடு உறவாடி அவர் தம் இருதயத்தை மகிழ்விப்போம்.

ஆண்டவர் இயேசு கிறிஸ்து தாமே இப்படியாக சொன்னார்:

பின்பு அவர்களை நோக்கி: மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது; (மாற்கு 2:27)


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email