IST (GMT+5.5)

இந்த வார தியானம்Sharon Rose Ministries

(Meditation for the Week)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


அன்புகூர்ந்தபடியினால்


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். (ஆதியாகமம் 3:17)

தேவனாகிய கர்த்தர் முதல் மனிதன் ஆதாமை படைத்து அவனுக்கு ஒரு கட்டளையை - அதாவது நன்மை தீமை இன்னதென்று அறிந்து கொள்ளத்தக்க ஒரு மரத்தின் கனியை சாப்பிட வேண்டாம் என்ற ஒரு கட்டளையை தந்த பின்பு, தேவனாகிய கர்த்தர் முதல் மனிதன் ஆதாமுக்கு ஏற்ற துணையாக ஏவாளை படைத்து அவர்கள் ஏதேன் தோட்டத்தில் இருந்த பொழுது, பழைய பாம்பாகிய சாத்தானாலே வஞ்சிக்கப்பட்டு அவன் வார்த்தையை கேட்டு, தேவனாகிய கர்த்தரின் கட்டளையை மீறி, கீழ்படியாமை என்னும் பாவத்தை செய்த போது தேவனாகிய கர்த்தர் சொன்ன வார்த்தையே மேற்கண்ட பரிசுத்த வேத வசனம். நீங்கள் கவனமாய் வாசித்துப் பார்த்தால், மனிதன் வாழ பூமியை சிருஷ்டித்து, அதில் மனிதனையும் படைத்து அவன் தன் கட்டளைக்கு கீழ்படியாமல் போன போது தேவனாகிய கர்த்தர் தான் படைத்த மனிதனிடத்தில் மிகுந்த அன்பு கூர்ந்தபடியினாலே, அவன் செய்த பாவத்தினால் அவனல்ல, இந்த பூமி சபிக்கப்பட்டிருக்கும் என்றார்.

உன் தேவனாகிய கர்த்தர் பிலேயாமுக்குச் செவிகொடுக்கச் சித்தமில்லாமல், உன் தேவனாகிய கர்த்தர் உன்மேல் அன்புகூர்ந்தபடியினால், உன் தேவனாகிய கர்த்தர் அந்தச் சாபத்தை உனக்கு ஆசீர்வாதமாக மாறப்பண்ணினார். (உபாகமம் 23:5)

இப்பொழுது மேற்காணும் இந்த பரிசுத்த வேத வசனம் வேறொரு காரியத்தைக் குறித்து நமக்கு தெரிவிக்கிறது. கர்த்தர் தமக்கென தெரிந்து கொண்ட ஜனமாகிய இஸ்ரவேல் மக்களை நேரடியாக யுத்தத்தில் வெல்ல முடியாத காரணத்தினால் அவர்களை  சபித்தால் ஒருவேளை அவர்களை வெல்ல முடியும் என்று எண்ணி அவர்களை சபிக்க பாலாக் என்னும் ஒரு அரசன் பிலேயாம் என்பவனை  குறிசொல்லுதலுக்குரிய கூலி கொடுத்து அழைத்து வந்து இஸ்ரவேல் மக்களை சபிக்க சொன்ன போது நடந்தது என்ன, தேவனாகிய கர்த்தர் என்ன செய்தார் என்பதையே இந்த பரிசுத்த வேத வசனம் சொல்கிறது. தேவனாகிய கர்த்தர் தம் மக்களின் மீது மிகுந்த அன்புகூர்ந்தபடியினால் சாபத்தை அவர்களுக்கு ஆசீர்வாதமாக மாறப்பண்ணினார்.

ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். (எபிரெயர் 2:14,15)

இந்த பரிசுத்த வேத வசனத்தில், காணக்கூடாத, சர்வல்லமையுள்ள, மகா பரிசுத்தரான தேவன், காணக்கூடியவராய் இயேசு என்னும் பெயரில் மனிதனாக இந்த பூமிக்கு வந்து மனுக்குலத்தின் பாவ சாபங்களை, நோய்கள், பாடுகள்  எல்லாம் சிலுவையில் தம் மீது சுமந்து தீர்த்து மரண பயத்திலிருந்து மனிதனை விடுதலையாக்கி, பிசாசை அழிக்க காரணமாய் இருந்ததும் தேவன் தான் படைத்த மனிதனிடத்தில் கொண்டிருந்த மிகுந்த அன்பு தான்.

இது போல இன்னும் பல காரியங்களை நாம் பரிசுத்த வேதத்தில் காண முடியும். அவை எல்லாவற்றிலும் நாம் காணும் ஒரே காரியம் தேவன் தாம் படைத்த மனிதனிடத்தில் கொண்டிருந்த அளவற்ற அன்பே.

அதானால் தான் பரிசுத்த வேத வசனங்கள் இப்படி சொல்கிறது:

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை (இயேசுவை) விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோவான் 3:16)

... ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; ...(1 யோவான் 4:7)

அவர் (இயேசு கிறிஸ்து) தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்... (1 யோவான் 3:16)

... தேவன் அன்பாகவே இருக்கிறார். (1 யோவான் 4:8)
...for God is love. (1 John 4:8)

 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை (இயேசு கிறிஸ்துவை) அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. (1 யோவான் 4:10)

எனவே,

தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார். (1 யோவான் 4:16)


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email