IST (GMT+5.5)

இந்த வார தியானம்Sharon Rose Ministries

(Meditation for the Week)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


ஏழு ஏழு ஏழு


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு. (வெளிப்படுத்தின விசேஷம் 13:16-18)

இந்த பரிசுத்த வேத வசனங்கள், (சாத்தானின் மறு உருவமான) அந்தி கிறிஸ்துவின் 7 வருட ஆட்சியில், அவன் பூமியின் மனிதர்கள் எல்லோருக்கும் ஒரு முத்திரையை, அதாவது அந்தி கிறிஸ்துவின்

  • முத்திரையையோ (Mark of Antichrist) அல்லது
  • நாமத்தையோ / பெயரையோ (Name of antichrist) அல்லது
  • நாமத்தின் இலக்கத்தையோ / பெயருக்கு சமமான எண்கள் (Number of Name of Antichrist)

மனிதர்களின் நெற்றியில் அல்லது வலது கையில் தரித்துக் கொள்ளும்படி செய்வான். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காக, ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒருவரே  தங்கள் தெய்வம் என்று அறிக்கை செய்து அதற்காக தாங்கள் கொல்லப்படுவோம் என்று தெரிந்தாலும் கூட, சாத்தானின் முத்திரையை ஏற்றுக் கொள்ள மறுக்கிற உண்மையான கர்த்தருடைய பிள்ளைகள் அந்நாட்களில் எதையும் வாங்கவோ விற்கவோ முடியாது.

அந்திகிறிஸ்துவின் பெயருடைய எண் 666. ஆனால் இது வெளிப்படையாக கண் காண 666 என இருக்க முடியாது. ஏனென்றால், அது மறைமுகமாக இருக்கும் போது தான் ஞானமுள்ளவர்கள் அதை கணக்கிட்டு அறிந்து கொள்ள முடியும் என்று பரிசுத்த வேதம் எச்சரிக்கிறது. இதைக் குறித்து பரிசுத்த வேதத்தில் வெளிப்படுத்தின விஷேசம் 13,14 அதிகாரங்களில் நாம் வாசித்து அறிந்து கொள்ளலாம்.

இப்போது, ஆண்டவருடைய இரண்டாம் வருகைக்கு முன்பாக நடக்க இருக்கிற மூன்று முக்கிய காரியங்களை பற்றி சற்று சிந்தித்து பார்ப்போம், பரிசுத்த வேதம் சொல்லுகிறது:

  1. ஏழு முத்திரைகள் (Seven Seals)
  2. ஏழு எக்காளங்கள் (Seven Trumpets)
  3. ஏழு தேவனுடைய கோப கலசங்கள் (Seven Bowls of wrath of God)

இந்த மூன்று ஏழு காரியங்களும் என்னென்ன? இந்த மூன்று ஏழு காரியங்களும் நடக்கும்போது கர்த்தருடைய பிள்ளைகளுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தன் சொந்த தெய்வமாக ஏற்றுக் கொள்ள மறுத்து அந்தி கிறிஸ்துவை (சாத்தானை) தெய்வமாக ஏற்றுக் கொண்டவர்களுக்கும், நாம் வசிக்கும் பூமிக்கும், நாம் பார்க்கும் வானத்திற்கும் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பதை அறிந்து கொள்ள முறையே கீழ்க்கண்ட வேத பகுதிகளை வாசித்துப் பாருங்கள்:

  1. வெளிப்படுத்தின விசேஷம் 6 மற்றும் 8 -ம் அதிகாரங்கள் - Revelation, Chapter 6, 8
  2. வெளிப்படுத்தின விசேஷம் 8,9 மற்றும் 11 -ம் அதிகாரங்கள் - Revelation, Chapter 8,9,11
  3. வெளிப்படுத்தின விசேஷம் 16 -ம் அதிகாரம் - Revelation, Chapter 16

வெளிப்படுத்தின விசேஷம் 16:1-2 -ல் ஒரு காரியம் ஒரு குறிப்பாக கொடுக்கப்பட்டுள்ளது:

1. அப்பொழுது தேவாலயத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தம் அந்த ஏழு தூதருடனே: நீங்கள் போய் தேவனுடைய கோபகலசங்களைப் பூமியின்மேல் ஊற்றுங்கள் என்று சொல்லக்கேட்டேன். 2. முதலாம் தூதன் போய், தன் கலசத்திலுள்ளதைப் பூமியின்மேல் ஊற்றினான்; உடனே மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்களும் அதின் சொரூபத்தை வணங்குகிறவர்களுமாகிய மனுஷர்களுக்குப் பொல்லாத கொடிய புண்ணுண்டாயிற்று.

அதாவது, முதலாம் தேவ தூதன் தேவனுடைய கோப கலசத்தை பூமியில் ஊற்றும் போது, சாத்தானின் மறு உருவமான அந்தி கிறிஸ்துவின் ஆட்சி பூமியில் நடந்து கொண்டிருக்கும் என்பதும், அந்திகிறிஸ்துவின் முத்திரையை மனிதர்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்பதும், தேவ கோப கலசத்தின் விளைவாக அந்திகிறிஸ்துவின் முத்திரையை ஏற்றுக் கொண்டவர்கள் தேவ கோபத்தை தங்களிலும், தாங்கள் வசிக்கும் பூமியிலும் அனுபவிப்பார்கள் என்பதும் விளங்குகிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எதிர்பார்க்கும் பரிசுத்த அலங்காரத்தோடு இருக்கும் கர்த்தருடைய பிள்ளைகள், அதாவது கர்த்தருடைய சபையாகிய மணவாட்டி அந்திகிறிஸ்துவின் முதல் மூன்றரை வருட உபத்திரவ காலத்தில் (Tribulation Period) பல்வேறு உபத்திரவங்களுக்கு உட்படுத்தப்பட்டாலும் (வெளிப்படுத்தின விசேஷம் 12:12-17) , ஏழு தேவ கோப கலசங்கள் பூமியில் ஊற்றப்படுவதற்கு முன் அதாவது அந்திகிறிஸ்துவின் இரண்டாவது  மூன்றரை வருட மகா உபத்திரவ காலத்திற்கு (Great Tribulation Period) முன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையில் (Secret Coming / Rapture) எடுத்துகொள்ளப்பட்டு என்றென்றும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு பரலோகத்தில் மகிழ்ந்திருப்பார்கள்.

கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை.ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள். (1 தெசலோனிக்கேயர் 4:15-18)


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email