IST (GMT+5.5)

இந்த வார தியானம்Sharon Rose Ministries

(Meditation for the Week)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


இரவும் பகலும்


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு; நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு உபதேசிப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார். மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான். (யாத்திராகமம் 24:12,18)

தேவனாகிய கர்த்தர் தம்முடைய அன்பு தாசனும், ஊழியக்காரனுமாகிய மோசேக்கு கட்டளை கொடுத்த போது, தேவ கட்டளையின் படியே மோசே இரவும் பகலும் நாற்பது நாள்  மலையின் கொடுமுடியில் தேவனோடு முகமுகமாய் சஞ்சரித்து தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட தேவ கட்டளைகளை, பத்து கற்பனைகளை பெற்று வந்து இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்தார். இதையே மேற்கண்ட பரிசுத்த வேத வசனங்கள் தெரிவிக்கிறது.

அந்த பத்து கட்டளைகள்:

  1. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். (யாத்திராகமம் 20:3)
  2. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; (யாத்திராகமம் 20:4,5)
  3. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார். (யாத்திராகமம் 20:7)
  4. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; (யாத்திராகமம் 20:8)
  5. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக. (யாத்திராகமம் 20:12)
  6. கொலை செய்யாதிருப்பாயாக. (யாத்திராகமம் 20:13)
  7. விபசாரம் செய்யாதிருப்பாயாக. (யாத்திராகமம் 20:14)
  8. களவு செய்யாதிருப்பாயாக. (யாத்திராகமம் 20:15)
  9. பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக. (யாத்திராகமம் 20:16)
  10. பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார். (யாத்திராகமம் 20:17)

அதன் பின்பு, மனிதனாக, இரத்தமும் சதையுமான உடலோடு வெளிப்பட்ட தேவனாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்து, தாம் பாவமில்லாமல் பிறந்து, வாழ்ந்து பழுதற்ற பலியாய் தன்னை சிலுவையில் ஒப்புக்கொடுக்கும் வரை எல்லா தேவ கட்டளைகளையும், கற்பனைகளையும் கடைப்பிடித்து வாழ்ந்து அதை முழுமையாய் நிறைவேற்றின ஒரே மனிதனாக வாழ்ந்தார். மட்டுமல்ல, இந்த பத்து கட்டளைகளையும் இரண்டே கட்டளைகளாக, பிரமாணங்களாக நமக்கு கொடுத்து அதை நாம் கடைப்பிடித்து வாழ்ந்தாலே மேற்சொன்ன பத்து கட்டளைகளையும் நாம் நிறைவேற்றுகிறவர்களாய் இருப்போம் என்று உரைத்தார்.

அவர்களில் நியாயசாஸ்திரி ஒருவன் அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான். இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார். (மத்தேயு 22:35-40)

இப்படி போதித்து மனுஷகுமாரனாய் இந்த பூமிக்கு வந்த தேவ குமாரன் இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் இறந்து மூன்று நாள் இரவும் பகலும் பூமியின் இருதயத்தில் இருப்பார் என்பதை அவரே இப்படி உரைத்தார்:

யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். (மத்தேயு 12:40)

ஒருவேளை, ஒரே மெய்தேவனாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இந்த கட்டளைகளை நாம் கைக்கொண்டு வாழாமல், இந்த உலகத்தின் மாயைகளுக்கும், சிற்றின்பங்களுக்கும் பின் சென்று, ஆண்டவருடைய இரட்சிப்பை ஏற்றுக் கொள்ளாமல் அல்லது நாம் பெற்ற இரட்சிப்பை இழந்து போனால், சீக்கிரத்தில் வெளிப்படப்போகிற அந்திக்கிறிஸ்துவின் (சாத்தானின் மறு உருவம் - AntiChrist) வஞ்சகத்தில் விழுந்து, அவனுடைய முத்திரையை ஏற்றுக்கொண்டுவிட்டால், அதன் பிறகு இரட்சிப்பு என்பதோ, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோடு என்றென்றும் பரலோக வாழ்வு என்பதோ என்றென்றும் இல்லாமல் போகும். அப்படியானால், வேறு என்ன நடக்கும்? பரிசுத்த வேதம் இப்படி சொல்கிறது:

அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ, அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான். அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது. (வெளிப்படுத்தின விசேஷம் 14:9-11)


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email