IST (GMT+5.5)

இந்த வார தியானம்Logo Tamil 253x253

(Meditation for the Week)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


கர்த்தருடைய சிட்சை


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே. (எபிரெயர் 12:5)

(சிட்சை என்பது கண்டித்து, தண்டித்து போதித்தல் அல்லது உணர்த்துதல் (chastening of the LORD: 1. tutorage, i.e. education or training, 2. (by implication) disciplinary correction)

கர்த்தருடைய சிட்சையின் நோக்கங்கள் என்ன?

தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார். (நீதிமொழிகள் 3:12)

நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம். (1 கொரிந்தியர் 11:32)

தேவனாகிய கர்த்தர் தம் பிள்ளைகளாகிய நம்மை சிட்சிக்கும் போது நாம் செய்ய வேண்டியது என்ன? தேவனுக்கு விரோதமான, தேவனுடையதல்லாத, கர்த்தர் நமக்கு சுட்டிக்காட்டும்  நம்முடைய  தீய வழிகளை, தீய காரியங்களை  விட்டு நாம் மனம்திரும்ப வேண்டும் என்றே கர்த்தர் சொல்கிறார். மட்டுமல்ல, மேற்கண்ட பரிசுத்த வேத வசனம் சொல்கிறது, கர்த்தாராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு பின் உலக மனிதர்கள் நியாயந்தீர்க்கப்படும்போது,  நாம் செய்த தேவனுக்கு விரோதமான காரியங்களுக்காக அவர்களோடு சேர்ந்து நாம் தண்டிக்கபட்டு என்றென்றைக்குமாக நரக அக்கினியில் தள்ளப்பட்டு போகாதபடிக்கு, அதற்கு முன்னதாக இப்பொழுதே நாம் நம்மை திருத்திக் கொள்ள, மனந்திரும்ப ஒரு வாய்ப்பாக  நம்மை சிட்சிக்கிறார்.

நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.  (வெளிப்படுத்தின விசேஷம் 3:19)

உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? அவன் தன் பாவத்துக்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?,நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம். (புலம்பல் 3:39-41)

தேவ சிட்சையின் ஆழமான நிலையை பரிசுத்த வேதத்தின் இந்த வசனம் விளக்குகிறது.

கர்த்தாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும், நீர் தீங்குநாட்களில் அமர்ந்திருக்கப்பண்ணி, சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான். (சங்கீதம் 94:12-13)

சில நேரங்களில், நாம் தவறு செய்யாதிருக்கும் போதும், தேவ சிட்சையை எதிர்கொள்ள நேரும்போது, அது நம்மைக் குறித்த ஆண்டவருடைய உன்னத நோக்கங்களை கொண்டிருக்கும். நமக்கு எதிராக போராடும் பிசாசின் கிரியைகள், நம் பாவ போராட்டங்கள் அழிக்கப்படுதல், நம்மை இன்னும் ஆண்டவருக்கு அருகே கொண்டு செல்லுதல், உன்னத வேத சத்தியங்களை நமக்கு போதித்து ஆவிக்குரிய வாழ்வில் இன்னும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லுதல், எல்லாவற்றிகும் மேலாக கிறிஸ்துவின் வளர்ச்சிக்குத் தக்க பூரண வளர்ச்சிக்கு (எபேசியர் 4:11) நேராக நம்மை நடத்துதல், ஊழிய பாதையில் போரடிக்க புதிதும், கூர்மையுமான பற்களுள்ள ஒரு எந்திரமாக்கி (ஏசாயா 41:15) முழுமையாய் தேவ சித்தத்தின் படி நம்மை நடக்க செய்தல் போன்றவை அந்த உன்னத நோக்கங்களில் சில. உண்மையில் கர்த்தருடைய சிட்சையை அனுபவிக்கும் அந்த நேரத்தில் நாம் புலம்பித் தவித்தாலும் அதன் முடிவில் நம் ஆண்டவருக்கு நன்றி செலுத்தவே நம் இருதயம் தவிக்கும். கர்த்தருடைய சிட்சை அவ்வளவு உன்னதமானது, நன்மையானது. எனவே, கர்த்தருடைய சிட்சையை நாம் அற்பமாக எண்ணாமல், முறுமுறுக்காமல் மாறாக அந்த நேரத்திற்கான ஆண்டவருடையை கிருபைகளையும், வல்லமையையும், அவருடைய பெலத்தையும் சார்ந்து கொள்ளும் போது, கீழ்கண்ட பரிசுத்த வேத வசனங்கள் நமக்கு உண்மையாகும்.

நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன். (சங்கீதம் 119:67)

அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும். (எபிரெயர் 12:9-11)


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email