- Category: Messages - 2016
- Hits: 5166
பரலோகத்திலிருந்து இறங்கினவர்
தேவ செய்தி - மார்ச் 2016 (Message - Mar 2016)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. (யோவான் 3:13)
பரலோகத்திலிருந்து எதற்காக தேவ குமாரனாம் இயேசு கிறிஸ்து இறங்கி வந்தார்? அவரே சொல்கிறார்:
என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன். (யோவான் 6:38)
தேவ குமாரனாம் இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்ததின் ஒரே நோக்கம் பிதாவாகிய தேவனுடைய சித்தம் நிறைவேற்றவே.
அப்படியானால் பிதாவின் சித்தம் என்ன ? அவர் விருப்பம் என்ன? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே சொன்ன பதில்:
அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது. குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார். (யோவான் 6:39-40)
இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல. (மத்தேயு 18:14)
அப்படியானால், பிதாவாகிய தேவனுடைய ஒரே பேரான சொந்தக் குமாரன், பிள்ளை, பரலோகத்திலிருந்து இறங்கின இயேசு கிறிஸ்து. பிதாவின் சித்தத்தை எப்படி நிறைவேற்றினார், தம்மை என்னென்ன காரணங்களுக்காக அல்லது எப்படியெல்லாம் ஒப்புக்கொடுத்தார்? கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்கள் மூலமாக அவற்றில் சிலவற்றை பார்ப்போம்:
1) முதல் மனிதன் ஆதாம் பாவம் செய்ததினால், தன்னை படைத்த தேவனோடு இருந்த அன்பின் உறவை முழு மனுக்குலமும் இழந்து விட, தம் இரத்தத்தினாலே அந்த உறவை மீண்டும் ஏற்படுத்தி பிதாவாகிய தேவனோடு மனிதனை ஒப்புரவாக்கி அந்த அன்பின் உறவிலே நிலைநிறுத்த.
அவர் (இயேசு) சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. (கொலோசெயர் 1:20)
அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ... (2 கொரிந்தியர் 5:19)
2) முதல் மனிதன் பாவம் செய்ததினால் பிசாசின் கையில் இழந்துவிட்ட, சபிக்கப்பட்ட இந்தப் பொல்லாத உலகத்திலிருந்து மனுக்குலத்தை விடுவிக்க.
அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; (கலாத்தியர் 1:4)
3) மனுக்குலத்தை தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்யப் பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் தம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கும்படி, தம்மை ஒப்புக்கொடுத்தார்.
அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்யப் பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். (தீத்து 2:14)
4) மனுக்குலத்தை பாவத்திலிருந்து, பாவத்திற்கான நித்திய நரக தண்டனையிலிருந்து மீட்கும்படியாக தம் ஜீவனையே கொடுக்க தம்மை ஒப்புக்கொடுத்தார்.
அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். (மத்தேயு 20:28)
5) மனிதன் பாவம் செய்த போதெல்லாம் ஒரு மிருகத்தை கொன்று அதின் இரத்தத்தால் பாவம் பரிகரிக்கப்படுகிற பழைய ஏற்பாட்டை, உடன்படிக்கையை நீக்கி பாவ்மில்லாத தன் பரிசுத்த இரத்தத்தினால் புதிய ஏற்பாட்டை, உடன்படிக்கையை ஏற்படுத்த பழுதற்ற பலியாக (எபிரெயர் 9:14), கிருபாதார பலியாக (1 யோவான் 2:2) தம் இரத்தத்தை சிந்த ஒப்புக்கொடுத்தார்.
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. (மாற்கு 14:24)
6) மரணத்திற்கு அதிகாரியாகிய பிசாசை, தம் சிலுவை மரணத்தினாலே அழித்து, மனுக்குலத்தை மரண பயத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க, மனிதனைப் போலவே இரத்தமும் சதையும் உள்ளவராக இந்த உலகிற்கு வர ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னை ஒப்புக்கொடுத்தார்.
ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். (எபிரெயர் 2:14-15)
7) பிசாசின் அல்லது சாத்தானின் கிரியைகளை - அதாவது பாவம், சாபம், மனிதனின் மரணம் மற்றும் தேவன் மனிதனைப் படைத்த போது அவனுக்கு அளித்த சகல நன்மைகளை, ஆசீர்வாதங்களை, ஜெயத்தை, பூமி மற்றும் அதிலுள்ளவைகளை ஆளுகிற ஆளுகையை திருடுகிற, அழிக்கிற மற்றும் மனிதனின் ஆத்துமாவை கொல்லுகிறதான சாத்தானின் இந்தக் கிரியைகளையெல்லாம் அழிக்க ஆண்டவர் இயேசு கிறிஸ்து பரலோகத்திலிருந்து இறங்கி வந்தார்.
...ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான்; பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். (1 யோவான் 3:8)
இப்படியாக, பரலோகத்திலிருந்து இறங்கி வந்த பிதாவாகிய தேவனுடைய ஒரே பேரான சொந்தப் பிள்ளை இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக, மீட்பராக, கர்த்தராக விசுவாசிக்க மறுத்தால், மறுதலித்தால் அதன் விளைவு நினைத்துப் பார்க்க முடியாத மாபெரும் பயங்கரமாகவே இருக்கிறது, அது:
அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. (யோவான் 3:18)
குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். (யோவான் 3:36)
அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான். (யோவான் 5:22-23)
பிதாவாகிய தேவனை விசுவாசித்து, அவர் அனுப்பின அவருடைய ஒரே பேரான சொந்தப் பிள்ளை இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து தன் சொந்த இரட்சகராக, மீட்பராக, கர்த்தராக ஏற்றுக் கொண்டால்:
என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான் 5:24)