(Part 3 & நிறைவு பகுதி ) 2020 - ஆண்டு தேவ செய்தி
ஜூன் 2020 (Year 2020 Message - Part 3 & final - Jun 2020)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
இம்மானுவேல் என்ற மகிமை நிறைந்த தம்முடைய நாமத்தின்படியே நம்மோடிருக்கும் தேவனாகிய கர்த்தரை நன்றியோடு துதித்து (மத்தேயு 1:23) விசுவாசத்தோடு இந்த கடினமான கால கட்டத்தை கடந்து செல்லுவோம். தேவன் நம்மோடிருக்கிறார். ஆமென். |
(வெளிப்படுத்தின விசேஷம் 22:11) ... நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்தையே நாம் தியானித்துக் கொண்டிருக்கிறோம். முந்தைய செய்தியில் "நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்" என்ற பகுதியை தியானித்தோம். இந்த செய்தியில், "பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்" என்ற பகுதியை தியானித்து அறிந்து இந்த சத்திய தியானத்தை நிறைவு செய்வோம். சத்திய ஆவியானவர் தாமே நமக்கு உதவி செய்வாராக. ஆமென்.
பரிசுத்தம் என்பது நாம் இரட்சிக்கப்பட்ட நாளிலிருந்து அதாவது, நம் பாவங்கள் எல்லாவற்றையும் மன்னித்து, தம் இரத்தத்தினால் நம்மை முற்றிலும் கழுவி நம் பாவங்கள் யாவையும் நீக்கி நம்மை இரட்சிக்கிற, நம் இரட்சிப்பின் அனுபவத்தின் ஒரு பகுதியாக தேவனாகிய கர்த்தருடைய கிருபையால், கிறிஸ்து இயேசுவின் கிருபையின் ஈவால் நமக்கு அருளப்படுகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் (1 யோவான் 1:7), பரிசுத்த ஆவியானவர் (1 கொரிந்தியர் 6:11), பரிசுத்த வேத வசனம் (யோவான் 15:3, 17:17), பரிசுத்த அக்கினி (ஏசாயா 6:6-7) ஆகியவற்றால் நாம் கர்த்தரால் பரிசுத்தம் பண்ணப்படுகிறோம்.
தேவனாகிய கர்த்தருடைய கட்டளையின்படியே நம் நடக்கைகள் எல்லாவற்றிலும் பரிசுத்தமாய் நடக்க (1 பேதுரு 1:15) நாம் கவனமாயிருந்து ஒவ்வொரு நாளும் பரிசுத்தமாக்கப்படுகிறோம். இப்படியே அனுதினமும் நாம் பரிசுத்தமாய் நடந்து நம் பரிசுத்தத்தை பூரணப்படுத்த வேண்டியது அவசியம் (2 கொரிந்தியர் 7:1). பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும் (வெளிப்படுத்தின விசேஷம் 22:11).
(லேவியராகமம் 20:26) கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன்.
(2 கொரிந்தியர் 7:1) இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை எப்படியெல்லாம் பரிசுத்தமாக்குகிறார் என்பதை சற்றே கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்களின் வழியாக அறிவோம்.
(யோவான் 15:3) நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்.
(யோவான் 17:17) உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
(யோவான் 17:19) அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்.
(ரோமர் 15:15) அப்படியிருந்தும், சகோதரரே, புறஜாதியாராகிய பலி பரிசுத்தஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலியாகும்படிக்கு,...
(1 கொரிந்தியர் 6:11) உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.
(2 தெசலோனிக்கேயர் 2:13) கர்த்தருக்குப் பிரியமான சகோதரரே, நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு, ஆதிமுதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலே, நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.
(எபிரெயர் 10:10) இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.
(எபிரெயர் 10:14) ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.
(யூதா 1:1) ...பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு ....
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்குள் வந்து தங்கி நம்மில் என்றும் வாசமாயிருக்க நாம் அவருடைய ஆலயமாயிருப்பதும், அந்த ஆலயம் பரிசுத்தமாயிருப்பதும் அவசியம். நம் முயற்சி என்பது - நாம் நம் நடக்கைகள் எல்லாவற்றிலும் பரிசுத்தமாய் நடந்து கொள்கிறோம். ஆனால், நம் நடக்கையினால் நாம் பரிசுத்தவானல்ல, பரிசுத்தராகிய தேவன், இயேசு கிறிஸ்து நமக்குள் வந்து வாசம் பண்ணுவதால் நாம் பரிசுத்தவான்களாகிறோம். ஆகவே, பரிசுத்தத்தை நோக்கிய நம் முயற்சியெல்லாம் பரிசுத்த தெய்வத்தை, நம்மை பரிசுத்தமாக்குகிற பரிசுத்தரை நமக்குள் கொண்டிருப்பதைப் பற்றியதேயாகும்.
(லேவியராகமம் 20:8) என் கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.
(லேவியராகமம் 22:32) என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காதிருப்பீர்களாக; நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே பரிசுத்தர் என்று மதிக்கப்படுவேன்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.
(ஏசாயா 48:11) என்னிமித்தம், என்னிமித்தமே, அப்படிச் செய்வேன்; என் நாமத்தின் பரிசுத்தம் எப்படிக் குலைக்கப்படலாம்? என் மகிமையை நான் வேறொருவருக்குங்கொடேன்.
(1 கொரிந்தியர் 3:17) ... தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.
(2 கொரிந்தியர் 6:16) ... நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.
(சங்கீதம் 93:5) ...கர்த்தாவே, பரிசுத்தமானது நித்தியநாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறது.
(சங்கீதம் 132:14) இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; இதை நான் விரும்பினபடியால், இங்கே வாசம்பண்ணுவேன்.
(1 பேதுரு 3:15) கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; ...
(1 கொரிந்தியர் 1:31) அவரே (கிறிஸ்து இயேசுவே) தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.
நாம் பரிசுத்தமாய் நடக்க முயற்சி செய்யும் போது, நமக்கு எதிராக முன்னால் நிற்கும் மூன்று காரியங்கள் - பாவம், மாம்சம் மற்றும் பிசாசு. பாவம் நமக்குள் - அதாவது நம் சரீரத்தில், மாம்சத்தில், ஐம்புலன்களில் வாசமாயிருக்கும் போது (ரோமர் 7:17-20) நம்மால் பரிசுத்தமாய் வாழ முடியாது. எனவே தான் பரிசுத்த வேதம் நமக்கு போதிக்கிறது :
(ரோமர் 6:12) ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.
எனவே, நாம் செய்ய வேண்டியது :
(ரோமர் 6:13) நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.
இப்படி நாம் நம் சரீர அவயவங்களை தேவனுக்கு ஒப்புக் கொடுக்கும்போது, பாவம் நம்மை மேற்கொள்ள முடியாது. நம் சரீரத்தில் பாவம் ஆளுகை செய்ய முடியாது.
(ரோமர் 6:14) நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.
(ரோமர் 6:18) பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்.
(ரோமர் 6:22) இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
(ரோமர் 6:23) பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
மட்டுமல்ல, பரிசுத்த வேதம் பிசாசுக்கு எதிராக நாம் ஜெயங்கொள்வது எப்படி என்பதையும் போதிக்கிறது:
(யாக்கோபு 4:7) ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.
(எபேசியர் 4:27) பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.
(எபேசியர் 6:11) நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
(1 பேதுரு 5:8-9) தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்;...
பரிசுத்தமும், தேவபக்தியும், நீதியும் ஒன்றோடறொன்று தொடர்புடையது, ஒன்றையொன்று சார்ந்தது.
(1 கொரிந்தியர் 6:11) உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.
பரிசுத்தமில்லாமல் தேவ பக்தியுள்ளவர்களாக முடியாது, நீதியான கிரியைகளை நடப்பிக்காமல் பரிசுத்தமாய் நடப்பதும் முடியாது. கர்த்தர் போதிக்கும் கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்கள் பரிசுத்த ஆவியானவரால் நம் வாழ்க்கையில் உண்மையாக்கப்படும்போது மட்டுமே பரிசுத்தமும், தேவபக்தியும், நீதியும் சாத்தியம். கீழ்க்காணும் பரிசுத்த வேத வசனங்களில், முதலாவது சொல்லப்பட்டிருக்கிற "புதிய மனுஷன்" நம் ஆத்துமாவிலும் இரண்டாவதாக சொல்லப்பட்டிருக்கிற "புதிய மனுஷன்" நம் ஆவியிலும் உண்டாக வேண்டிய மெய்யான அனுபவங்களாகும்.
(எபேசியர் 4:22-24) அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.
(கொலோசெயர் 3:9-10) ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே.
எனவே தேவனிடத்தில் மேற்கண்ட பரிசுத்த வேத வசனங்களின்படியே கருத்தாய் வேண்டிக்கொள்வோம். கர்த்தர் நமக்கு அருளிச் செய்வார். தம்முடைய வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்துவார். அவருடைய வருகையில் நம்மை எடுத்துக் கொண்டு தம் நித்திய ராஜ்யம் கொண்டு சேர்ப்பார்.
(2 பேதுரு 1:3-11) தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி, இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது. இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான். ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை. இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்.
(வெளிப்படுத்தின விசேஷம் 22:11) ... நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
தேவனுக்கே சகல துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக. ஆமென்.