இன்றைய பரிசுத்த வேத வசனம்
தேவனுடைய வார்த்தையை பற்றிக்கொண்டு விசுவாசத்தோடு ஜெபித்து கிறிஸ்து இயேசுவுக்குள் ஜெயங்கொள்ளுவோம்.
உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள். (அப்போஸ்தலர் 3:20)You may check
Meditation on the Word of God...Food for your soul: Meditation >> Lets Meditate
கர்த்தருடைய பிரமாணம் நம் வெளிச்சம்
(புத்தாண்டு 2025 பரிசுத்த வேத தியானம்)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
ஜனவரி 2025
கிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமானவர்களே,
உங்களுக்கு அன்பின் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
என் ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; என் ஜாதியாரே, என் வாக்கைக் கவனியுங்கள்; வேதம் என்னிலிருந்து வெளிப்படும்; என் பிரமாணத்தை ஜனங்களின் வெளிச்சமாக ஸ்தாபிப்பேன். (ஏசாயா 51:4)
இந்த புத்தாண்டின் பரிசுத்த வேத தியானமாக நாம் மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்திலிருந்தே தியானிக்கப் போகிறோம்.
... வேதம் என்னிலிருந்து வெளிப்படும்; என் பிரமாணத்தை ஜனங்களின் வெளிச்சமாக ஸ்தாபிப்பேன். (ஏசாயா 51:4)
தேவனாகிய கர்த்தருடைய பிரமாணம் என்பது (1 இராஜாக்கள் 2:4)
அவருடைய கட்டளைகள் (His Statutes)
அவருடைய கற்பனைகள் (His Commandments)
அவருடைய நியாயங்கள் (His Judgments)
அவருடைய சாட்சிகள் (His Testimonies)
என இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய பரிசுத்த வேதம். இந்த பரிசுத்த வேதம் முழுவதையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இரண்டே கற்பனைகளாக (Commandments) நமக்கு கொடுத்து அதற்குள் பிரமாணம், தீர்க்கதரிசனங்கள் எல்லாம் அடங்கியிருக்கிறது என்று உரைத்தார். அந்த இரண்டு கற்பனைகள் :
(மத்தேயு 22:37- 40) இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.
இப்பொழுது, இந்த பரிசுத்த வேத தியானத்தின் ஆதார வசனத்தின்படி (ஏசாயா 51:4) அவருடைய பிரமாணமே நம் வெளிச்சம். அதாவது தேவன் உரைத்த பரிசுத்த வேதமே, தேவனுடைய வார்த்தையே நம் வெளிச்சம்.
இரண்டாவதாக, கிறிஸ்து இயேசுவே தேவனுடைய வார்த்தையாயிருக்கிறார். வேறு வார்த்தையில் சொல்வதானால், எழுதப்பட்ட இயேசு கிறிஸ்துவே பரிசுத்த வேதம். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே தேவனுடைய வார்த்தையாக, இரத்தமும் சதையுமாக நம்மை போல் ஒரு மனிதனாக இந்த உலகத்திலே வந்தார்.
(யோவான் 1:1) ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
(யோவான் 1:14) அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
(வெளிப்படுத்தின விசேஷம் 19:13) ... அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.
இந்நிலையில், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் இரட்சிக்கப்பட்டிருக்கிற கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கும், இனி இரட்சிக்கப்பட போகிறவர்கள் என அனைவருக்கும் இனி வரும் நாட்களில் பரிசுத்த வேத வெளிச்சத்தைக் கொண்டே இவ்வுலக வாழ்க்கையில் கர்த்தருக்கு பிரியமாய் நடந்து பிழைக்க முடியும்.
இது என்றைக்கும் உரிய பரிசுத்த வேத சத்தியமாக இருந்தாலும் இப்போது உள்ள காலத்தில் அதாவது கர்த்தருடைய வருகை மிக அருகில் வந்து விட்ட காலத்தில், இருள் பூமியையும் காரிருள் ஜனங்களையும் மூடிக்கொண்டிருக்கிற காலத்தில், மனிதன் தன் சுபாவ அன்பை இழந்துகொண்டிருக்கிற காலத்தில், கற்பனைக்கும் எட்டாத பாவ பழக்கவழக்கங்கள் திரளாய் பெருகி எங்கும் பரவிக்கொண்டிருக்கிற காலத்தில் - நம் ஒவ்வொருவருடைய சூழ்நிலையில் முன்னெப்போதையும் விட பரிசுத்த வேத வெளிச்சத்தின் தேவை, கட்டாயம் மிக அதிகம். அநேக உபத்திரவங்களின் வழியாக தேவனுடைய ராஜ்யத்தை சென்று அடைய, கிறிஸ்து இயேசுவுடனே கூட உபத்திரவங்களை சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நாம் நினைவில் கொண்டு தேவனுடைய வார்த்தையாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வெளிச்சத்தில் நாம் அனுதினமும் நடக்க வேண்டியது மிக அவசியம்.
(அப்போஸ்தலர் 14:22) சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.
(1 தெசலோனிக்கேயர் 3:3) இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என அடிப்படை தேவைகள் அனைத்தும் சந்திக்கபட்டு வாழ்ந்து கொண்டு இருந்தாலும், இன்னும் மேலதிகமான கூடுதல் வசதி வாய்ப்புகளை வாழ்க்கையில் பெற்றிருந்தாலும் - தேவனாகிய கர்த்தருடைய வார்த்தைகளை கைக்கொண்டு அவரில் அன்புகூர்ந்து, அவருக்கு பிரியமாய் நடக்க, முடிவு வரை அவரில் நிலைத்திருந்து அவருடைய இரட்சிப்பாகிய நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள, கர்த்தராகிய தேவனுடைய பிரமாணமாகிய அவருடைய பரிசுத்த வேதம் நம் இருதயத்தில் நிறைந்திருந்து, நிலைத்திருந்தால் மட்டுமே முடியும். கர்த்தருடைய பிரமாணமாகிய அவருடைய பரிசுத்த வேத வசனமே நம் அனுதின வாழ்க்கை பாதையில் நமக்கு வெளிச்சம். தனித்தனியே நம் ஒவ்வொருவருக்கும் அவரவர் இருதயத்திலிருந்து வெளிச்சம். அவரவர் வாழ்க்கை பாதைக்கு வெளிச்சம். கர்த்தருடைய பிரமாணமாகிய வேதமே வெளிச்சம்.
(நீதிமொழிகள் 6:23) கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி.
(சங்கீதம் 119:105) ... உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
கர்த்தருடைய பிரமாணமாகிய பரிசுத்த வேதம், தேவனுடைய வார்த்தை, பரிசுத்த வேத வசனம் ஆகிய அனைத்தும் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே. அவரே தேவனுடைய வார்த்தை. அவரே நம்மை போல இரத்தமும் சதையுமாய் இப்பூமிக்கு வந்து சிலுவையிலே நமக்காக எல்லாவற்றையும் செய்து முடித்தார். கிருபையும் சத்தியமும் நிறைந்தவராய் நமக்குள்ளே வந்து வாசம் பண்ண விரும்புகிறார். உங்களுக்குள் இருக்கிற கிறிஸ்து இயேசுவே உங்கள் வாழ்க்கை பாதைக்கு வெளிச்சம். உங்களுக்கு வெளிச்சம்.
இந்த வெளிச்சத்தை நமக்குள்ளே காத்துக்கொள்வதும், அந்த வெளிச்சத்திலே நடப்பதும் கடைசி மூச்சு வரை நமக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது.
(மத்தேயு 24:13) முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
தவறினால், நம்மை விழுங்க காத்துக்கொண்டிருக்கும் பிசாசின் இக்கடைசிகால தந்திரங்கள், வல்லமைகள், வஞ்சகங்கள், இச்சைகள், கிருபையை போக்கடிக்கிற அநேக உலக மாயைகள் நம்மை விழுங்கிவிடும். விழுங்கிவிட்டால் நம் ஆத்துமா, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் தேவனால் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற இடம் சென்றடைவதை தவிர வேறு வழியேயில்லை. அதுவே ஆத்தும மரணமாகிய நித்திய அழிவு, நித்திய தண்டனையாகிய நரகம்.
இவ்வுலக சந்தோஷங்களுக்காக, நன்மைகளுக்காக, ஆசீர்வாதங்களுக்காக மட்டும் நாம் வாழ்வதும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தேடுவதும், நம்புவதும் பரிதாபம்.
(1 கொரிந்தியர் 15:19) இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.
சூரியனுக்கு கீழே, இந்த உடலுக்குள் வாழும் இந்த வாழ்க்கை முடியும்போது இந்த பேருண்மை, வேத சத்தியம் புரியும். ஆனால் காலம் கடந்து போயிருக்கும். அதன் பிறகு பூமியில் வாழ்ந்த போது நாம் செய்த கிரியைகளுக்கான பலனை அனுபவிப்பதை தவிர நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை. நன்மையானாலும், தீமையானாலும் தேவன் நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார். மனதின் நினைவுகள் முதற்கொண்டு நியாயந்தீர்க்கப்படுகிற நேரம் அது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையிலே, அல்லது நம் மரணம் முந்திக்கொண்டால் மரணத்திற்கு பிறகு, இவ்வுலக வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் நாம் வாழ்ந்த விதம் அதாவது நம் கிரியைகளின் பலன் அவருடைய நீதியின் படி அவர் சமூகத்தில் அவருடைய புத்தகங்களில் நியாயத்தீர்ப்புக்காக ஆயத்தமாயிருக்கிறது.
(பிரசங்கி 11:9) ... உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.
(பிரசங்கி 3:17) சகல எண்ணங்களையும் சகல செய்கைகளையும் நியாயந்தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார் ...
(வெளிப்படுத்தின விசேஷம் 20:12) மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
கர்த்தருடைய பிரமாணமாகிய அவருடைய வேதம் - தேவனுடைய வார்த்தையாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து குறித்து கீழ்கண்ட பரிசுத்த வேத வசனம் சொல்கிறது:
(யோவான் 1:14) அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
(யோவான் 12:46) என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் (இயேசு கிறிஸ்து) உலகத்தில் ஒளியாக வந்தேன்.
இந்த சூழ்நிலையில், கிருபையும் சத்தியமுமாகிய கிறிஸ்து இயேசுவை நம் இருதயத்தில் தேவ பிரமாணமாகவும், மட்டுமல்ல நமக்கும் நம் வாழ்க்கைக்கும் வெளிச்சமாக கொண்டிருப்பதும், அந்த வெளிச்சத்தை நமக்குள்ளே காத்துக்கொள்வதும் எப்படி?
இந்த வேத சத்தியத்தை நீங்கள் ஆழமாக அறிந்து கொள்ள கீழ்கண்ட தேவ செய்தியை தொடர்ந்து படிக்க உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அப்பொழுது தான் இந்த பரிசுத்த வேத தியானம் முழுமை பெறும்.
தேவனாகிய கர்த்தருடைய பிரமாணத்தை உங்களுக்குள்ளே கொண்டிருந்து, கைக்கொண்டு நீங்கள் வெளிச்சத்தால் நிறைந்திருக்கவும், உங்கள் வாழ்க்கை பாதையில் இடறாமல் வெளிச்சத்தில் அனுதினமும் நடக்கவும், நீங்கள் மற்றவர்களுக்கும் கர்த்தருடைய வெளிச்சமாயிருக்கவும், கர்த்தருடைய ஆவியானவர் தாமே உங்களுக்கு சகல விதத்திலும் உதவி செய்து முடிவு பரியந்தம் உங்களை காத்து நடத்துவாராக. கர்த்தருடைய ராஜ்யம் கொண்டு சேர்ப்பாராக. ஆமென்.
(1 தெசலோனிக்கேயர் 5:5) நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தேவாதி தேவனுக்கே சகல துதி கனம், மகிமை யாவும் செலுத்துகிறேன். கர்த்தருடைய பரிசுத்த நாமமே உயர்ந்திருப்பதாக. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்.
Thou art my King, O God. (Ps 44:4)
Pray
இஸ்ரவேலின் சமாதானத்துக்காக, பாதுகாப்பிற்காக தேவனிடத்தில் வேண்டிக்கொள்வோம்...
எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்;உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. (சங்கீதம் 122:6-7)
வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம். (சங்கீதம் 48:2)
...எருசலேமின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம். (மத்தேயு 5:35)