இன்றைய பரிசுத்த வேத வசனம்
தேவனுடைய வார்த்தையை பற்றிக்கொண்டு விசுவாசத்தோடு ஜெபித்து கிறிஸ்து இயேசுவுக்குள் ஜெயங்கொள்ளுவோம்:
என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற்போனார்கள். (சங்கீதம் 129:2)You may check
Meditation on the Word of God...Food for your soul: Meditation >> Lets Meditate
பயந்தவர்கள்
தேவ செய்தி - மார்ச் 2017 (Message - March 2017)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
அவர் (கர்த்தர்) தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார். (சங்கீதம் 145:19)
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் நம்முடைய ஒரு முக்கியமான வேண்டுதலும், எதிர்பார்ப்பும், ஆசையும் மேற்கண்ட வசனத்தின் பின் பகுதி தான் அது. நாம் தேவனாகிய கர்த்தரை, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நோக்கி கூப்பிடும்பொழுதெல்லாம் அதை அவர் கேட்டு, நும்முடைய விருப்பத்தின்படி செய்து, நம்மை பாவ சாபங்களிலிருந்து, வியாதிகளிலிருந்து, வேதனைகளிலிருந்து, பிசாசின் பிடியிலிருந்து, பிரச்சனைகளிலிருந்து இரட்சிக்க வேண்டுமென்பதே நம்முடைய இருதயத்தின் ஏக்கமுமாயிருக்கிறது. பரிசுத்த வேதம் மேற்கண்ட வசனத்தின் முதல் பகுதியில் இதற்கு தெளிவான வழிமுறையையும் நமக்கு விளக்கி சொல்கிறது. அது "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பயந்திருப்பதே".
பொதுவான பயத்தைக் குறித்து நாம் எல்லோருமே அறிந்திருக்கிறோம். பரிசுத்த வேதம் கர்த்தருக்கு பயப்படுகிற பயம் அல்லாத பயத்தைக் குறித்து சொல்வதை கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்களின் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம்.
...பயமானது வேதனையுள்ளது, .... (1 யோவான் 4:18)
மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; ... (நீதிமொழிகள் 29:25)
ஆனால், பரிசுத்த வேதம் போதிக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பயந்திருப்பது என்பது முற்றிலும் வேறுபட்டது, மட்டுமல்ல, இந்த பயம் நமக்கு எப்பொழுதும் மிகவும் தேவையாக இருக்கிறது. ஆச்சரியமான இந்த பரிசுத்த வேத சத்தியத்தை, உண்மையை நாம் சற்றே ஆழமாக தியானித்து அறிந்து கொள்ளலாம், முதலாவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பயப்படுதல் என்றால் என்ன? பரிசுத்த வேதம் சொல்கிறது:
தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; ... (நீதிமொழிகள் 8:13)
நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான்; தன் வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்பண்ணுகிறான். (நீதிமொழிகள் 14:2)
அப்படியானால், தீமையை வெறுக்காமல், தீமையை வெறுத்து அதை விட்டு விலகாமல் கர்த்தருக்கு பயப்படுகிறேன் என்பது பொய்யும், நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளுகிறதுமாகும். மட்டுமல்ல, அது கர்த்தர் போதிக்கிற போதனையாக இல்லாமல் மனுஷர் போதனையாக, கற்பனையாக (Commandment) இருக்கிறது என்றும் பரிசுத்த வேதத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே சொல்லி எச்சரித்திருக்கிறார்.
இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது. (ஏசாயா 29:13)
...சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவிகொடாமல், (தீத்து 1:13)
மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் ... (மாற்கு 7:7)
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பயப்படுகிற பயத்தை எப்படி உணர்ந்து, அறிந்து, பெற்றுக்கொள்வது?
என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு, நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். (நீதிமொழிகள் 2:1-5)
அதாவது, பரிசுத்த வேதத்தில் உள்ள கர்த்தருடைய வார்த்தைகளுக்கு கீழ்படிந்து, அவைகளை கைக்கொண்டு நாம் அனுதினமும் வாழும்போது, பரிசுத்த வேதத்தின் மூலமாகவே கர்த்தர் தம்முடைய ஞானத்தினால் (Wisdom), அறிவினால் (Knowledge), புத்தியினால் (Understanding) நம்மை நிரப்புகிறார். இப்படி தேவ ஞானத்தை, அறிவை, புத்தியை பெற்றுக் கொள்ளும்போது நாம் கர்த்தருக்கு பயப்படுகிற பயத்தை அறிந்து, உணர்ந்து பெற்றுக்கொள்வதோடு , அது நமக்குள் என்றும் நிலைத்துமிருக்கிறது. பரிசுத்த வேதத்திலிருந்து இதை விளக்கும் சில வசனங்கள்:
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு. (நீதிமொழிகள் 9:10)
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; ... (சங்கீதம் 111:10)
மனுஷனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார்... (யோபு 28:28)
கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும். (நீதிமொழிகள் 2:6)
(அவர் வாயினின்று: கர்த்தருடைய வாயின் வார்த்தைகளிலிருந்து, வசனங்களிலிருந்து, பரிசுத்த வேதத்திலிருந்து அறிவும் புத்தியும் வரும்.)
மேலும், கர்த்தருக்கு பயப்படுகிற பயத்திற்கு உரிய ஏராளமான சிறப்புகளையும் அல்லது மகிமையையும், அப்படி பயந்து நடக்கும் போது அதற்குரிய பலன்களையும் மற்றும் கர்த்தர் அருளும் அசீர்வதங்களையும் குறித்து பரிசுத்த வேதத்தின் வசனங்களின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; ... (சங்கீதம் 19:9)
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள். (நீதிமொழிகள் 1:7)
கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம். (நீதிமொழிகள் 10:27)
கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். (நீதிமொழிகள் 14:26)
கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். (நீதிமொழிகள் 14:27)
கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை. (நீதிமொழிகள் 15:33)
கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது. (நீதிமொழிகள் 19:23)
தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம். (நீதிமொழிகள் 22:4)
கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை. (சங்கீதம் 34:9)
எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான். (நீதிமொழிகள் 28:14)
(எப்பொழுதும் பயந்திருக்கிறவன்: எப்பொழுதும் தீமையை வெறுத்து அதை விட்டு விலகுகிறவர்கள் பாக்கியவான்கள் - ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்)
மட்டுமல்ல, இந்த பரிசுத்த வேத தியானத்தின் வசனமாகிய மேலே கண்ட சங்கீதம் 145:19ன் படி, கர்த்தருக்கு பயந்து நாம் இருக்கும் போது நம்முடைய விருப்பத்தின்படி அவர் செய்து, நாம் அவரை நோக்கி கூப்பிடும் பொழுதெல்லாம் அவர் நம் வேண்டுதலை, ஜெபத்தைக் கேட்டு நம்மை இரட்சிக்கிறார்.
பரிசுத்த வேதத்தில், கர்த்தருடைய தாசனாகிய தாவீது சொல்கிறார்:
உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன். (சங்கீதம் 119:120)
ஆதலால்,
... கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் உங்களிடத்தில் இருக்கக்கடவது, எச்சரிக்கையாயிருந்து காரியத்தை நடத்துங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்திலே அநியாயமும் முகதாட்சிணியமும் இல்லை, பரிதானமும் அவரிடத்திலே செல்லாது .... (2 நாளாகமம் 19:7)
...அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். (எபிரெயர் 12:28)
மிக சமீபமாயிருக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாவோம். ஆமென்.
திரும்பவும்...
தேவ செய்தி - பிப்ரவரி 2017 (Message - Feb 2017)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள். (லூக்கா 15:24)
மேற்கண்ட பரிசுத்த வேத வசனம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே ஒரு உவமையின் வழியே சத்தியத்தை விளக்கிச் சொல்லும்போது சொன்ன வசனமாகும். இந்த உவமையிலே சொல்லப்படும் "தகப்பன்" என்பது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறது. இதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள இந்த உவமையை நாம் முழுவதுமாக அறிந்து கொள்வது அவசியமாகிறது. இந்த உவமையை பரிசுத்த வேதத்தின் லூக்கா 15:11-24 என்ற பகுதியில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே இதை விளக்கிச் சொல்லியிருக்கிறார்.
மேற்கண்ட உவமையிலே, ஒரு தகப்பனுடைய இரண்டு மகன்களில், இளைய மகன் சொத்தில் தனது பங்கை தந்தையிடம் இருந்து பெற்றுக் கொண்டு, வேறு ஒரு தூர தேசத்திற்கு சென்று அங்கே மிக கெட்ட வழியில், துன்மார்க்க வழியில் நடந்து தன் சொத்தையெல்லாம் அழித்துப்போட்டான். அந்நேரம், அந்த தேசத்தில் கொடிய பஞ்சம் உண்டானது. அப்பொழுது அவன் வாழ வழி தேடி அத்தேசத்து குடியானவன் ஒருவனிடம் சென்று ஒட்டிக் கொண்டான். அந்தக் குடியானவனோ, அவனை தன் பன்றிகளை மேய்க்க அனுப்பினான். அவனோ பஞ்சத்தின் கொடுமையினால் பன்றிகளின் தீவனத்தைக் கொண்டு தன்னை பசியாற்றிக் கொள்ள முயற்சித்தும் அதை ஒருவரும் அவனுக்கு கொடுக்கவில்லை. அப்பொழுது அவனுக்கு புத்தி தெளிந்து, என் தகப்பனுடைய வேலைக்காரருக்கு கூட திருப்தியான சாப்பாடு இருக்கிறது, ஆனால் நானோ இங்கே பசியினால் சாகிறேன் என்று சொல்லி, மீண்டும் தன் தகப்பனிடத்திற்கே சென்று கீழ்க்கண்டவாறு கூறினான்.
குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான். (லூக்கா 15:21)
அப்பொழுது அந்த தகப்பன் சொன்ன பதில்:
என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள். (லூக்கா 15:24)
இதிலே நாம் கவனித்து தியானிக்க வேண்டியது என்னவென்றால், இளைய மகன் பரலோகத்தின் தேவனுக்கு அதாவது கடவுளுக்கு விரோதமாக, தன்னைப் பெற்றெடுத்த தகப்பனுக்கு விரோதமாக தான் பாவம் செய்ததாக மனம் வருந்தி அறிக்கை செய்யும் போது, அந்த தகப்பனோ - "என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்" என்று சொன்ன பதிலேயாகும். அப்படியானால், தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வதற்கும் மரித்து போவதற்கும் என்ன தொடர்பு? அப்படியே, தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வதற்கும் காணமல் போவதற்கும் என்ன சம்பந்தம்?
அப்படியானால், ஒரு மனிதன் பாவம் செய்யும் போது என்னதான் நடக்கிறது? பரிசுத்த வேதம் இதற்கெல்லாம் தெளிவாக பதில் சொல்கிறது. அவற்றில் சிலவற்றை கீழே காண்போம்.
...பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும். (எசேக்கியல் 18:4)
அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். (எபேசியர் 2:1)
அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். (எபேசியர் 2:5)
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறியாத, அவரை சொந்த ரட்சகராக, தெய்வமாக கொண்டிராத ஒரு மனிதன் பாவம் செய்யும் போது அந்த மனிதன் இன்னும் இரட்சிக்கப்படாததினாலே அந்த மனிதன் பாவத்தினால் மரித்தவனாகவே இருக்கிறான். அவனுடைய ஆவி, ஆன்மா அல்லது ஆத்துமா இன்னும் பாவ மன்னிப்பாகிய மீட்பை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளாததினாலே அந்த மனிதனின் உள்ளான மனிதனாகிய (inner man) ஆவி மற்றும் ஆன்மா பாவத்திற்கு அடிமையாக, பாவத்தினால் மரித்து அல்லது இறந்த நிலையிலேயே இருக்கிறது. இந்த நிலையில் கடவுளோடு, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோடு உறவும் இல்லை, ஐக்கியமும் இல்லை (No Relationship & Fellowship). இந்த நிலையைத் தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஆத்தும மரணம் என விளக்குகிறார்.
ஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தன் சொந்த ரட்சகராக, தெய்வமாக கொண்ட ஒரு மனிதன் அதாவது இரட்சிக்கப்பட்ட ஒரு மனிதன் பாவம் செய்யும் போது அவன் கடவுளோடு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு உள்ள உறவாகிய "அவருடைய பிள்ளை - மகன் , மகள்" என்ற உறவு (Relationship) அப்படியே இருந்தாலும் அந்த உறவின் ஐக்கியத்தை (Fellowship) இழந்து போகிறான். அதாவது பரம தகப்பன் இயேசு கிறிஸ்துவோடு உறவாடி, அவருடைய அன்பின் உறவை அனுபவித்து மகிழ்கிற அந்த உன்னத நிலையை இழந்து போகிறான். தந்தை - மகன், மகள் என்ற உறவு மாறவில்லை, ஆனால் பாவம் செய்தபடியால், தந்தையோடு உறவாடி மகிழ முடியாமல் போகிறது. இந்த நிலையைத் தான் நல்ல மேய்ப்பராகிய, ஆடுகளுக்காக தன் ஜீவனையும் கொடுத்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய ஆடு காணாமல் போன நிலை என விளக்குகிறார்.
உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ? (லூக்கா 15:4)
கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு, (லூக்கா 15:5)
வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன் என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா? (லூக்கா 15:6)
மேற்சொன்ன இரண்டு நிலைகளில் எதுவானாலும், உவமையில் சொல்லப்பட்ட இளைய மகன் போல புத்தி தெளிந்து, செய்த பாவம் உணர்ந்து மனம் வருந்தி, பின் மனம் திருந்தும் போது பரம தகப்பனாக கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் உள்ளம், அவருடைய அன்பு, அவருடைய மனதுருக்கம் எப்படிப்பட்டது என்பதை அந்த உவமையின் வாயிலாகவே நாம் அறிந்து கொள்ளலாம்.
(இளைய மகன்)... அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான். (லூக்கா 15:20)
அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். (லூக்கா 15:22)
... நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். (லூக்கா 15:23)
என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள். (லூக்கா 15:24)
ஒரு மனிதனின் பாவ அடிமைத்தனத்திலிருந்து அவனை சிலுவையில் சிந்தின தன் இரத்ததினால் விடுதலையாக்கி, பாவமற அவனை சுத்திகரித்து, அவனுடைய ஆத்தும மரணத்திலிருந்து அவனை உயிர்ப்பித்து, தன் உறவைத் தந்து தம் பிள்ளையாக்கி, இழந்த உறவின் ஐக்கியத்தை மீட்டுக் கொடுக்கவே ஆத்தும மீட்பரும், நல் மேய்ப்பருமாகிய இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்தார்.
இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் (இயேசு) வந்திருக்கிறார் ... (லூக்கா 19:10)
(இயேசு) மனுஷகுமாரன் கெட்டுப்போனதை ரட்சிக்க வந்தார். (மத்தேயு 18:11)
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; ... (1 தீமோத்தேயு 1:15)
பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார். (மத்தேயு 9:13)
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். (மத்தேயு 1:21)
இன்று ஒருவேளை நாம் மேற்சொன்ன எந்த நிலைமையில் இருந்தாலும் - ஆத்தும மரணமோ, நல் மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்துவை விட்டு வழி விலகி காணாமல் போய் அலைந்து திரிந்து கொண்டிருந்தாலும் இன்று பரம தகப்பனாகிய கர்த்தர் இயேசு கிறிஸ்துவினிடத்தில் திரும்புவோம். அவர் நம்மை தம் மார்போடு அரவணைத்துக் கொள்வார். மிக சமீபத்திலிருக்கும் அவருடைய இரண்டாம் வருகை மட்டும் அப்படியே நம்மைக் காத்து தம் பரலோக ராஜ்யம் கொண்டு சேர்ப்பார்.
எனவே தான் உலக ரட்சகராகிய (யோவான் 4:42, 1 யோவான் 4:14) கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னார்:
...மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (லூக்கா 15:7)
அன்பே பூரண சற்குணம்
புத்தாண்டு தேவ செய்தி - ஜனவரி 2017 (Message - Jan 2017)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இணையில்லா பரிசுத்த நாமத்தில் உங்கள் யாவருக்கும் அன்பின் புத்தாண்டு வாழ்த்துகளை, சாரோனின் ரோஜா ஊழியங்களின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
தேவனாகிய கர்த்தருடைய திருவுள சித்தத்தின்படி, தேவன் அருளிய அவருடைய பரிசுத்த வேத வசன வாக்குத்தத்தத்தின் படியே தேவன் உங்களை பூரண சற்குணத்தின் கட்டாகிய தம் அன்பினால் நிறைத்து, தம்மோடு என்றும் உங்களை இணைத்துக் கொண்டு தம் வருகை பரியந்தமும் அப்படியே காத்துக் கொண்டு உங்களை தம் ராஜ்யம் கொண்டு சேர்ப்பாராக. ஆமென்.
இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள். (கொலோசெயர் 3:14)
மேற்கண்ட பரிசுத்த வேத வசனம் ஒரு ஆழ்ந்த சத்தியத்தை, ரகசியத்தை நமக்கு போதிக்கிறது. அது பூரண சற்குணம் (Complete and Perfectness) என்பது தேவ அன்பை நம்மில் தரித்து கொள்வது, அதாவது தேவ அன்பினால் நாம் நிறைந்திருப்பது, அதிலே முடிவு வரை நிலைத்திருப்பது என்பதே. வேறு வார்த்தையில் சொல்வதானால், சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு முன்பாக நம்மை பூரணரும், சற்குணருமாக்குவது நம்மில் நிறைந்து இருக்க வேண்டிய தேவ அன்பே.
பரிசுத்த வேதத்தில், பரலோகத்தில் இருக்கிற சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனை குறித்து ஆண்டவர் இயேசு கிறிஸ்து கீழ்க்கண்டவாறு கூறியிருக்கிறார்.
ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள். (மத்தேயு 5:48)
நாமும் பூரண சற்குணராயிருக்க வேண்டும் என்றே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு போதிக்கிறார். அப்படியானால், நமக்கு இது சாத்தியப்படுவது எப்படி? நாம் தொடர்ந்து தியானிப்போம். நாம் தியானிக்கிற பிராதன வசனத்திற்கு (கொலோசெயர் 3:14) முந்தின இரண்டு வசனங்களையும் (கொலோசெயர் 3:12-13) நாம் கவனித்துப் பார்க்கும் போது,
ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; (கொலோசெயர் 3:12)
ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். (கொலோசெயர் 3:13)
மேற்சொல்லப்பட்டிருக்கிற காரியங்கள் எல்லாம் முக்கியமானதாக இருந்தாலும், அவை எல்லாவற்றிற்கும் மேலாக, மிக முக்கியமாக தேவ அன்பை நம்மிலே தரித்துக் கொள்ளும் போது தான் நாம் பூரண சற்குணராக, மனுஷரை தம் அன்பின் கயிறுகளால் கட்டி இழுக்கிற (ஓசியா 11:4) நம் தேவனோடு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு என்றும் இணைக்கப்பட்டிருப்போம். இந்த இணைப்பையே பரிசுத்த வேதம் பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பு என்று நமக்குப் போதிக்கிறது. அப்படியானால், பூரண சற்குணராக தேவ அன்பு நம்மில் நிறைந்து நிலைத்து இருக்க வேண்டும். இந்த தேவ அன்பை நம்மில் பெற்றுக் கொள்வது எப்படி ? தேவ அன்புக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது? தொடர்ந்து தியானிப்போம்.
அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார். (1 யோவான் 4:8)
இந்த பரிசுத்த வேத வசனம் மிக ஆழமான ஒரு சத்தியத்தை நமக்கு போதிக்கிறது. அது தேவாதி தேவன், சர்வ வல்லமையுள்ள கடவுள் அன்பாகவே இருக்கிறார் என்பதே. அதாவது, தேவன் கொஞ்சம் அன்பாகவும் இருக்கிறார் என்றோ, அன்பையும் கொண்டிருக்கிறார் என்றோ அல்ல. அவர் அன்பாகவே இருக்கிறார் (HIS very being, existence itself is Love). எனவே தான், அவரைப் போல நாமும் பூரண சற்குணாராக அவருடைய அன்பால் நிறைந்து, அந்த அன்பிலே முடிவு வரை நிலைத்திருக்க வேண்டும். அப்படியானால், இந்த தேவ அன்பை நாம் பெற்றுக் கொள்ளவதும், அது நமக்குள் பூரணப்படுவதும், நாம் அதிலே நிலைத்திருப்பதும் எப்படி?
(இயேசு) அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம். (1 யோவான் 2:5)
தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும். (1 யோவான் 4:12)
தேவ வசனத்தை, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் போதனைகள நாம் கைக்கொள்ளும் போது, தேவ அன்பு நமக்குள் நிறைந்து பூரணப்படுகிறது. அதாவது, நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கற்பனைகளை நிறைவேற்றும் போது, தேவ அன்பிலே நாம் நிலைத்திருக்க முடியும். ஏதோ ஒரு சிலரிடத்தில், சில காலம் அல்ல, நம் வாழ்நாளெல்லாம் தேவ அன்பினால் ஒருவரிலொருவர் அன்பாயிருப்போம். பூரண சற்குணரான கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே சொன்ன அவருடைய கற்பனை (Commandment) இதோ:
நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள். (யோவான் 15:10)
என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன். (யோவான் 15:11)
நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. (யோவான் 15:12)
இந்த புதிய ஆண்டில், கர்த்தாராகிய இயேசுவினிடத்தில் இந்த தேவ அன்பையே நமக்குள் பெற்றுக் கொள்ள வேண்டிக் கொள்வோம். அப்பொழுது அவர் தாமே தம் கற்பனைகளை, போதனைகளை நாம் கைக்கொள்ள நமக்கு கிருபையாய் உதவி செய்வார். தம் அன்பினால் நம்மை நிறைப்பார். அப்பொழுது, தேவாதி தேவனுடைய மகா நியாயத்தீர்ப்பு நாளிலே கூட தேவனுக்கு முன்பாக நாம் நிற்க நமக்கு தைரியம் உண்டாயிருக்கும்.
நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம். (1 யோவான் 4:17)
Love has been perfected among us in this: that we may have boldness in the day of judgment; because as He is, so are we in this world. (1 John 4:17) [NKJV]
Herein is our love made perfect, that we may have boldness in the day of judgment: because as he is, so are we in this world. (1 John 4:17) [KJV]
உங்களிடத்தில் வருவேன்
கிறிஸ்துமஸ் தேவ செய்தி - டிசம்பர் 2018 (Christmas Message - December 2018)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
![]() |
உலக ரட்சகரும், ஆண்டவரும், ஆத்தும ரட்சகருமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இனிய கிறிஸ்து பிறந்த நாளின் அன்பு வாழ்த்துக்கள்! பூமிக்கு வந்த மேசியா - கிறிஸ்து இயேசுவையே கொண்டாடுவோம். அவருடைய நாமத்தையே உயர்த்துவோம். |
![]() |
கிறிஸ்து இயேசு பூமியில் வந்து ஒரு மனிதனாக பிறந்ததை, அவருடைய முதலாம் வருகையை கொண்டாடும் இந்த நாட்களில், அவரே உரைத்த வார்த்தை தான் பரிசுத்த வேதத்தில் காணப்படும் கீழ்க்கண்ட வசனம்:
(யோவான் 14:18) நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்.
பரிசுத்த வேதத்திலே, மேற்கண்ட அதிகாரம் முழுவதுமே (யோவான் 14) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவனிடத்திற்கு தாம் செல்வதைக் குறித்தும், அவருடைய வசனத்தைக் கைக்கொண்டு அவரில் அன்பாயிருப்பதைக் குறித்தும், பிதாவாகிய தேவன் தன்னுடைய நாமத்தினாலே பரிசுத்த ஆவியானவரை மனிதர்களாகிய நமக்கு அருளப்போகிறதை குறித்துமே அதிகமாய் தன் சீடர்களுக்கு வெளிப்படுத்தி சொன்னார். இப்படி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தி சொன்னவற்றில் மூன்று முக்கிய காரியங்களை இந்த பண்டிகை காலத்தில் நாம் தியானிப்பது பொருத்தமாயிருக்கும்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, மனிதனாக இந்த பூமிக்கு வந்த நோக்கத்தை சிலுவையில் நிறைவேற்றி முடித்து, மீண்டும் தம்முடைய பிதாவினிடத்திற்கு திரும்பி செல்லுவதை, அது நடப்பதற்கு முன்னமே தன் சீடர்களிடம் வெளிப்படுத்திய இந்த சூழ்நிலையில், சீடர்களின் மனநிலையையும், அவர்களின் உள்ளத்தில் இருந்த கேள்விகளையும் அறிந்திருந்த ஆண்டவர் இயேசு, அவற்றிற்கு தெளிவான பதிலை அளித்தார்.
1) ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சமாதானம்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவனிடத்திற்கு திரும்ப சென்று விட்ட பிறகு நாம் என்ன செய்வோம் என்று கலங்கின சீடர்களுக்கும், இன்று நமக்கும் ஆண்டவர் வாக்குப் பண்ணுவது - தேவ சமாதானம். உலகம் கொடுக்கும் சமாதானத்தை போல் அல்ல, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சமாதானம். இன்று நாம் வாழும் இந்த காலங்கள், குறிப்பாக ஒவ்வொரு வருடமும் கடந்து போகப் போக, நம் கண் முன்னே இந்த உலகில் நடக்கும் காரியங்கள், பயங்கரங்கள், நம் வாழ்விலும் நடக்கும் சில காரியங்கள் நம் சமாதானத்தை குலைத்து நம் நம்பிக்கைகளை அசைத்து நாம் இனி என்ன செய்வோம், இனி எப்படி இந்த உலகில் வாழ்வோம் என்று நம்மையும் கலங்க செய்கிறது. அந்த சூழ்நிலைகளில், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பதில்:
(யோவான் 14:27) சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.
(யோவான் 14:6) அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; ...
(யோவான் 14:13) நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.
2) சத்திய ஆவியாகிய தேற்றரவாளன்' (Spirit of truth, the Comforter)
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சமாதானத்தை நமக்கு அருளிச் செய்வதோடு, சத்திய ஆவியாகிய தேற்றரவாளனாம் பரிசுத்த ஆவியானவரையும் நமக்கு அருளிச் செய்கிறார். அவரே சொல்கிறார்:
(யோவான் 14:16) நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.
இந்த பரிசுத்த ஆவியானவர் என்றென்றைக்கும் நம்முடனே கூட இருந்து, ஆண்டவர் இயேசு கிறிஸ்து போதித்த எல்லாவற்றையும் நமக்கு ஞாபகப்படுத்தி அவற்றை நாம் கைக்கொள்ள செய்கிறார். கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை பெலப்படுதுகிறார். நம்மை நிரப்பும் உன்னதத்திலிருந்து வரும் பெலன் (லூக்கா 24:49) பரிசுத்த ஆவியானவரே.
(யோவான் 14:26) என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
(யோவான் 14:17) உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
இந்த ஆவியானவர் வேறு யாரோ அல்ல, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே என்றென்றும் நம்முடனே, நமக்குள்ளே வாசம் பண்ணும்படி அவரே நமக்குள் வருகிறார். நம்மை நிரப்புகிறார். பரிசுத்த வேதம் இதை உறுதிபடுத்துகிறது.
(1 கொரிந்தியர் 8:6) .... இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; ....
(2 கொரிந்தியர் 3:17) கர்த்தரே ஆவியானவர்; ....
(1 கொரிந்தியர் 15:45) .... பிந்தின ஆதாம் (இயேசு கிறிஸ்து) உயிர்ப்பிக்கிற ஆவியானார்.
(கலாத்தியர் 4:6) மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.
3) உங்களிடத்தில் வருவேன்
நமக்கு தம்முடைய சமாதானத்தையும், பரிசுத்த ஆவியானவரையும் அருளிச்செயும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்கு கொடுக்கும் ஒரு அருமையான வாக்குத்தத்தம்:
(யோவான் 14:18) நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்.
கல்வாரி சிலுவையில் உலக மக்களுக்காக தேவ சித்தம் நிறைவேற்றி, யாவையும் செய்து முடித்த நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலக வாழ்வில் அல்லது இந்த உலக வாழ்க்கைக்கு பிறகும் நம்மை நிர்கதியாக, நிராதரவாக, திக்கற்றவர்களாக விட்டுவிடுவதில்லை. அவர் திரும்பவும் நம்மிடத்தில் வருகிறார். அவருடைய முதலாம் வருகையை இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையாக நாம் கொண்டாடுகிற இந்த நேரத்தில், அவருடைய இரண்டாம் வருகையைக் குறித்து, அதற்கு நாம் தயாராவதைக் குறித்தும் நாம் அறிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே சொல்லியிருக்கிறார்:
(யோவான் 14:18) நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்.
(யோவான் 14:2) என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.
(யோவான் 14:3) நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வாசம் செய்யும் பரலோகத்தில் நாமும் அவருடனே இருக்க அவர் விரும்புகிறபடியால் அவர் மறுபடியும் வந்து - இரகசிய வருகை, இரண்டாம் வருகையின் மூலமாக நம்மை அவரிடத்தில் சேர்த்துக்கொள்ளுவார்.
அப்படியானால், அவருடைய வருகைக்கு நாம் எப்படி தயாராவது? அதற்கு என்ன செய்ய வேண்டும்.? ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே சொல்கிறார்:
(யோவான் 14:21) என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.
(யோவான் 14:23) இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.
பரிசுத்த வேதத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து போதிக்கும் அவருடைய வசனத்தின் படி நடந்து, அவருடைய வார்த்தையை எந்நாளும் நாம் கைக்கொண்டால் நாம் அவரில் அன்பாயிருப்போம். அவரில் அன்பாயிருந்தால் அவரும் நம்மில் அன்பாயிருந்து நமக்குள் வந்து வாசம் பண்ணுவார். நம்மை தம்முடைய வருகைக்கு ஆயத்தப்படுத்துவார். எனவே தான், அவர் வாசம் பண்ணும் பரலோகம் நாமும் சென்று சேர அவர் சொன்னார்:
(யோவான் 14:6) அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
(யோவான் 14:15) நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
எனவே
(யோவான் 14:1) உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; ....
(யோவான் 14:18) நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.
துன்பப்பட்டால்...
தேவ செய்தி - ஆகஸ்டு 2018 (Message - August 2018)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
(யாக்கோபு 5:13) உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்;...
நம் துன்ப நேரங்களில், முதலாவது நாம் செய்ய வேண்டியது ஜெபம். ஒரு வேளை இது செய்வதற்கு மிகவும் கடினமான காரியமாக, துன்ப நேரத்தில் ஜெபிக்கவெல்லாம் முடியுமா என்று ஆச்சரியமான காரியமாக நமக்கு தோன்றலாம். ஆனால், முதலில் ஜெபத்திலிருந்து நாம் ஆரம்பிக்கும் போது தான் அந்த துன்ப நேரத்திலும் நாம் சரியாக செயல்பட ஆரம்பித்து, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினால் அந்த துன்பம் நம்மை வென்றுவிடாமல் நாம் அந்த துன்பத்தை ஜெயங்கொள்ள முடியும். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. பரிசுத்த வேதத்தில் நாம் கீழ்க்கண்ட வசனத்தை கவனிப்போம்:
(லூக்கா 22:44) அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.
மிகுந்த திகிலூட்டும் சிலுவைப்பாடுகள், அதன் முடிவில் சிலுவையில் தன் உயிரையும் கொடுக்க வேண்டும் என்று அறிந்திருந்த அந்த சூழ்நிலையில் தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அப்படியானால், நாம் துன்பப்பட்டாலும் நம் துன்பத்தின் நடுவிலும் ஜெபிக்க வேண்டும், ஜெபிக்கவும் முடியும், அதையே நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு முன் மாதிரியாக செய்து காட்டினார்.
நம் வேண்டுதல்கள், மன்றாட்டுகள், ஸ்தோத்திரத்தோடு கூடிய விண்ணப்பங்கள், கண்ணீர் நிறைந்த நம் இருதயத்தின் கதறல்கள், உள்ளத்தின் பெருமூச்சுகள் மற்றும் தேவனாகிய கர்த்தருக்கு துதி, ஸ்தோத்திரங்களை ஏறெடுத்து நன்றி செலுத்துதல் என இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியதே ஜெபம். நாம், தனித்திருந்து தேவனுடைய பாதத்தில் அமர்ந்திருந்து செய்கிற ஜெபம், உபவாசித்து செய்கிற ஜெபம், குடும்பமாக செய்கிற ஜெபம், கர்த்தருடைய பிள்ளைகளாய் இணைந்து செய்கிற ஜெபம், கர்த்தருடைய சபையாக செய்கிற ஜெபம் என பல வழிகளில் தேவனாகிய கர்த்தரிடத்திலே ஜெபத்தை ஏறெடுப்பது அவசியமாகும்.
நாம் ஜெபம் செய்வதற்கு தேவையான மிக பிரதான காரியம் விசுவாசம். தேவனாகிய கர்த்தரை, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ஜெபிக்க வேண்டும் என்பதையே பரிசுத்த வேதம் போதிக்கிறது:
(எபிரெயர் 11:6) விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.
மேலும், நாம் ஜெபிக்கவே முடியாத மனநிலையில், நம்மை விசுவாசத்தில் பெலப்படுத்தி, ஜெபத்திற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிற ஒரே காரியம் பரிசுத்த வேதத்தை வாசிப்பதும், தியானிப்பதும் ஆகும். இதற்கு மாற்றாக வேறொரு காரியம் இல்லை. எனவே நாம் பரிசுத்த வேதத்தை வாசிக்கும் போது, தியானிக்கும் போது பரிசுத்த ஆவியானவர் நமக்குள் பலமாக, மகிமையாக கிரியை செய்வதையும், அந்த துன்ப நேரத்தை, வாழ்வின் கடின நேரங்களை வெற்றி கொள்ள நமக்கு பிரத்தியட்சமாக உதவி செய்து நம்மை ஜெயங்கொள்ள வைப்பதையும் நாமே கண்கூடாக கண்டு, உணர்ந்து, அனுபவிக்க செய்து, நம்மை கர்த்தருக்கு சாட்சியாக இருக்க வைப்பார்.
(ரோமர் 8:26) அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
பரிசுத்த வேதத்திலிருந்து சில வசனங்களின் மூலமாக,, இப்படிப்பட்ட துன்ப நேரங்களில், நெருக்கப்படுகிற நேரங்களில் ஏறெடுக்கப்பட்ட ஜெபங்களிலிருந்து நாம் நம் ஜெபத்திற்கான கர்த்தருடைய ஆலோசனையை அவருடைய ஆவியானவர் மூலமாக அறிந்து கொள்ளுவோம்.
(சங்கீதம் 142:1) கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன்.
(சங்கீதம்142:2) அவருக்கு முன்பாக என் சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; அவருக்கு முன்பாக என் நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்.
(2 நாளாகமம் 33:12) இப்படி அவன் நெருக்கப்படுகையில், தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான்.
(2 நாளாகமம் 33:13) அவரை நோக்கி, அவன் விண்ணப்பம்பண்ணிக்கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார்; கர்த்தரே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான்.
(சங்கீதம் 18:6) எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று.
(சங்கீதம் 86:7) நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர்.
(யோனா 2:1,2) அந்த மீனின் வயிற்றிலிருந்து, யோனா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.
(யோனா 2:7) என் ஆத்துமா என்னில் தொய்ந்துபோகையில் கர்த்தரை நினைத்தேன்; அப்பொழுது என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத்தில் வந்து சேர்ந்தது.
(எபிரெயர் 5:7) (இயேசு கிறிஸ்து) அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,
ஒரு வேளை, துன்ப நேரங்களில் வாழ்வின் கடின நேரங்களில் நாம் அதுவரை செய்து வந்த ஜெபத்தை உடனே நிறுத்தும் போதும், இனி என்னால் ஜெபிக்க முடியாது, ஜெபிக்க மாட்டேன் என்று சொல்வதும் - நம்மை விழுங்க நினைத்து கெர்ச்சிக்கிற சிங்கம் போல் நம்மை சுற்றித்திரிகிற பிசாசுக்கு முழுமையாக கதவை திறந்து விடுவது போலாகும். இதன் விளைவாக, துன்பங்களும், வாழ்வின் கடின நேரங்களும் நம்மை வென்று விடும். அந்த வெற்றி சில நேரங்களில் நம்மை மட்டுமல்ல, நம் ஆத்துமாவையும் மரணத்திற்கு உள்ளாக்கி விடும். அதாவது நரக அக்கினிக்கு சென்று சேர்வதாகும். இதை விட நம் வாழ்வில் பெரும் நஷ்டம் வேறொன்றில்லை. எனவே, ஜெபம் அவ்வளவு முக்கியமானது.
ஆனால், துன்ப நேரங்களில் நாம் செய்யும் ஜெபத்தின் முடிவிலே நமக்கு ஒரு நம்பிக்கை உண்டு. அது என்ன? பரிசுத்த வேதத்தில் கர்த்தர் சொல்கிறார்:
(சங்கீதம் 50:15) ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.
More Articles …
Subcategories
Messages - Before 2012
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2012க்கு முன்
(Meditation on the Word - God's Message - before 2012)
Messages - 2012
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2012
(Meditation on the Word - God's Message - 2012)
Messages - 2013
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2013
(Meditation on the Word - God's Message - 2013)
Messages - 2014
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2014
(Meditation on the Word - God's Message - 2014)
Messages - 2015
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2015
(Meditation on the Word - God's Message - 2015)
Messages - 2016
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2016
(Meditation on the Word - God's Message - 2016)
Messages - 2017
Lets Meditate Word of God. Messages - 2017
Messages - 2018
Lets Meditate Word of God. Messages - 2018
Messages - 2019
Lets Meditate Word of God. Messages - 2019
Messages - 2020
Lets Meditate Word of God. Messages - 2020
Messages - 2021
Lets Meditate Word of God. Messages - 2021
Messages - 2022
Lets Meditate Word of God. Messages - 2022
Messages - 2023
Lets Meditate Word of God. Messages - 2023
Messages - 2024
Lets Meditate Word of God. Messages - 2024
Messages - 2025
Lets Meditate Word of God. Messages - 2025
Page 9 of 11
Thou art my King, O God. (Ps 44:4)
Pray

இஸ்ரவேலின் சமாதானத்துக்காக, பாதுகாப்பிற்காக தேவனிடத்தில் வேண்டிக்கொள்வோம்...
எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்;உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. (சங்கீதம் 122:6-7)
வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம். (சங்கீதம் 48:2)
...எருசலேமின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம். (மத்தேயு 5:35)