என் சிலுவை
கிறிஸ்து இயேசுவின் உயிர்த்தெழுதலின் தேவ செய்தி - மார்ச் 2021 (Resurrection Day Message - March 2021)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
தேவாதி தேவனுடைய ஈவாகிய நம் இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நன்னாள் வாழ்த்துகள்! |
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளிலிருந்து தான் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை ஆரம்பிக்கிறது. கிறிஸ்து இயேசு சிலுவையில் நமக்காக செய்து முடித்தவைகளே நம் கிறிஸ்தவ வாழ்வின் ஆரம்பம், அஸ்திபாரம், ஆதாரம். இதில் உன்னதமான பரிசுத்த வேத சத்தியம் என்னவென்றால் கிறிஸ்து இயேசுவுடனே கூட நாமும் சிலுவையில் அறையப்படுவதில் இருந்தே நம் கிறிஸ்தவ வாழ்வின் ஜெயம் ஆரம்பமாகிறது. நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடனான தனிப்பட்ட உறவு என்பதே நம் சுயத்தை வெறுத்து, நமக்கான சிலுவையை நாம் அனுதினமும் சுமந்து கொண்டு அவர் அடிச்சுவடை பின் தொடர்வதே ஆகும். நாம் சிலுவையில் அறையப்படாத, நம் சிலுவையை சுமக்காத வாழ்வு என்பது நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் எந்த உறவும் இல்லாத, அவரை அறியாத வாழ்வு. இன்னும் ஆழமான உண்மையை சொல்லவேண்டுமானால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் நாம் அறியப்படாத வாழ்வு. அதாவது நமக்கும் தேவனுக்கும் எந்த சம்பந்தமும், தொடர்பும் இல்லாத வெறுமையான, யாருக்கும் உபயோகமற்ற வாழ்க்கை அது.
நாம் சிலுவையில் அறையப்படுவதென்பதும், நம் சிலுவையை நாம் சுமப்பதென்பதும் இரு பெரும் பரிசுத்த வேத சத்தியங்கள். இதில் ஒன்றை செய்து மற்றொன்றை விட்டு விடுவதென்பது பரிசுத்த வேத சத்தியமல்ல. காரணம் இவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தும், ஒன்றை மற்றொன்று தொடர்வதுமே ஆகும். எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே இப்படி போதித்திருக்கிறார். இதை நாம் சற்றே தியானித்து அறிந்து கொள்வோம். சத்திய ஆவியானவர் நமக்கு உதவி செய்வாராக. ஆமென்.
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே கீழ்க்கண்டவாறு போதித்து சொல்லியிருக்கிறார்:
(மத்தேயு 16:24) அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.
நம் சிலுவையை நாம் சுமக்க ஆரம்பிக்கும் முன் அதற்கு தேவைப்படும் ஒரு காரியம் "சுயத்தை வெறுப்பது (denying self) அல்லது சிலுவையில் அறையுண்டிருப்பது" என்பதே. அதையே "தன்னைத் தான் வெறுத்து" என்று போதித்து சொல்லியிருக்கிறார். இதை நமக்கு விளக்கிச் சொல்லும் பரிசுத்த வேத வசனங்களில் சிலவற்றை சற்றே தியானிப்போம்.
[1] சிலுவையில் அறையுண்டிருக்கிறேன்:
உலகம்:
(கலாத்தியர் 6:14) நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.
இவ்வுலகத்தின் மேன்மைகள், இவ்வுலகத்தில் நம் ஜீவனத்தின் பெருமைகள், தன்னலம் மற்றும் நிலையில்லாத இந்த உலக வாழ்வில் இருந்து விடுவிக்கப்பட்டு (கலாத்தியர் 1:4) நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பதே நம் நோக்கமாய் கிறிஸ்து வீற்றிருக்கும் தேவனுடைய வலது பாரிசத்தில் உள்ள மேலானவைகளையே (கொலோ 3:1) நாடித் தேடி வாழுகிற வாழ்க்கையே உலகத்திற்கு நாம் சிலுவையில் அறையுண்டு இருப்பதாகும்.
(பிலிப்பியர் 3:7) ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன்.
(பிலிப்பியர் 3:8) அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
(பிலிப்பியர் 3:11) அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.
(யாக்கோபு 4:4) .... உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.
பழைய மனுஷன்:
(ரோமர் 6:6) நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ் செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.
ஜென்ம சுபாவம், பழைய மனுஷனாகிய முதல் மனிதன் ஆதாமின் பாவ சாயல் நம்மை விட்டு நீங்கும்படி நம்முடைய பாவ சரீரம் கிறிஸ்துவுடனே கூட சிலுவையில் அறையப்பட்டால் மட்டுமே பாவத்திலிருந்து மெய்யான விடுதலை, பரிசுத்த வாழ்வு, பிந்தின ஆதாமாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சாயல் நமக்கு சாத்தியமாகும்.
(எபேசியர் 4:22-24) அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.
(ரோமர் 6:22) இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
(எபேசியர் 4:11) மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும்வரைக்கும்,...
மாம்ச ஆசைகள், இச்சைகள்:
(கலாத்தியர் 5:24) கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
மாம்சமாகிய நம் ஐம்புலன்களின் மற்றும் மாம்ச சிந்தையின் வெளிப்படையான கிரியைகளைக் குறித்து பரிசுத்த வேதத்தில் கீழ்க்கண்ட வசனங்கள் நமக்கு தெளிவாக விளக்குகின்றன. அவை:
(கலாத்தியர் 5:19-21) மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(ரோமர் 8:6-7) மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.
(கொலோசெயர் 2:19) மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.
கிறிஸ்துவினுடையவர்களாகிய நாம் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைகிற அனுபவத்தை நமக்கு மெய்யாக்கித்தர ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினிடத்தில் வேண்டிக் கொள்ளும் போது ஆவியானவர் அதை நமக்குள் ஒவ்வொரு நாளும் செய்கிறார்.
(யோவான் 16:8) அவர் (பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன்) வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
(1 பேதுரு 4:1-2) இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி மாம்சத்திலிருக்கும் காலம்வரைக்கும் மனுஷருடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படியே பிழைக்கத்தக்கதாகப் பாவங்களை விட்டோய்ந்திருப்பான்.
நியாயப் பிரமாணம்:
(ரோமர் 7:4) அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்.
கிரியைகளினால் ஆன நியாயப் பிரமாண சட்ட திட்டங்களுக்கு நாம் மரித்து கிறிஸ்து இயேசுவின் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட தேவ கிருபையை பற்றிக்கொண்டு கிறிஸ்து நியாயப்பிரமாணத்திற்கு முடிவாயிருக்கிறார் என்பதை விசுவாசித்து தேவனுக்கு பிரியமாய் அவர் கற்பனைகளை கைக்கொண்டு அவருடைய வழிகளில் நடப்பதைக் குறித்தும், மேலும் ஆவியின் கனிகளோடு, நீதியின் கனிகளோடு நாம் வாழ்வதை குறித்துமே இங்கே நமக்கு போதிக்கப்படுகிறது.
(ரோமர் 10:4) விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.
(ரோமர் 6:23) பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
சிலுவையில் அறையப்படுகிற இந்த அனுபவங்கள் அனுதினமும் நமக்குள் நடக்க வேண்டிய ஒரு அனுபவம். அதையே பரிசுத்த வேதம் போதிக்கிறது:
(1 கொரிந்தியர் 15:31) நான் அநுதினமும் சாகிறேன்; அதை நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினால் உங்களைக்குறித்து, நான் பாராட்டுகிற மேன்மையைக்கொண்டு சத்தியமாய்ச் சொல்லுகிறேன்.
[2] என் சிலுவை:
நம் சிலுவையை நாம் சுமக்காமல் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு பிரியமாய் அவர் வழியில் நாம் நடக்க முடியாது. நாம் சிலுவையை சுமப்பது என்றால் என்ன? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம் சொந்த ரட்சகராக, மீட்பராக ஒரே மெய் தெய்வமாக நாம் ஏற்றுக்கொண்ட பிறகு அதாவது நம் இரட்சிப்பின் அனுபவத்திற்கு பிறகு முழு மனதோடு, முழு பெலத்தோடு அவரிடத்தில் அன்பு கூர்ந்து அவர் காட்டிய வழியில் நடக்கும் போது நாம் எத்தனை துன்பங்களை, பாடுகளை, வேதனைகளை எதிர்கொண்டு அனுபவித்தாலும் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இணையில்லாத அன்பை விட்டு விலகிவிடாமல், அவரை நேசிக்கிற நம் அன்பை விட்டுவிடாமல் அவருடைய அடிச்சுவடுகளை முடிவுவரை அதாவது நம் மரணமோ அல்லது ஆண்டவரின் வருகையோ அது வரை பின்பற்றி செல்வதே நம் சிலுவையை நாம் சுமப்பதாகும். சிலுவை என்பது பாடுகள் என்பதை மறந்து போக வேண்டாம். பூமியில் கிறிஸ்து இயேசுவின் வாழ்க்கை மற்றும் சிலுவை பாடுகளே இதற்கு நிகரற்ற உதாரணம்.
(அப்போஸ்தலர் 14:22) சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.
(1 தெசலோனிக்கேயர் 3:3) இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.
(2 தீமோத்தேயு 3:12) அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.
(1 பேதுரு 2:21) இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.
(1 பேதுரு 3:17) தீமைசெய்து பாடநுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமானால், நன்மைசெய்து பாடநுபவிப்பதே மேன்மையாயிருக்கும்.
(மத்தேயு 7:13-14) இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
(லூக்கா 13:24) இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(அப்போஸ்தலர் 14:22) சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.
எனவே தான்,
(ரோமர் 8:36-37) கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.
(ரோமர் 8:38-39) மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.
இறுதியாக, கிறிஸ்து இயேசுவின் சிலுவைப் பாடுகளின் சத்தியம் என்பது நமக்கு வெறும் போதனை அல்ல, அது தேவ பெலன். இந்த தேவ பெலத்தொடு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகைக்கு ஆயத்தமாயிருப்போம் (மத்தேயு 24:44)
(1 கொரிந்தியர் 1:18) சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.
(கலாத்தியர் 2:20) கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்
தேவனாகிய கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.
(ரோமர் 10:10) நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
மீண்டும் எழும்பி இருக்கும் இந்த கொள்ளை நோயிலிருந்து தேவன் நம்மைக் காத்துகொள்ளும்படி நாம் கர்த்தரிடத்தில் (சங்கீதம் 91:3) வேண்டிக்கொண்டு நம்முடைய விசுவாசத்தை அறிக்கை செய்வோம்.
அனுதின விசுவாச அறிக்கை: தேவன் தம்முடைய கிருபையினாலே இந்த ஆண்டு முழுவதும் என்னை காத்து இரட்சிப்பார் என்று முழு மனதோடு விசுவாசிக்கிறேன். கிறிஸ்து இயேசுவுக்குள் நான் பிழைத்திருந்து நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ளும்படி பிதாவாகிய தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே நான் இரட்சிக்கப்படுவேன்.
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென்.