___________________________________________________________________________________________________________________________________
தேவ இரட்சணியம்
கிறிஸ்துமஸ் தேவ செய்தி - டிசம்பர் 2019 (Christmas Message - December 2019)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
___________________________________________________________________________________________________________________________________
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
உலக ரட்சகரும், ஆண்டவரும், ஆத்தும ரட்சகருமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கண்கள் கண்ட தேவ இரட்சணியமாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பின் நன்னாள் மற்றும் புத்தாண்டு அன்பின் வாழ்த்துகளை சாரோனின் ஊழியங்களின் சார்பாக அன்புடன் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் தம் இரட்சிப்பினால் அலங்கரிப்பாராக, மீட்டுக் கொள்வாராக. அப்படியே உங்கள் கண்களும் தேவ இரட்சணியத்தை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை காணட்டும். |
கிறிஸ்துமஸ் தின பரிசுத்த வேத சத்திய தியானமாக கீழ்க்கண்ட வசனத்தை நாம் சற்றே தியானிப்போம்.
(லூக்கா 2:30) புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.
சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன்மேல் பரிசுத்தஆவி இருந்தார். கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது. (லூக்கா 2:25-29). இந்த தேவ மனுஷன் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலால் எருசலம் தேவாலயத்தில் வந்திருந்தார். அப்பொழுது, இயேசுவின் பெற்றோர் நியாயப்பிரமாண முறையின்படி செய்வதற்காக பிள்ளையோடு தேவாலயம் வந்தார்கள். அவரைக் கண்ட சிமியோன் முன்னுரைக்கப்பட்ட தீர்க்கதரிசன நிறைவேறுதலாய் சொன்ன வார்த்தைகளே மேற்கண்ட பரிசுத்த வேத வசனம்.
புற ஜாதிகளுக்கு பிரகாசிக்கிற ஒளியாக
இஸ்ரவேலராகிய யூதருக்கு மாத்திரம் அல்ல, முழு உலக மக்களுக்கும் பிரகாசிக்கிற ஒளியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து இருக்கிறார். இந்த இடத்திலே பிரகாசிக்கிற ஒளி என்பது மனுக்குலம் அனைத்தின் ஆத்தும மீட்பாகிய இரட்சிப்பை குறிக்கிறது. பாவ இருளிலிருந்து, பிசாசினால் உண்டாகும் அந்தகாரத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு , மீட்கப்பட்டு, மெய்யான ஒளியாம் இரட்சகர் இயேசு கிறிஸ்துவினிடத்தில் வந்து சேர்ந்து, அவர் ஒருவருக்கே நம்மை ஒப்புக்கொடுத்து, அவரையே நம் ஒரே தெய்வமாக, சொந்த இரட்சகராக விசுவாசித்து முழு இருதயத்தோடு நேசித்து தொழுதுகொள்வதே இரட்சிப்பாகும். மெய்யான ஒளியாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தாமே உரைத்த சில பரிசுத்த வேத வசனங்களை கீழே காண்போம்:
(அப்போஸ்தலர் 13:47) நீர் பூமியின் கடைசிபரியந்தமும் இரட்சிப்பாயிருக்கும்படி உம்மை ஜாதிகளுக்கு ஒளியாக வைத்தேன் ...
(யோவான் 1:4) அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
(யோவான் 1:9) உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
(யோவான் 8:12) மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
(யோவான் 12:46) என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.
(யோவான் 1:5) அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.
(1 தெசலோனிக்கேயர் 5:5) நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே.
(1 யோவான் 1:5) தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது.
இஸ்ரவேலுக்கு மகிமையாக
பழைய ஏற்பாட்டின் காலம் துவக்கி இன்று வரை தேவனாகிய கர்த்தர் தாமே இஸ்ரவேலுக்கு, அதாவது இஸ்ரவேலராகிய யூதருக்கும், இஸ்ரவேல் தேசத்திற்கும் மகிமையாகவே இருந்து வருகிறார். தன் சிநேகிதனாகிய ஆபிரகாமிற்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தின்படியும், ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கையின்படியும் இன்று வரை தேவன் தாமே இஸ்ரவேலுக்கு மகிமையாக இருந்து வருகிறார். பழைய ஏற்பாட்டின் காலத்தில், எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேல் ஜனத்தை யாவருடைய கண்களுக்கும் முன்பாக பலத்த அற்புத அடையாளங்களினால் விடுதலையாக்கி மீட்டு, சத்துருக்களை அழித்து, தேவன் வாக்குப் பண்ணின சுதந்திர தேசத்தில் இஸ்ரவேல் மக்களை நிலைநாட்டி, அவர்களை ஆசீர்வதித்து பலுகி பெருகச் செய்தது துவங்கி, இன்று நம் கண்களும் அதே இஸ்ரவேல் தேசத்தை, இஸ்ரவேல் மக்களை காணும்படி செய்கிற தேவனுக்கு மகிமை உண்டாவதாக.
(ஆதியாகமம் 17:7) உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.
(யாத்திராகமம் 6:7) உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அறிவீர்கள்.
(லேவியராகமம் 26:45) அவர்களுடைய தேவனாயிருக்கும்படிக்கு, நான் புறஜாதிகளின் கண்களுக்கு முன்பாக எகிப்துதேசத்திலிருந்து அவர்களைப் புறப்படச்செய்து, அவர்களுடைய முன்னோர்களோடே நான் பண்ணின உடன்படிக்கையை அவர்கள் நிமித்தம் நினைவுகூருவேன்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.
(உபாகமம் 7:6) நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்.
(2 சாமுவேல் 7:24) உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலர் என்றைக்கும் உம்முடைய ஜனமாயிருப்பதற்கு, அவர்களைத் திடப்படுத்தி, கர்த்தராகிய நீர்தாமே அவர்களுக்குத் தேவனானீர்.
(சங்கீதம் 98:2) கர்த்தர் தமது இரட்சிப்பைப் பிரஸ்தாபமாக்கி, தமது நீதியை ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக விளங்கப்பண்ணினார்.
(எரேமியா 32:21-22) இஸ்ரவேலாகிய உமது ஜனத்தை அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரத்தினாலும் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, அவர்களுடைய பிதாக்களுக்கு நீர் கொடுப்பேன் என்று ஆணையிட்ட பாலும் தேனும் ஓடிய தேசமாயிருக்கிற இந்தத் தேசத்தை அவர்களுக்குக் கொடுத்தீர்.
மேலும், ஆவிக்குரிய பிரகாரமாகவும் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்கு எப்படி மகிமையாய் இருக்கிறார் என்பதையும், இஸ்ரவேலராகிய யூதருக்கு மட்டுமல்ல இன்று நமக்கும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எப்படி மகிமையாய் இருக்கிறார் என்பதையும் நாம் சற்றே தியானிப்போம்.
(ரோமர் 3:1) இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன?
(ரோமர் 3:2) அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே.
(யோவான் 4:22) ... ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது.
(ரோமர் 9:4) அவர்கள் இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே;
(ரோமர் 9:5) பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, கல்வாரி சிலுவையில் முழு உலக மக்களுக்காவும் தம் இரத்தத்தை சிந்தினதினால் நம்மை ஆவிக்குரிய இஸ்ரவேலர்களாக, விசுவாசத் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்திற்கு , ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கைக்கு நம்மை பங்குள்ளவர்களாக்கி, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து கிருபையினால் பலிக்கிற தேவ நீதியின் பலனாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கும் மகிமையாக, நம் இரட்சிப்பின் மகிமையாக இருக்கிறார். நம்மை பாவ அடிமைத்தனத்திலிருந்து, பிசாசின் இருளிலிருந்து, மரண பயத்திலிருந்து விடுதலையாக்கி மீட்டு, வாக்கு பண்ணப்பட்டிருக்கிற பரம கானான் தேசமாகிய பரலோகம் கொண்டு சேர்க்கும் நம் இரட்சிப்பின் அதிபதியாக, நம் ஜீவாதிபதியாக நம்மேல், நமக்குள் மகிமையாய் இருக்கிறார். மகிமையின் நம்பிக்கையாக இருக்கிறார் (கொலோசெயர் 1:27).
(ரோமர் 2:28) ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல.
(ரோமர் 2:29) உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; ...
(ரோமர் 3:29) தேவன் யூதருக்குமாத்திரமா தேவன்? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் புறஜாதிகளுக்கும் அவர் தேவன்தான்.
(பிலிப்பியர் 3:3) ஏனெனில், மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.
பிதாவாகிய தேவன் மனுக்குலம் முழுவதிற்குமாக உண்டுபண்ணின இந்த இரட்சிப்புக்கு காரணராகிய தேவ இரட்சணியமாம் இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையை கிறிஸ்து பிறப்பு நன்னாளாக மகிழ்வோடு கொண்டாடுகிற நமக்கு வெகு அருகில் அவருடைய இரண்டாம் வருகை நெருங்கி நிற்பதையும் நாம் உணர்ந்தவர்களாய் மேகங்கள் மேல் ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட ஆயத்தப்படுவதே (1 தெசலோனிக்கேயர் 4:16-17) நம் தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்வின் ஒரே குறிக்கோளும், ஆத்துமா மீட்கப்படும்படி நம்மால் இயன்றவரை ராஜ்யத்தின் சுவிஷேசத்தை மற்றவர்க்கு அறிவித்து மற்றவர்களை இரட்சிப்புக்குள் நடத்துவதே நம் முன் இருக்கும் ஒரே பணியுமாகும். நாம் ஆயத்தமாயிருப்போம் , மற்றவர்களையும் ஆயத்தப்படுத்துவோம் (மத்தேயு 24:44). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையை முன்னறிவித்த பரிசுத்த வேதம், அவருடைய இரண்டாம் வருகையையும் தெள்ளத்தெளிவாக, உரத்த குரலில் நமக்கு அறிவிக்கிறது:
(சங்கீதம் 96:13) அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவனுக்கே சகல மகிமையும் உண்டாவதாக. ஆமென்.