IST (GMT+5.5)

இந்த வார தியானம்Sharon Rose Ministries

(Meditation for the Week)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


எழுபது, எண்பது, என்றென்றும்


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கிரமாய்க் கடந்துபோகிறது, நாங்களும் பறந்துபோகிறோம். (சங்கீதம் 90:10)

நம்முடைய ஆயுசு நாட்களைக் குறித்து பரிசுத்த வேதம் மேற்கண்டபடி கூறுகிறது. அதோடு இன்னும் சில வேத வசனங்களையும் நாம் பார்ப்போம்.

நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்; பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது. (யோபு 8:9)

மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது; வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான். காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று; அது இருந்த இடமும் இனி அதை அறியாது. (சங்கீதம் 103:15-16)

மனுஷன் மாயைக்கு ஒப்பாயிருக்கிறான்; அவன் நாட்கள் கடந்துபோகிற நிழலுக்குச் சமானம். (சங்கீதம் 144:4)

மேற்கண்ட வசனங்களெல்லாம் ஒரு உண்மையைத் தெளிவாக கூறுகிறது. இந்த பூமியில், இரத்தமும் சதையும் கொண்ட இந்த உடலுக்குள் மனித வாழ்வு அல்லது ஆயுசு நாட்கள் மிகக் குறுகினதும் ,மாயையுமாயிருக்கிறது. அதாவது, நிலையானதோ, நிரந்திரமானதோ அல்ல. நித்திய வாழ்வை நோக்கிச் செல்லும் ஒரு சிறு பகுதியே இந்த எழுபது அல்லது எண்பது வருடங்கள். (A tiny episode of seventy or eighty years towards eternal life).

ஆனால், இரத்தமும் சதையும் கொண்ட இந்த உடலுக்குள் மனித வாழ்வு அல்லது இரத்தமும் சதையுமான இந்த உடலுக்குத்தான் இந்த நிலையே தவிர உள்ளான மனிதன் என்று வேதம் குறிப்பிடும் ஆவி, ஆன்மா என இந்த இரண்டுக்கும் நிலையான, என்றென்றும் வாழக்கூடிய நிரந்திர வாழ்வு அதாவது நித்தியமான ஜீவன் உண்டு.

இந்தச் சூழ்நிலையில், நம்முடைய நோக்கமெல்லாம் வெறும் இந்த உலக வாழ்க்கை மட்டுமே அல்ல. இதைப் பரிசுத்த வேதம் இப்படியாக சொல்கிறது:

நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். (கொலோசெயர் 3:1-2)

கீழான பாதாளத்தை விட்டு விலகும்படி, விவேகிக்கு ஜீவவழியானது உன்னதத்தை நோக்கும் வழியாம். (நீதிமொழிகள் 15:24)

அப்படியானால், இந்த உலக வாழ்க்கையின் நோக்கம் என்ன? நாம் இங்கு வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன, பலன் என்ன?

இந்த உலக வாழ்க்கை நம்மை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் போல் நம்மை உருவாக்கும், கிறிஸ்து இயேசுவை நமக்குள் உருவாக்கி பெருக செய்யும் ஒரு போர் பயிற்சிக்களம். இதில்  நமக்கு பொதுவான எதிரி சாத்தான். நாம் செய்யக்கூடாதது பாவம். பெற வேண்டியது ஜெயம் அல்லது வேறு வார்த்தையில் சொன்னால், சாத்தானையும் பாவத்தையும் மேற்கொள்வது. பரிசுத்த வேதத்தில் கீழ்க்கண்ட வசனங்கள் இதை விளக்குகிறது.

மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் (இயேசு கிறிஸ்துவை) பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும்வரைக்கும், (எபேசியர் 4:11)

நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார். (எபேசியர் 4:14-15)

நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். (பிலிப்பியர் 3:20)

நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம். (எபிரெயர் 13:14)

நாம் இந்த பூமிக்கு வரும் முன்பே தேவனால் நாம் அறியப்பட்டிருந்தோம் என்று பரிசுத்த வேதம் சொல்கிறது:

நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார். (எரேமியா 1:5)

அப்படியானால், எங்கிருந்து வந்தோமோ அங்கேயே, அதாவது தேவனாகிய கர்த்தரிடத்திற்கே திரும்பி செல்ல வேண்டியதே நம்முடைய தலையாய நோக்கம் அல்லது நித்திய நோக்கமாகும். அதை தீர்மானிப்பது இந்த உலக வாழ்க்கையில் நாம் வாழும் வாழ்கையே. அதாவது கர்த்தருக்கு பிரியமாய் வாழும் போது என்றென்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் வாழும் பேரின்ப வாழ்க்கை, ஆனந்தமும் சொல்லிமுடியாத மகிழ்ச்சியுமான வாழ்க்கை.

நாம் அவபக்தியையும் லௌகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி, நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது. (தீத்து 2:12-13)

ஒருவேளை, அப்படி வாழாதே போனால், என்றென்றுமான வாழ்வு ... நரகத்தில். ஏனென்றால், கர்த்தரோடு பரலோகமோ அல்லது சாத்தானோடு நரகமோ அது இந்த உலகத்தில் நாம் வாழும் வாழ்க்கையின் பலனே. எனவே தான் பரிசுத்த வேதத்தில் கர்த்தராகிய இயேசு சொல்கிறார்:

... நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். (வெளிப்படுத்தின விசேஷம் 22:11)

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. (வெளிப்படுத்தின விசேஷம் 22:12)


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email