இந்த வார தியானம்Sharon Rose Ministries

(Meditation for the Week)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


யாருக்காக

(புனித வெள்ளி செய்தி)


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; ... (1 பேதுரு 2:24)

காணக்கூடாதவராகிய சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவன் - மெய்த்தெய்வம் - ஒரே கடவுள் - தன் ஒரே பிள்ளையை, தன் சொந்த குமாரனை மனிதரில் யாவரும் காணக்கூடியவராக, நம்மைப் போல் மனிதனாக இந்த பூமிக்கு இயேசு கிறிஸ்து என்னும் பெயரில் அனுப்பினார். இரண்டாயிரத்து பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு மனிதனாய் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சகித்த அவமானங்கள், எல்லோருக்கும் நல்லதே செய்தும் அவர் அனுபவித்த தீங்குகள், வியர்வை இரத்தமாய் வரும் அளவிற்கு அவர் அனுபவித்த விளக்க முடியாத துக்கங்கள், பயங்கள் எல்லாவற்றிற்கும் மேலாக சிலுவையில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பட்ட சொல்லி முடியாத பாடுகள் இவை அனைத்தும் நமக்காக என்பதையே மேற்கண்ட பரிசுத்த வேத வசனம் விளக்குகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்காக பட்ட பாடுகளை, சுமந்து தீர்த்தவைகளை, செய்து முடித்தவைகளை  விளக்கும் மேலும் சில பரிசுத்த வேத வசனங்கள்:

  • மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். (ஏசாயா 53:4)
  • நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். (ஏசாயா 53:5)
  • நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். (ஏசாயா 53:6)
  • அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; .... (ஏசாயா 53:7)

ஏன் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்காக இத்தனை பாடுகளை சிலுவையில் சுமந்து தீர்க்க வேண்டும்?

  • இந்த உலகத்தின் மக்கள் அனைவரையும் நேசிக்கிற பிதாவாகிய தேவனின் அன்பை வெளிப்படுத்த,
  • ஒட்டுமொத்த மனுக்குலத்தின் பாவத்தை சுமந்து தீர்த்து பாவங்களுக்காய் நாம் அடைய வேண்டிய தண்டனையை ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன் மீது ஏற்றுக் கொண்டு நம்மை விடுதலையாக்க,
  • பாவத்திலிருந்து மனிதனை இரட்சிக்க,
  • இந்த உலக வாழ்க்கைக்கு பின்பும் என்றென்றும் நித்தியமாய் ஆண்டவர் இயேசுவோடு வாழ நித்திய ஜீவனை நமக்கு கொடுக்க,
  • இந்த உலக வாழ்வில் நம் எதிரியான சாத்தானை, நம் வாழ்க்கையை அழிக்க, திருட, நம்மை நித்தியமாய் கொல்ல (நரகத்தில் நம் ஆத்துமாவை தள்ள)  அவன் வைத்திருந்த திட்டங்களை எல்லாம் அழித்து அவனை ஜெயிக்க,
  • சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனுடைய அன்பின் உறவை ஆதாம் செய்த பாவத்தால் இழந்த மனுக்குலத்தை மீட்டு மீண்டும் அந்த அன்பின் உறவில் நிலை நிறுத்த - ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்காக சிலுவையில் எல்லா பாடுகளையும் தம் மேல் ஏற்றுக் கொண்டார்.
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோவான் 3:16)
  • நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். (ரோமர் 5:8)
  • தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை (இயேசு கிறிஸ்துவை) இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. (1 யோவான் 4:9)
  • மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. (யோவான் 1:29)
  • ...இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)
  • (இயேசு கிறிஸ்துவை) அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள்.... (அப்போஸ்தலர் 10:43)
  • இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், .... (யோவான் 20:31)
  • (இயேசு கிறிஸ்து) அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை...(அப்போஸ்தலர் 4:12)

எனவே, ஆண்டவர் இயேசு கிறிஸ்து, சிலுவையில் பட்ட பாடுகள் - ஏதோ ஒரு மனிதன், ஒரு சரித்திர புருஷன் அல்லது ஒரு நல்ல மனிதன் சிலுவையில் மரண தண்டனை அனுபவித்து மரித்து உயிர்த்தார் என்பதல்ல.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து - பிதாவாகிய தேவனுடைய குமாரன் (யோவான் 11:27), மனுக்குலத்தின், உலக மக்கள் அனைவரின் பாவம் போக்கும் பரிசுத்த பலி (1 யோவான் 2:2), பாவத்திலிருந்து மீட்கும் மீட்பர், இரட்சகர், ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் கர்த்தர், என்றென்றும் அவரோடு வாழச்செய்ய நித்திய ஜீவன் அளிக்கும் தெய்வம். எனவே தான், ஆண்டவர் இயேசு கிறிஸ்து - கிறிஸ்தவர்களின் தெய்வம் மட்டும் அல்ல, அவர் :

...அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் .... (யோவான் 4:42)

எனவே தான்,

பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம். (1 யோவான் 4:14)

(ஆண்டவர் இயேசு கிறிஸ்து சிலுவையில் மொழிந்த ஏழு வார்த்தைகளை குறித்த செய்தியை இங்கே காணலாம்)


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)

Print

Joomla SEF URLs by Artio