IST (GMT+5.5)

இந்த வார தியானம்Logo Tamil 253x253

(Meditation for the Week)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


வீணான தேவ பக்தி


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னைத் தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும். (யாக்கோபு 1:26)


நாவை அடக்காமல்:

நம் அவயவங்களில் ஒன்றான நம்முடைய நாவை குறித்து வேதம் பல உண்மைகளை நமக்கு விளக்கி கூறுகிறது. அவற்றுள் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது! (யாக்கோபு 3:6)

அவர்கள் தள்ளப்பட்டு, கீழேவிழும்படி அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்... (சங்கீதம் 64:8)

ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும். (நீதிமொழிகள் 15:4)

நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது.அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்;தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம். துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது. (யாக்கோபு 3:8-10)

கபடமுள்ள நாவே, சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய். (சங்கீதம் 52:4)

பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஔஷதம். (நீதிமொழிகள் 12:18)

மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். (நீதிமொழிகள் 18:21)

தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான். (நீதிமொழிகள் 21:23)

உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள். (சங்கீதம் 34:13)


எனவே தான் நாவடக்கம் தேவனுக்கு ஏற்ற பக்திக்கு தேவையான ஒன்றாக இருக்கிறது.


தன் இருதயத்தை வஞ்சித்து:

தேவனாகிய கர்த்தர் தந்திருக்கிற மனசாட்சிக்கு தெரிந்துமே கூட, செய்கிற தவறுகளை, பாவங்களை, அக்கிரமங்களை  குறித்து உணர்வில்லாமல் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளுதலே தன் இருதயத்தை வஞ்சித்தல் என்பது. மட்டுமல்ல,

அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள். (யாக்கோபு 1:22)


... வஞ்சிக்கப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்: என் வலது கையிலே அபத்தம் அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான். (ஏசாயா 44:20)

அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. (ரோமர் 1:21)


தன்னை தேவ பக்தியுள்ளவனென்று எண்ணினால் அப்படிப்பட்ட பக்தி வீணாயிருக்கும்.


அப்படியானால், தேவ பக்தி என்றால் என்ன? கர்த்தருடைய பரிசுத்த வேதம் சொல்கிறது:

அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார். (1 தீமோத்தேயு 3:16)

உலக சிற்றின்பங்கள், உலக இச்சைகள், உலக ஆசைகள் மற்றும் உலக நோக்கங்கள் என ஒட்டு மொத்த வாழ்க்கையே உலகத்தையே சுற்றி அமைந்து, அதற்காகவே எல்லாவற்றையும் செய்து, உலகத்தையே அல்லது உலக வாழ்க்கையையே குறிக்கோளாக கொண்டிருந்தால், சந்தேகமே இல்லாமல், நாம் உலகத்தால் கறைபட்டவர்களாய் இருப்போம். பரிசுத்த வேதத்திலே கர்த்தருடைய வசனம் இப்படியாக சொல்கிறது :

உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். (1 யோவான் 2:15-17)

மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளை எல்லாம்வெறுத்து ஒதுக்கி,  கைவிடப்பட்டவர்களையும், ஆதரவற்றவர்களையும், உதவி தேடி தவிக்கிறவர்களையும் ஆதரித்து நம்மால் ஆன எல்லா உதவிகளையும் அவர்களுக்கு செய்து,  மேற்கண்ட வசனத்தின் படி உலக கறைகளுக்கு நம்மை காத்து கொண்டு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே எல்லாவற்றிக்கும் மேலாக முதன்மையாக முன்னிறுத்தி (1 தீமோத்தேயு 3:16), அவரது சித்தம் நிறைவேற்றுவதே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.

திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது. (யாக்கோபு 1:27)

(தேவ பக்தியின் வேஷத்தைக் குறித்து சில வாரங்களுக்கு முந்தின தியானத்தை இங்கே காணலாம்.)


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email