IST (GMT+5.5)

இந்த வார தியானம்Sharon Rose Ministries

(Meditation for the Week)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


வந்து சேர்ந்தேன்


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

அந்நாட்களில் இருக்கும் ஆசாரியனிடத்தில் சென்று, அவனை நோக்கி: கர்த்தர் எங்களுக்குக் கொடுக்க நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் வந்து சேர்ந்தேன் என்று இன்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அறிக்கையிடுகிறேன் என்பாயாக. (உபாகமம் 26:3)

தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலின் முற்பிதாக்களுக்கு வாக்குப் பண்ணினபடியே, இஸ்ரவேல் ஜனங்களை நாற்பது வருடமாய் நடத்தி இறுதியில் வாக்குப்பண்ணப்பட்ட கானான் தேசத்தில் கொண்டு வந்து சேர்த்து அதில் அவர்கள் வாசம்பண்ணும் பொழுது இப்படி செய்யச் சொல்லி கட்டளையிடுகிறார். இதை பரிசுத்த வேதத்தில் உபாகமம் 26:1-11 என்ற பகுதியில் காணலாம். அதாவது தேவனாகிய கர்த்தர் வாக்குப் பண்ணினபடியே செய்து முடிக்க, அதின் பலனை அனுபவிக்கும் போது மறவாமல் " வாக்குப்பண்ணி இதை செய்து முடித்தவர் தேவனாகிய கர்த்தரே என்று அறிக்கை செய்து, அதை நினைவு கூர்ந்து கர்த்தர் கொண்டு வந்து சேர்த்த தேசத்தின் நிலத்தில் பயிரிடும்போது அதன் முந்தின பலனை கர்த்தருக்கு செலுத்தி நன்றி செலுத்த" தேவனாகிய கர்த்தர் கட்டளையிடுகிறார்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் இதைக்குறித்து பரிசுத்த வேதத்தில் கூறியிருப்பதை நாம் காணமுடியும். முதலாவதாக குஷ்டரோகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனை  (மத்தேயு 8:1-4) (லூக்கா 5:12-14) ஆண்டவர் இயேசு அற்புதமாய் குணமாக்கின பின்பு இப்படியாக கூறினார்:

இயேசு அவனை நோக்கி: ... ஆயினும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார். (மத்தேயு 8:4)

அவர் அவனை நோக்கி: ... போய், உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டபடியே, அவர்களுக்குச் சாட்சியாகப் பலி செலுத்து என்று கட்டளையிட்டார். (லூக்கா 5:14)

பரிசுத்த வேதத்தில், குஷ்டரோகத்தால் பாதிக்கப்பட்ட பத்து மனிதர்களை (லூக்கா 17:11-19) ஆண்டவர் இயேசு அற்புதமாய் சுகமாக்கின பின்பு, அந்த பத்து பேரில் ஒரே ஒரு மனுஷன் மட்டும் வந்து அவருக்கு நன்றி செலுத்திய போது ஆண்டவர் இயேசு உரைத்த திரு வார்த்தைகள் இவை:

தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி, (லூக்கா 17:18)

நம்முடைய வாழ்க்கையிலும், எத்தனையோ முறை ஆண்டவரிடத்தில் அற்புதம், சுகம், விடுதலை, சமாதானம், உதவி  என  இவைகளுக்காய் வேண்டி கொள்ளும் போதெல்லாம் நம் கர்த்தராகிய இயேசு கிருபையாய் இரங்கி, மனதுருகி தம் வாக்குத்தத்தங்கள், வார்த்தைகள் அருளி  எத்தனையோ அற்புதங்களை, உதவிகளை செய்து நம்மை வாழ வைத்து இருக்கிறார். இப்பொழுதும் வாழ வைக்கிறார், இனிமேலும் வாழ வைப்பார். ஆனால், நாம் ஒரு நாளும்  இவைகளை செய்த ஆண்டவருக்கு நன்றி செலுத்த, அவரை மகிமைப் படுத்த, ஆண்டவர் இயேசுவையே உயர்த்தி அறிக்கை செய்ய ஒரு நாளும் தவறக் கூடாது, மறந்து விடவும் கூடாது. கர்த்தர் செய்த அற்புதங்கள், உதவி,  கொடுத்த சுகம், விடுதலை, சமாதானம் இவைகளையும் மறந்து விடக் கூடாது.

தேவனாகிய கர்த்தரின் தாசன் தாவீது மூலமாய் பரிசுத்த ஆவியானவர் இதை  நமக்கு இப்படியாக அறிவுறுத்துகிறார்:

கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்; உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன். (சங்கீதம் 77:11-12)

மட்டுமல்லாமல், குறிப்பாக சோர்வின் நேரங்களிலே, விசுவாசம் குறைந்து போகும் நேரங்களிலே மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்தின்படி நாம் தியானிக்கும் போது உண்மையில் நம் விசுவாசத்தை கர்த்தர் பெருகச் செய்வார். சோர்வுகளை அகல செய்வார். கர்த்தருடைய ஆவியானவர் நமக்கு மிகுந்த உற்சாகம் தந்து தொடர்ந்து நம்மை தேவனுடைய வழியில் அவர் தம் பிள்ளைகளாய் நடத்தி செல்வார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாம் அருளி செய்கிற தம் வாக்குத்தத்தங்கள், வார்த்தைகளை நிறைவேற்றி நம்மை வாழ வைக்கும் போது நாம் அவைகளை மறவாமல் "நீர் வாக்குபண்ணின ஆசீர்வாதங்களுக்குள் வந்து சேர்ந்தேன், அற்புதங்களை பெற்றுக் கொண்டேன் - ஆண்டவரே நான் இன்று உம்மால் வாழ்ந்திருக்கிறேன்" என்று சொல்லி அவர் பாதம் பணிந்து நன்றி செலுத்த வேண்டுமே. காரணம், பரிசுத்த வேதம் இப்படி சொல்கிறது:

....நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள். (கொலோசெயர் 3:15)


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email