IST (GMT+5.5)

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

உலக இரட்சகர் (யோவான் 4:42) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கர்த்தர் தாமே இந்த புதிய ஆண்டில் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும், இந்த கடைசி காலத்தின் கடைசி நாட்களின் எல்லா தீங்குக்கும் விலக்கி, தம்முடைய நித்திய ஜீவ பாதையில் உங்களை காத்து நடத்துவாராக.

இந்த புதிய ஆண்டில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நல் வார்த்தைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள எனக்கு கிருபை செய்கிற என் தேவனாகிய கர்த்தருக்கு கோடான கோடி நன்றி.

கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும். (சங்கீதம் 86:11)

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நல் வழிகளை அறிந்து, அவருடைய சத்தியத்திலே, உண்மையிலே நாம் நடக்க நமக்கு முக்கியமாக தேவைப்படுகிற ஒரு காரியத்தையே மேற்கண்ட வசனம் நமக்கு விளக்குகிறது.

1) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி ஒருமுகப்படுத்தப்பட்ட இருதயம்

2) அதன் விளைவாக, கர்த்தருக்கு பயப்படும் பயம்.

இந்த வசனத்தில், இருதயம் என்பது நம் உணர்வுகள், நம் சுய விருப்பம் அல்லது சித்தம் மற்றும் நம் அறிவு (Our feelings, our own will and even our intellect) ஆகியவற்றை குறிக்கிறது.

இந்த உலக வாழ்க்கையில், நம் இருதயத்தை கர்த்தருக்கு ஏற்றபடி ஒருமுகப்படுத்த தடையாக, இடையூறாக பல காரியங்கள் உள்ளதை வேதத்தில் ஆண்டவர் தாமே விளக்கி கூறியிருக்கிறார்.

உலகக்கவலை, ஐசுவரியத்தின் மயக்கம் – அதாவது பொருளாசை, பணத்தின் மீதான மயக்கம்  (மத்தேயு 13:22), பாவ ஆசைகள், பயம், நம்பிக்கையின்மை, சில நேரத்தில் நம் சொந்த அறிவு  போன்றவைகள் அவற்றுள் சில. இந்த தடைகளை எல்லாம் தாண்டி, ஜெயித்து நம் இருதயத்தை தேவனாகிய கர்த்தரை நோக்கி ஒருமுகப்படுத்தும் போது, அதன் விளைவாக முக்கியமான ஒரு காரியம் நமக்குள் நடக்கிறது. அது, உண்மையாகவே கர்த்தருக்கு – அதாவது சர்வ வல்லமையுள்ள தெய்வத்திற்கு பயப்படும் பயம் நமக்குள் உண்டாகிறது.

இந்த தெய்வ பயம் அல்லாத மற்ற எல்லா பயத்தைக் குறித்து பரிசுத்த வேதாகமம் இப்படி சொல்கிறது:

...பயமானது வேதனையுள்ளது... (1 யோவான் 4:18)

ஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பயப்படும் பயம் – அதாவது தெய்வ பயம் என்றால் என்ன, அது எப்படிப்பட்டது, அதின் பலன்களை என்ன என்பதைக் குறித்து பரிசுத்த வேதாகமம் கீழ்க்கண்டவாறு விளக்கி கூறுகிறது:

தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; ...(நீதிமொழிகள் 8:13)

The fear of the LORD is to hate evil: pride, and arrogancy, and the evil way, and the froward mouth, do I hate. (Proverbs 8:13)

  1. கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; (The beginning of Knowledge) நீதிமொழிகள் 1:7
  2. கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்; (Prolongeth Days) நீதிமொழிகள் 10:27
  3. கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். (Strong Confidence) நீதிமொழிகள் 14:26
  4. கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். (A Fountain of Life) நீதிமொழிகள் 14:27
  5. கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது. (Leads to Life) நீதிமொழிகள் 19:23
  6. தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.(Attaining true Riches and Honors) நீதிமொழிகள் 22:4
  7. கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது. (Clean and enduring forever) சங்கீதம் 19:9
  8. பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம்.(stability of your times, and strength of salvation) ஏசாயா 33:6

நாம் தேவனாகிய கர்த்தருக்கும் உலகத்திற்கும் பிரியமாக நடக்க முடியாது. காரணம், பரிசுத்த வேதம் கீழ்கண்டவாறு சொல்கிறது.

இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.(மத்தேயு 6:24)

ஒருவேளை நாம் அப்படி இருந்தால் நம் இருதயம் தேவனாகிய கர்த்தரை நோக்கி ஒருமுகப்படவும் முடியாது, தெய்வ பயமும் நமக்குள் இராது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை நோக்கி நாம் இன்னும் நெருங்கி இருக்கிற இந்த நேரத்தில், நாம் வேதம் சொல்லும் இந்த உலகத்தின் தீமைகளை, பாவ ஆசைகளை வெறுத்து, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையே நமக்கு முன் வைத்து (சங் 16:8), அவரிடம் வேண்டிக் கொள்ளும்போது அவரே நம் இருதயத்தை தம்மை நோக்கி ஒருமுகப்படுத்துவார். பரிசுத்தஆவியானவர் தாமே இதை நம்மில் தீவிரமாய் நடப்பித்து, கர்த்தருடைய வழியை நமக்கு போதித்து, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சத்தியத்திலே, உண்மையிலே  நம்மை நடத்துவார். அப்பொழுது கர்த்தருக்கு, அவருடைய நாமத்திற்கு பயப்படும் தெய்வ பயத்தின் பலன்களை ஆண்டவர் இயேசு நமக்கு அருளி செய்வது உறுதி.

இந்த ஆண்டு முழுவதும், தேவனாகிய கர்த்தர் தாமே இதை நம்மில் கிருபையாய் நடப்பித்து அவரில் நம்மை காத்து நடத்தி ஆசிர்வதிப்பாராக. தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல நாட்களிலும் எனக்குப் பயப்படும்படிக்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிட்டு, அவர்களுக்கு நன்மைசெய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லையென்கிற நித்திய உடன்படிக்கையை அவர்களோடே பண்ணி, அவர்கள் என்னைவிட்டு அகன்று போகாதபடிக்கு, எனக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைத்து,அவர்களுக்கு நன்மைசெய்யும்படி அவர்கள்மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்தத் தேசத்திலே நிச்சயமாய் நாட்டுவேன். (எரேமியா 32:39-41)

You may download this Message here as a PDF document.

 

Print Email