இன்றைய பரிசுத்த வேத வசனம்
தேவனுடைய வார்த்தையை பற்றிக்கொண்டு விசுவாசத்தோடு ஜெபித்து கிறிஸ்து இயேசுவுக்குள் ஜெயங்கொள்ளுவோம்:
என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற்போனார்கள். (சங்கீதம் 129:2)You may check
Meditation on the Word of God...Food for your soul: Meditation >> Lets Meditate
பரிசுத்த வேத தியானம்
(Let's Meditate Word of God)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
புத்தாண்டு தேவ செய்தி - 2015
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
....கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. (சங்கீதம் 105:3)
உங்கள் அனைவருக்கும் அன்பின் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். இந்த புதிய ஆண்டிலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாம் இன்னும் அதிகமாய் தேடி தொழுது கொள்ளுவோம், அவர் பாதம் பணிந்து ஆராதிப்போம். அவருடைய கட்டளைகளை, கற்பனைகளை கைக்கொண்டு அவரில் இன்னும் அன்பு கூறுவோம். அப்பொழுது மேற்கண்ட வாக்குத்தத்தத்தின் படி நம் ஆவி, ஆத்துமா ஏன் சரீரமும் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிழும்.
மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்தின் படி, வாக்குத்தத்தத்தின் படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தேடுவது என்றால் என்ன, தேடி கண்டடைதல் எப்படி, கண்டடையும் போது நடப்பது என்ன என்பதையெல்லாம் பரிசுத்த வேத வசனங்களின் படி நாம் சற்று தியானிப்போம்.
1) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தேட பரிசுத்த வேதம் கூறும் வழி அல்லது முதல் ஆலோசனை என்ன?
என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். (நீதிமொழிகள் 8:17)
மேற்கண்ட ஆலோசனையின் படிஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தேட நாம் செய்ய வேண்டியது அதிகாலையில் பரிசுத்த வேத தியானமும், ஜெபமும்.
நான் உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என்முகத்தை அவருக்கு நேராக்கி, (தானியேல் 9:3)
2) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தேட பரிசுத்த வேதம் இரண்டாம் ஆலோசனை என்ன?
கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். (ஏசாயா 55:6)
அப்படியானால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எப்பொழுது நமக்கு மிக சமீபத்தில் அல்லது மிக அருகிலிருக்கிறார்?
தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார். (சங்கீதம் 145:18)
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை, உண்மையாய் உள்ளத்தின் ஆழத்திலிருந்து, முழு உள்ளத்தோடு தேடும் போது அவர் நம்மோடு இடைப்படுவார், நம்மோடு பேசுவார், தம்மை நமக்கு வெளிப்படுத்துவார்.
3) நாம் தேடும் போது அவர் என்ன செய்கிறார்?
நான் அந்தரங்கத்திலும், பூமியின் அந்தகாரமான இடத்திலும் பேசினதில்லை; விருதாவாக என்னைத் தேடுங்களென்று நான் யாக்கோபின் சந்ததிக்குச் சொன்னதுமில்லை; நான் நீதியைப்பேசி, யதார்த்தமானவைகளை அறிவிக்கிற கர்த்தர். (ஏசாயா 45:19)
ஆண்டவர் இயேசு கிறிஸ்து, தம்முடைய நீதியை, தம்முடைய வழிகளை, நம்மைக் குறித்த அவருடைய சித்தத்தை, இன்னும் நம் ஆவிக்குரிய, பூமிக்குரிய வாழ்க்கைக்கு தேவையான அனைத்து காரியங்களையும் நமக்கு வெளிப்படுத்தி, போதிப்பார். ஆலோசனை தருவார். வழிநடத்துவார். மட்டுமல்ல, தம்முடைய இரண்டாம் வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்துவார்.
4) நாம் அவரை தேடும் போது, நாம் நிச்சயமாகவே அவரை கண்டடைவோம் என்பதைக் குறித்து பரிசுத்த வேதம் நமக்கு உறுதி அளிக்கிறது. மட்டுமல்ல, நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தேடும் பொழுது அவர் நமக்கு எப்படிப்பட்டவராய் இருக்கிறார்?
உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள். (எரேமியா 29:13)
தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். ... (யாக்கோபு 4:8)
மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். (லூக்கா 11:9)
ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். (லூக்கா 11:10)
கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள். (சங்கீதம் 9:10)
தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர். (புலம்பல் 3:25)
எனவே, மேற்சொன்ன படி இந்த புதிய ஆண்டில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை இன்னும் அதிகமதிகமாய் தேடி அவரை இன்னும் நெருங்கி சேருவோம். அப்பொழுது அவர் நம்மை தம் மார்போடு அணைத்துக் கொண்டு, நம்மை தம்மைப் போல மறுருபப்படுத்துவார். அப்பொழுது, நம் இருதயம் வாழும், மகிழும், அப்பொழுது நாமும் அறிக்கை செய்வோம்:
என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது. (லூக்கா 1:47)
அப்பொழுது
....தேவனைத் தேடுகிறவர்களே, உங்கள் இருதயம் வாழும். (சங்கீதம் 69:32)
பரிசுத்த வேத தியானம்
(Let's Meditate Word of God)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
பந்தய பொருள்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள். (கொலோசெயர் 2:19)
மேற்கண்ட பரிசுத்த வேத வசனம் ஒரு மிக முக்கிய எச்சரிக்கையை நமக்கு தெள்ளத் தெளிவாக உரைக்கிறது. அது " நீங்கள் வஞ்சிக்கப்பட இடங்கொடுத்து, உங்கள் பந்தய பொருளை இழந்துவிடாதிருங்கள் " என்பதே.
இந்த உலக வாழ்க்கையிலே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய பரிசுத்த வேத வசனங்களின் மூலமாய் அதாவது நற்செய்தியினாலே, சுவிசேஷத்தினாலே இரட்சிக்கப்பட்ட பின்பு, நம் மரணம் அல்லது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரை வாழும் இந்த உலக வாழ்க்கை ஓடி ஜெயிக்க வேண்டிய ஒரு ஓட்டம். அதாவது ஜெயமாக ஓடி முடித்து அதன் பரிசை, பந்தய பொருளை (Prize / Reward) பெற்றுக்கொள்கிற ஓட்டம். அந்த பந்தய பொருள் அல்லது பரிசு என்பது நம் ஆத்துமா ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு என்றென்றும், நித்தியகாலமாக வாழும் படியாக நித்திய ஜீவனை (Eternal Life)பெற்றுக் கொள்வதே ஆகும். அதாவது நம் ஆத்துமா என்றென்றைக்குமான நித்திய நரக அக்கினி தண்டணைக்கு ஆளாகிவிடாமல், நம் ஆத்துமா நித்திய ஜீவனுக்குள் சென்று சேர்வதாகும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே இதை கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்களில் விளக்கி இருக்கிறார்:
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? (மத்தேயு 16:26)
மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத் தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? (லூக்கா 9:25)
மட்டுமல்ல
நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார். (2 தீமோத்தேயு 4:7-8)
பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம். ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன். (1 கொரிந்தியர் 9:24-26)
மற்றுமொரு பரிசுத்த வேத வசனம் சொல்கிறது:
மாயக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், தேவன் அவன் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது, அவன் நம்பிக்கை என்ன? (யோபு 27:8)
அப்படியானால், நாம் செய்ய வேண்டியதை பரிசுத்த வேத வசனம் நமக்கு விளக்கி சொல்கிறது, அது என்ன?
கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். (பிலிப்பியர் 3:14)
உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள். (2 யோவான் 1:8)
ஆனால், இவ்வளவு முக்கியமான இந்த பந்தய பொருளை நாம் பெற்றுக்கொள்ளாதபடி, அதை நாம் இழந்து விடும்படியாக நாம் வஞ்சிக்கப்பட்டு போகும் பெரும் ஆபத்து நமக்கு முன்னால் இருக்கிறதைக் குறித்து பரிசுத்த வேதத்திலே நமக்கு திட்டமும் தெளிவுமாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, யார் யார் நம்மை வஞ்சிப்பார்கள், எப்படி அல்லது என்ன விதத்தில் நம்மை வஞ்சிப்பார்கள் என்பதை கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்கள் நமக்கு விளக்கி போதிக்கிறதை நாம் கருத்தோடு கவனிப்போம்.
ஒருவனும் நயவசனிப்பினாலே உங்களை வஞ்சியாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன். (கொலோசெயர் 2:4)
லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல. (கொலோசெயர் 2:8)
கணுக்களாலும் கட்டுகளாலும் உதவிபெற்று இணைக்கப்பட்டு, தேவவளர்ச்சியாய் வளர்ந்தேறுகிற சரீரமுழுவதையும் ஆதரிக்கிற தலையைப் (இயேசு கிறிஸ்துவை) பற்றிக்கொள்ளாமல், மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள். (கொலோசெயர் 2:18-19)
ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். (மத்தேயு 24:24)
அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள். (ரோமர் 16:17-18)
ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன். (2 கொரிந்தியர் 11:3)
இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; (எபேசியர் 5:6)
விசேஷமாக அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்களை அப்படிச் செய்வார். இவர்கள் துணிகரக்காரர், அகங்காரிகள், மகத்துவங்களைத் தூஷிக்க அஞ்சாதவர்கள். இவர்களோ பிடிபட்டழிக்கப்படுவதற்கு உண்டான புத்தியற்ற மிருகஜீவன்களைப்போலத் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷித்து, தங்கள் கேட்டிலே கெட்டழிந்து, அநீதத்தின் பலனை அடைவார்கள். இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி, கறைகளும் இலச்சைகளுமாயிருந்து; உங்களோடே விருந்துண்கையில் தங்கள் வஞ்சனைகளில் உல்லாசமாய் வாழ்கிறவர்கள்; விபசாரமயக்கத்தால் நிறைந்தவைகளும், பாவத்தை விட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையுடையவர்கள்; உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாய்ப் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் பிள்ளைகள். (2 பேதுரு 2:10,12-14)
இந்த சூழ்நிலையில், மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்தின்படியான மக்களை அடையாளம் கண்டுகொள்வது எப்படி? தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் ஒருவரே நம் நம்பிக்கை. நம் பாதுகாப்பு.
பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். (1 யோவான் 4:1)
மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. (1 யோவான் 4:3)
மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான். (2 யோவான் 1:7)
மேலும்,
தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. (1 யோவான் 4:2)
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே நமக்கு போதிக்கிறபடி, உண்மையாய் முடிவு வரை நம் ஆத்துமாவை குறித்து, நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வதைக் குறித்து ஜாக்கிரதையாய் இருப்போம். அதற்கு நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே, பரிசுத்த ஆவியானவர் தாமே முடிவு வரை நமக்கு உதவி செய்வாராக. ஆமென்.
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு. (வெளிப்படுத்தின விசேஷம் 3:11)
....ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன். (வெளிப்படுத்தின விசேஷம் 2:10)
பரலோகத்திலிருந்து இறங்கினவர்
தேவ செய்தி - மார்ச் 2016 (Message - Mar 2016)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. (யோவான் 3:13)
பரலோகத்திலிருந்து எதற்காக தேவ குமாரனாம் இயேசு கிறிஸ்து இறங்கி வந்தார்? அவரே சொல்கிறார்:
என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன். (யோவான் 6:38)
தேவ குமாரனாம் இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்ததின் ஒரே நோக்கம் பிதாவாகிய தேவனுடைய சித்தம் நிறைவேற்றவே.
அப்படியானால் பிதாவின் சித்தம் என்ன ? அவர் விருப்பம் என்ன? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே சொன்ன பதில்:
அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது. குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார். (யோவான் 6:39-40)
இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல. (மத்தேயு 18:14)
அப்படியானால், பிதாவாகிய தேவனுடைய ஒரே பேரான சொந்தக் குமாரன், பிள்ளை, பரலோகத்திலிருந்து இறங்கின இயேசு கிறிஸ்து. பிதாவின் சித்தத்தை எப்படி நிறைவேற்றினார், தம்மை என்னென்ன காரணங்களுக்காக அல்லது எப்படியெல்லாம் ஒப்புக்கொடுத்தார்? கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்கள் மூலமாக அவற்றில் சிலவற்றை பார்ப்போம்:
1) முதல் மனிதன் ஆதாம் பாவம் செய்ததினால், தன்னை படைத்த தேவனோடு இருந்த அன்பின் உறவை முழு மனுக்குலமும் இழந்து விட, தம் இரத்தத்தினாலே அந்த உறவை மீண்டும் ஏற்படுத்தி பிதாவாகிய தேவனோடு மனிதனை ஒப்புரவாக்கி அந்த அன்பின் உறவிலே நிலைநிறுத்த.
அவர் (இயேசு) சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. (கொலோசெயர் 1:20)
அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ... (2 கொரிந்தியர் 5:19)
2) முதல் மனிதன் பாவம் செய்ததினால் பிசாசின் கையில் இழந்துவிட்ட, சபிக்கப்பட்ட இந்தப் பொல்லாத உலகத்திலிருந்து மனுக்குலத்தை விடுவிக்க.
அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; (கலாத்தியர் 1:4)
3) மனுக்குலத்தை தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்யப் பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் தம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கும்படி, தம்மை ஒப்புக்கொடுத்தார்.
அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்யப் பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். (தீத்து 2:14)
4) மனுக்குலத்தை பாவத்திலிருந்து, பாவத்திற்கான நித்திய நரக தண்டனையிலிருந்து மீட்கும்படியாக தம் ஜீவனையே கொடுக்க தம்மை ஒப்புக்கொடுத்தார்.
அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். (மத்தேயு 20:28)
5) மனிதன் பாவம் செய்த போதெல்லாம் ஒரு மிருகத்தை கொன்று அதின் இரத்தத்தால் பாவம் பரிகரிக்கப்படுகிற பழைய ஏற்பாட்டை, உடன்படிக்கையை நீக்கி பாவ்மில்லாத தன் பரிசுத்த இரத்தத்தினால் புதிய ஏற்பாட்டை, உடன்படிக்கையை ஏற்படுத்த பழுதற்ற பலியாக (எபிரெயர் 9:14), கிருபாதார பலியாக (1 யோவான் 2:2) தம் இரத்தத்தை சிந்த ஒப்புக்கொடுத்தார்.
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. (மாற்கு 14:24)
6) மரணத்திற்கு அதிகாரியாகிய பிசாசை, தம் சிலுவை மரணத்தினாலே அழித்து, மனுக்குலத்தை மரண பயத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க, மனிதனைப் போலவே இரத்தமும் சதையும் உள்ளவராக இந்த உலகிற்கு வர ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னை ஒப்புக்கொடுத்தார்.
ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். (எபிரெயர் 2:14-15)
7) பிசாசின் அல்லது சாத்தானின் கிரியைகளை - அதாவது பாவம், சாபம், மனிதனின் மரணம் மற்றும் தேவன் மனிதனைப் படைத்த போது அவனுக்கு அளித்த சகல நன்மைகளை, ஆசீர்வாதங்களை, ஜெயத்தை, பூமி மற்றும் அதிலுள்ளவைகளை ஆளுகிற ஆளுகையை திருடுகிற, அழிக்கிற மற்றும் மனிதனின் ஆத்துமாவை கொல்லுகிறதான சாத்தானின் இந்தக் கிரியைகளையெல்லாம் அழிக்க ஆண்டவர் இயேசு கிறிஸ்து பரலோகத்திலிருந்து இறங்கி வந்தார்.
...ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான்; பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். (1 யோவான் 3:8)
இப்படியாக, பரலோகத்திலிருந்து இறங்கி வந்த பிதாவாகிய தேவனுடைய ஒரே பேரான சொந்தப் பிள்ளை இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக, மீட்பராக, கர்த்தராக விசுவாசிக்க மறுத்தால், மறுதலித்தால் அதன் விளைவு நினைத்துப் பார்க்க முடியாத மாபெரும் பயங்கரமாகவே இருக்கிறது, அது:
அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. (யோவான் 3:18)
குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். (யோவான் 3:36)
அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான். (யோவான் 5:22-23)
பிதாவாகிய தேவனை விசுவாசித்து, அவர் அனுப்பின அவருடைய ஒரே பேரான சொந்தப் பிள்ளை இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து தன் சொந்த இரட்சகராக, மீட்பராக, கர்த்தராக ஏற்றுக் கொண்டால்:
என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான் 5:24)
சுவிசேஷத்தினாலே
தேவ செய்தி - ஏப்ரல் 2016 (Message - Apr 2016)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
.... (இயேசு கிறிஸ்து) அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார். (2 தீமோத்தேயு 1:10)
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, சிலுவையில் இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததினாலே, அதாவது மனித குலத்தின் மரண பயத்தை நீக்கும்படியாக தம்முடைய சிலுவை மரணத்தினாலே மரணத்தை பரிகரித்தார். அதாவது, மரணத்தின் வல்லமையை ஒன்றுமில்லாமல் செய்து மரணத்திற்கு ஒரு முடிவுண்டாக்கினார். இதை மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்தின் முதல் பகுதி நமக்கு விளக்குகிறது. இதை பரிசுத்த வேதம் அடுத்து வரும் வசனங்களில் தெள்ளத் தெளிவாக நமக்கு போதிக்கிறது.
ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். (எபிரெயர் 2:14-15)
இச்செய்தியின் தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள பரிசுத்த வேத வசனத்தின் இரண்டாம் பகுதி, மேலும் ஒரு உண்மையின் உச்சத்தை அதாவது சத்தியத்தை நமக்கு போதிக்கிறது. அது, இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மரணத்தை பரிகரித்ததின் பலனை இவ்வுலக மக்கள் அதாவது மனுக்குலம் முழுதும் பெற்று அனுபவிக்க மிக எளிமையான வழியை நமக்கு ஏற்படுத்தினார். அது என்ன வழி?
கர்த்தரும், இரட்சகரும், மீட்பரும், ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவை பற்றிய சுவிசேஷத்தின் மூலமாக அதை எல்லோருக்கும் உரியதாக வெளியரங்கமாக்கினார். இப்படி வெளியரங்கமாகப்பட்ட சுவிசேஷத்தை நம்பி, ஏற்றுக்கொண்டு விசுவாசிப்பதன் மூலம் மனுக்குலமும் மரண பயத்தை, மரணத்தை வென்று ஜீவனையும், அழியாமையையும் பெற்றுக் கொண்டு என்றென்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு அவருடைய ராஜ்யத்தில் வாழலாம்.
அப்படியானால், சுவிசேஷம் என்றால் என்ன? சுவிசேஷம் என்ற வார்த்தைக்கு நற்செய்தி என்பது அர்த்தம். சுவிசேஷத்தை ஒற்றை வரியில் விளக்கி சொல்வதானால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை, அவருடைய போதனைகளை குறித்து பரிசுத்த வேதத்தில் சொல்லப்பட்டுள்ள யாவும் சுவிசேஷமே.
பரிசுத்த வேதத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியிலும், புதிய ஏற்பாட்டு பகுதியிலும் இந்த சுவிசேஷம் நிறைந்து இருக்கிறது. பரிசுத்த வேதத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் எப்படி வந்து பிறப்பார், எங்கு பிறப்பார், எப்பொழுது பிறப்பார் என்று அவருடைய பிறப்பைக் குறித்த காரியங்கள், அவருடைய வளர்ப்பு, அவருடைய ஊழியம் - அதாவது மக்களுக்கு அவர் செய்த நன்மைகள், அதிசயங்கள், அற்புதங்கள் என அவருடைய ஊழியம், சிலுவையில் அவர் படப்போகும் பாடுகள், அந்த பாடுகளினால் உலக மக்களுக்கு உண்டாகும் மாபெரும் பாக்கியங்கள், சிலுவையில் அவருடைய இறப்பு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுதல், இந்த உலகத்திற்கு அவர் மீண்டும் வருகிற அவருடைய இரண்டாம் வருகை, அதைத் தொடர்ந்து இந்த பூமியில் அவர் ஆட்சி செய்து அமைக்கப் போகும் அவருடைய ராஜ்யம் - அரசாங்கம் என இவை அனைத்தும் தீர்க்கதரிசனங்களாக முன்னறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மற்றும் பூமியில் அவருடைய ஆளுகை மட்டுமே இனிமேல் நிறைவேறப் போகிறது. இதைத் தவிர ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை குறித்து முன்னறிவிக்கப்பட்ட யாவும் நிறைவேறிற்று.
பரிசுத்த வேதத்தின் புதிய ஏற்பாட்டுப் பகுதியில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தாமே போதித்த அவருடைய போதனைகள் மிக விசேஷமானவைகள். அதைத் தொடர்ந்து அவருடைய இரண்டாம் வருகை, பூமியில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆளுகையை குறித்து இன்னும் ஏராளமான காரியங்கள் நமக்கு வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இவை யாவுமே சுவிசேஷமே. இந்த சுவிசேஷத்தை பல விதங்களில் முக்கியப்படுத்தி, பெயரிட்டு பரிசுத்த வேதம் நமக்கு போதிக்கிறது. அவைகளில் சிலவற்றை கீழ்க்கண்ட வசனங்களின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
இயேசுகிறிஸ்துவைப்பற்றிய பிரசங்கமாகிய என் சுவிசேஷத்தின்படியே ... (ரோமர் 16:26)
தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம். (மாற்கு 1:1)
இயேசுகிறிஸ்துவைக்குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர், (ரோமர் 1:4)
...தமது குமாரனுடைய சுவிசேஷத்தினாலே என் ஆவியோடு நான் சேவிக்கிற தேவன் எனக்குச் சாட்சியாயிருக்கிறார். (ரோமர் 1:9)
மேலும், சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார். (கலாத்தியர் 1:11-12)
....சத்தியவசனமாகிய சுவிசேஷத்தினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்தச் சுவிசேஷம் உலகமெங்கும் பரம்பிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக் கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன்தருகிறதாயிருக்கிறது; (கொலோசெயர் 1:6)
...சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே. (ரோமர் 10:15)
...அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள். (லூக்கா 16:16)
எனவே மரணத்தை ஜெயித்து, ஜீவனையும், அழியாமையையும் நாம் பெற்றுக்கொள்ள நாம் செய்ய வேண்டியதெல்லாம் இந்த சுவிசேஷத்தை நம்பி, விசுவாசித்து ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் போதனையின்படி, பரிசுத்த வேதத்தின் படி முடிவு வரை நாம் நடப்பதே. அதையே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் சொல்கிறார்:
காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார். (மாற்கு 1:15)
ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 8:51)
என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான் 5:24)
மட்டுமல்ல, நாம் பெற்ற இந்த பெரும் பாக்கியத்தை மற்றவர்களும் பெற்றுக் கொள்ளும்படியாக நாம் செய்ய வேண்டியதையும் ஆண்டவர் இயேசு தாமே நமக்கு போதிக்கிறார்:
பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். (மாற்கு 16:15)
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை நம்பி விசுவாசித்து, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக, கர்த்தராக, தெய்வமாக ஏற்றுக்கொள்ள விரும்பாதவர்கள், தங்களுக்கு ஜீவன் அதாவது நித்திய ஜீவன், அழியாமை உண்டாக விருப்பம் இல்லாதவர்கள். எனவே தான், ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொன்னார்:
அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை. (யோவான் 5:40)
எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும். (2 கொரிந்தியர் 4:3)
வேறொரு சுவிசேஷம் இல்லையே; ... (கலாத்தியர் 1:7)
ஏனெனில், சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது; கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை. (எபிரெயர் 4:2)
எனவே, தேவ கிருபையினாலே
...அந்தச் சுவிசேஷம் உலகமெங்கும் பரம்பிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக் கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன்தருகிறதாயிருக்கிறது; (கொலோசெயர் 1:6)
இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. (யோவான் 20:31)
வேர் கனி கொடுக்கும்
தேவ செய்தி - டிசம்பர் 2016 (Message - Dec 2016)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
... நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும். (நீதிமொழிகள் 12:12)
சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு எதிரான, அவருடைய பரிசுத்த வேதம் போதிக்கும் அவருடைய வழிகளுக்கு எதிரான ஒரு நிலையிலிருந்து - அதாவது தேவனாகிய கர்த்தரை, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறியாத நிலையிலிருந்து, மனம் போன போக்கில் தன் இஷ்டப்படி வாழ்ந்து பாவம் செய்து வாழ்கிற நிலையிலிருந்து நீதிமான் என்ற நிலைக்கு வருவதெப்படி? நீதிமானாக ஆவது எப்படி? பரிசுத்த வேதம் இதை நமக்கு விளக்கிச் சொல்கிற சில வசனங்களை கீழே காண்போம்:
- கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார். (ரோமர் 3:26)
- அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை. (ரோமர் 3:22)
- விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார். (ரோமர் 10:4)
- இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். (ரோமர் 5:1)
- விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது. (ரோமர் 1:17)
- உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள். (1 கொரிந்தியர் 6:11)
கல்வாரி சிலுவையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து "என் பாவ, சாப, நோய்கள் எல்லாவற்றையும் தன் மீது ஏற்றுக்கொண்டு தன் பரிசுத்த இரத்தத்தை சிலுவையில் சிந்தி என் பாவத்தின் தண்டனைக்கு தன்னை பலியாக்கி, என் பாவ, சாப, நோய்கள் எல்லாவற்றிற்கும் பரிகாரம் செய்து, என் மீதிருந்த பிசாசின் கிரியைகளை அழித்து ஜெயங்கொண்டு என்னை மீட்டார்" என்று முழு மனதோடு நம்பி விசுவாசித்து - ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக, மீட்பராக, தெய்வமாக ஏற்றுக்கொள்ளும் போது தேவ கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு நாம் இயேசு கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாக்கப்படுகிறோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்காக எல்லா நீதியையும், நியாயப் பிரமாணத்தையும் நிறைவேற்றி முடித்து, அவரே நம்முடைய நீதியாயிருக்கிறார். இதையே மேற்கண்ட பரிசுத்த வேத வசனங்கள் போதிக்கின்றன. இங்கே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை, அவர் நமக்காய் சிலுவையில் செய்து முடித்தவைகளை நம்பி விசுவாசித்து ஏற்றுகொள்வதை தவிர நாம் வேறு எதையும் செய்யவில்லை. நாம் இதற்கு எந்த விலையும் கொடுக்கத் தேவையில்லை. தேவ கிருபையால், ஆண்டவர் இயேசுவின் இரத்தத்தால் எல்லாம் இலவசமாய், மிக எளிமையான வழியில் நமக்கு அருளப்பட்டிருக்கிறது. இப்படியாகவே நாம் இருக்கும் எந்த நிலையிலிருந்தும் இயேசு கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாக்கப்படுகிறோம். அவரே நம்முடைய நீதியாயிருக்கிறார்.
- இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; (ரோமர் 3:24)
- ... அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்பதே. (எரேமியா 23:6)
- அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார். (1 கொரிந்தியர் 1:31)
இந்நிலையில், ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார்:
- முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். (மத்தேயு 24:13)
அப்படியானால், நீதிமான்களாக்கப்பட்ட நாம் கடைசிவரை அந்தக் கிருபையை தக்கவைத்து காத்துக்கொள்வது எப்படி? பரிசுத்த வேதத்தில் கர்த்தரே இதற்கு பதில் அளித்திருக்கிறார்:
- என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். (எசேக்கியல் 18:9)
ஆகவே, நம் ஆயுளின் முடிவு வரை அல்லது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும், பரிசுத்த வேதத்தின் படி நடந்து, ஆண்டவர் இயேசுவின் போதனைகளைக் கைகொண்டு அவருக்கு முன்பாக உண்மையாய் நடந்து கொள்ளும் போது, கர்த்தரே நம்மை நீதிமான் என்று அழைத்து நம்மை பரலோகம் கொண்டு சேர்ப்பார், அங்கே நமக்கு பலன் அளிப்பார்.
இப்படியாக நாம் இந்த பூமியில் நீதிமான்களாக வாழும் போது நாம் கனி கொடுக்கிறவர்களாக இருப்போம் என்று பரிசுத்த வேதம் சொல்கிறது:
- ... கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள். (ஏசாயா 37:31)
அது என்ன கனி? அது ஆவியின் கனிகள், அவைகள் :
- ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; ... (கலாத்தியர் 5:22-23)
ஒரு மரம் அதன் கனியைத் தருவது என்பது சரி, நாம் எப்படி கனி கொடுக்க முடியும்? கனி கொடுப்பது என்றால் என்ன?அதற்கும் பரிசுத்த வேதம் பதில் தருகிறது.
- ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். (எபேசியர் 5:9)
- நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம். (ஏசாயா 32:17)
அந்தக் கனிகள் பரிசுத்த ஆவியானவரால் நமக்கு அருளப்பட்டு, அவைகள் நமக்குள்ளிருந்து நல்ல குணமாக, நீதியாக, உண்மையாக வெளிப்படும். இதையே பரிசுத்த வேதம் கனி கொடுப்பது என்றழைக்கிறது.
இப்படியாக, நாம் நீதிமான்களாக இந்த உலகத்தில் வாழும்போது, இந்த உலகத்திலேயும் தேவன் நமக்கு அருளும் ஆசீர்வாதங்கள், பலன்களில் சிலவற்றை கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்களின் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம்.
- கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனி கொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான். (எரேமியா 17:7-8)
- துன்மார்க்கருடைய புயங்கள் முறியும்; நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார். (சங்கீதம் 37:17)
- நீதிமான் கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்; செம்மையான இருதயமுள்ளவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள். (சங்கீதம் 64:10)
- அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன். (சங்கீதம் 112:6)
- ... நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார். (சங்கீதம் 146:8)
- நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும். (நீதிமொழிகள் 4:18)
- நீதிமான்களுடைய ஆசை நன்மையே; ...(நீதிமொழிகள் 11:23)
- துன்மார்க்கத்தினால் மனுஷன் நிலைவரப்படான்; நீதிமான்களுடைய வேரோ அசையாது. (நீதிமொழிகள் 12:3)
- நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள். (நீதிமொழிகள் 24:16)
- ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள். (நீதிமொழிகள் 28:1)
- ...ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை. (ஏசாயா 57:1)
ஒருவேளை, மேற்கண்டபடி தேவ கிருபையினால் நாம் நீதிமான்களாக்கப்பட்டு ஆனால் சில காலங்களுக்கு பிறகு மீண்டும் துணிந்து பாவம் செய்து வழி தப்பி, பின் வாங்கிப்போவோமானால் நம் முடிவைக் குறித்து தேவனாகிய கர்த்தர் பரிசுத்த வேத வசனங்களின் மூலமாக எச்சரித்து சொல்கிறார்:
- விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார். (எபிரெயர் 10:38)
- நீதிமான் தன் நீதியைவிட்டுத் திரும்பி, அநியாயஞ்செய்தால், அவன் அதினால் சாவான். (எசேக்கியல் 33:18)
- மனுபுத்திரனே, நீ உன் ஜனத்தின் புத்திரரை நோக்கி: நீதிமான் துரோகம்பண்ணுகிற நாளிலே அவனுடைய நீதி அவனைத் தப்புவிப்பதில்லை; துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்தைவிட்டுத் திரும்புகிற நாளிலே அவன் தன் அக்கிரமத்தினால் விழுந்துபோவதுமில்லை; நீதிமான் பாவஞ்செய்கிற நாளிலே தன் நீதியினால் பிழைப்பதுமில்லை. (எசேக்கியல் 33:12)
- நீதிமான் தன் நீதியைவிட்டு விலகி, அநீதிசெய்து அதிலே செத்தால், அவன் செய்த தன் அநீதியினிமித்தம் அவன் சாவான். (எசேக்கியல் 18:26)
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால், அவருக்குள் முடிவு வரை நீதிமான்களாய் வாழ அவரே நமக்கு கிருபை செய்வாராக. ஆமென்.
- அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன். (மத்தேயு 13:43)
More Articles …
Subcategories
Messages - Before 2012
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2012க்கு முன்
(Meditation on the Word - God's Message - before 2012)
Messages - 2012
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2012
(Meditation on the Word - God's Message - 2012)
Messages - 2013
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2013
(Meditation on the Word - God's Message - 2013)
Messages - 2014
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2014
(Meditation on the Word - God's Message - 2014)
Messages - 2015
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2015
(Meditation on the Word - God's Message - 2015)
Messages - 2016
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2016
(Meditation on the Word - God's Message - 2016)
Messages - 2017
Lets Meditate Word of God. Messages - 2017
Messages - 2018
Lets Meditate Word of God. Messages - 2018
Messages - 2019
Lets Meditate Word of God. Messages - 2019
Messages - 2020
Lets Meditate Word of God. Messages - 2020
Messages - 2021
Lets Meditate Word of God. Messages - 2021
Messages - 2022
Lets Meditate Word of God. Messages - 2022
Messages - 2023
Lets Meditate Word of God. Messages - 2023
Messages - 2024
Lets Meditate Word of God. Messages - 2024
Messages - 2025
Lets Meditate Word of God. Messages - 2025
Page 8 of 11
Thou art my King, O God. (Ps 44:4)
Pray

இஸ்ரவேலின் சமாதானத்துக்காக, பாதுகாப்பிற்காக தேவனிடத்தில் வேண்டிக்கொள்வோம்...
எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்;உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. (சங்கீதம் 122:6-7)
வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம். (சங்கீதம் 48:2)
...எருசலேமின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம். (மத்தேயு 5:35)