IST (GMT+5.5)

இந்த வார தியானம்Sharon Rose Ministries

(Meditation for the Week)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


உலகரட்சகர் இயேசு


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

பிரயாணத்தினால் களைப்படைந்த ஆண்டவர் இயேசு, சமாரியா நாட்டில் ஒரு கிணற்றுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த போது, அங்கே கிணற்றில் தண்ணீர் மொள்ள வந்த சமாரியப் பெண்ணிடம் "தாகத்துக்கு தா" என்று கேட்ட போது அந்த பெண் ஆண்வரிடம் தொடர்ந்து உரையாடியதை அவளுடைய கேள்விகளுக்கு ஆண்டவர் அளித்த பதில்களை ( யோவான் 4:4-42) என்ற வேத பகுதியில் காணலாம். அதன் பிறகு, அந்த ஊர் மக்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை குறித்து அந்தப் பெண் மூலமாக அறிந்து  அவரைப் பற்றி சொன்ன சாட்சி தான் மேற்கண்ட பரிசுத்த வேத வசனம்.

அவர் ஒட்டு மொத்த உலகத்து மக்களுக்கும் இரட்சகர், மனுக்குலம் முழுவதுக்கும் பாவத்தை மன்னித்து நிவர்த்தியாக்கும், கல்வாரி சிலுவையில் பலியாய் தம்மை தாமே ஒப்புக்கொடுத்த, பரிசுத்த பலி.

பரிசுத்த வேதம் சொல்கிறது:

நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார். (1 யோவான் 2:2)

மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. (யோவான் 1:29)

உலகத்தின் ஒவ்வொரு மனிதனுடைய அத்தனை பாவங்களையும் மன்னித்து, அவனை பரிசுத்தமாக்கும் வல்லமையும் தகுதியும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்கு மட்டுமே உண்டு. ஏனென்றால், இரத்தம் சிந்தாமல் பாவம் மன்னிக்கப்படவே முடியாது. இதைத் தவிர வேறு எந்த வழியுமே இல்லை, எனவே தான் பரிசுத்த வேதம் இப்படி விளக்குகிறது:

...இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது. (எபிரெயர் 9:22)

அவருடைய (பிதாவாகிய தேவனுடைய) குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)

அப்படியானால், பாவம் மன்னிக்கப்பட நாம் என்ன செய்ய வேண்டும்: இயேசு கிறிஸ்து நமக்காய் கல்வாரி சிலுவையில் நம்முடைய பாவங்கள் எல்லாவற்றையும் சுமந்து நமக்காகத்தான் இரத்தம் சிந்தினார் என்பதை முழு மனதோடு நம்பி ஏற்றுக் கொண்டு விசுவாசிக்க வேண்டும். இதை அப்படியே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினிடத்தில் சொல்லி, அறிக்கை செய்து "என்னை மன்னியும்" என்று உள்ளத்தின் ஆழத்தில் இருந்து, மனதார வேண்டிகொண்டால் போதும். அளவில்லாத, என்றும் மாறாத, தூய அன்போடு நம்மை நேசிக்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை அப்படியே மன்னிப்பார். அத்தனை பாவங்களும், தலைமுறை தலைமுறையாய் செய்த, முன்னோர்கள் செய்த, அறிந்தும் அறியாமலும் செய்த அத்தனை பாவங்களும் மன்னிக்கப்பட்டு நம்மை விட்டகன்று போகும்.

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை (தண்டனை / நியாத்தீர்ப்பு) அவர்மேல் வந்தது;... (ஏசாயா 53:5)

நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; .... (1 பேதுரு 2:24)

அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை. (1 யோவான் 3:5)

நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார். (2 கொரிந்தியர் 5:21)

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; ... (1 தீமோத்தேயு 1:15)

அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை; (1 பேதுரு 2:22)

[குமாரனாகிய] அவருக்குள், (இயேசுவுக்குள்) அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. (கொலோசெயர் 1:14)

எனவே தான்,

பிதாவானவர் குமாரனை (இயேசு கிறிஸ்துவை) உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம். (1 யோவான் 4:14)


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email