IST (GMT+5.5)
  • Meditation
  • New Believers
  • பாவம் போக்க இயேசுவின் இரத்தம் எதற்கு?

பாவம் போக்க இயேசுவின் இரத்தம் எதற்கு?

(Download this Message as PDF here)


உண்மையில் பாவம் என்றால் என்ன? அது எப்படிப்பட்டது? அதன் விளைவு என்ன? இவைகளை பற்றி உலகம் கொண்டிருக்கிற கருத்துக்களுக்கும், அதன் உண்மை நிலைக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. பாவத்தை குறித்து பரிசுத்த வேதாகமத்தின் அடிப்படையில் பார்ப்பதற்கு முன்பதாக, பொதுவாக பார்க்கும் போது நன்மை, தீமை என்பதை உயிருள்ள மனசாட்சியின் மூலமாக நாம் உணர்ந்து கொள்ள முடிந்தாலும், அதையே இறுதியான ஒன்றாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது. காரணம், பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு முன்பு பெரிய பாவம் என்று கருதப்பட்டவைகளெல்லாம் இன்று நாகரீகம், தனி மனித சுதந்திரம் என்ற பெயரில், பெரும்பான்மையின் அடிப்படையில் அவைகள் பாவமாகவே நினைக்கப்படுவதில்லை. எனவே உலகம் பாவத்தை குறித்து சொல்லுகிறவைகளை நாம் உதறித்தள்ளி, சத்தியமான கர்த்தருடைய வேதம் என்ன சொல்லுகிறது என்பதையே நாம் கவனித்துக்கேட்டால் தான் உண்மையை அறிந்து கொள்ளமுடியும்.


... இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும். (யாக்கோபு 1:15)
பாவத்தின் சம்பளம் மரணம்;.... (ரோமர் 6:23)

... “ பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.” (எசேக்கியேல் 18:4)

முதன்முதலில் ஏதேன் தோட்டத்தில் தேவாதி தேவன் சாப்பிடவேண்டாம் என்று ஆதாம், ஏவாளுக்கு விலக்கின கனியை, பிசாசானவன் ஏவாளை வஞ்சித்து சாப்பிட வைத்து, அதைதொடர்ந்து ஏவாள் தன் புருஷனாகிய ஆதாமை சாப்பிட வைத்தபோது –தேவன் படைத்திருந்த உலகத்தில் அதுவரை இல்லாதிருந்த பாவம் முதன் முதலில் பிரவேசித்தது. தேவன் செய்யவேண்டாம் என்று சொன்ன வார்த்தைக்கு கீழ்படியாததினால் பாவம் உலகத்தில் பிரவேசித்தது. சிருஷ்டிகராகிய தேவன் சொன்ன வார்த்தையை தேவனுடைய கரத்தின் சிருஷ்டிப்பாகிய மனிதன் பிசாசானவனின் வஞ்சனையினால் மீறினான்.


வேதத்தில் வாசித்துப் பாருங்கள்: ஆதியாகமம் 2:7-9, 2:15-17, 3:1-7


பூமியை ஆண்டு அனுபவிக்க கர்த்தர் மனிதனுக்கு கொடுத்திருந்த அதிகாரம் இதன் பிறகு பிசாசின் கையில் போனது. பிசாசு உலகத்தின் அதிபதியானான். மனிதனை பாவம் ஆண்டு கொண்டது, அடிமைப்படுத்தினது. தேவனுக்கும், மனிதனுக்கும் இருந்த மிக அற்புதமான உறவில் மிகப்பெரும் பிளவு உண்டானது. காரணம், மகா பரிசுத்தமான தேவனுக்கும், பாவத்திற்கும் சம்பந்தமில்லை. பாவத்தில் விழுந்த மனிதன், மகா பரிசுத்த தேவனுடைய இணையில்லாத அன்பின் உறவின் நெருக்கத்தை, மகிமையை இழந்து போனான். “நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்” என்ற தேவனுடைய வார்த்தையினால் பாவத்தில் விழுந்த மனிதனுடைய இரத்தமும் சதையுமான சரீரத்திற்கு மரணம் நியமிக்கப்பட்டது. இதனால் மனிதனின் ஆயுசு நாட்களுக்குப் பிறகு சரீரம் மண்ணோடு மண்ணாகும்.


தேவனுடைய சிருஷ்டிப்பில் மனிதன் – ஆவி, ஆத்துமா, சரீரம் என மூன்று பகுதிகளை கொண்டிருக்கிறான். சரீரம் மரணமடையும் போது மண்ணோடு மண்ணாகும். ஆனால் ஆவி, ஆத்துமா?

சரீரம் மனிதனின் ஆயுசு நாட்களுக்குப் பிறகு அழிந்து போனாலும், மனிதனின் ஆவியும், ஆத்துமாவும் என்றும் வாழும். காரணம், “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.” (ஆதியாகமம் 2:7) தேவன் நித்தியமானவர், இருக்கிறவராகவே இருக்கிறவர். ஆதியும் அந்தமுமானவர். மனிதனுக்குள் ஊதப்பட்ட அவருடைய ஜீவசுவாசத்தினால், மனித ஆத்துமாவும் என்றென்றும் அழிவில்லாத ஆத்துமா – “ ஜீவாத்துமா” ஆனது. மனிதன் செய்த பாவத்தினால், ஜீவாத்துமாவும் பாவக்கறை படிந்து தேவனுடைய நியாத்தீர்ப்பு மூலம் என்றென்றைக்குமான தண்டனையான நரக அக்கினிக்கு நியமிக்கப்பட்டது.

மனிதன் தேவனுடைய வார்த்தையை மீறி பாவம் செய்தபோதும், தேவனுடைய உள்ளமோ அவரது மாறாத,மாசற்ற நித்திய அன்பினால் மனிதனை மீண்டும் தன்னிடம் சேர்த்துக்கொள்ளவே துடித்தது. இதன் விளைவு, தேவாதி தேவன் மாம்சமாகி - மனிதனாக “இயேசு கிறிஸ்து” என்னும் இரட்சகராக இவ்வுலகில் பிறந்தார். இனி இயேசு கிறிஸ்துவின் மூலமாகத்தான் மனிதன் பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு, இரட்சிக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டு தேவாதி தேவனோடு மீண்டும் இணைக்கப்பட முடியும். பாவம் செய்து, பாவத்திற்கு அடிமையான மனிதனை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்ன செய்து இரட்சிக்க வேண்டும்? மனிதன் பாவம் செய்ததினால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் இந்த பூமியில் மனிதனாகவே வாழ்ந்து, பாடுபட்டு, சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தி மீட்க வேண்டும்.


பாவம் மன்னிக்கப்பட இரத்தம் சிந்த வேண்டுமா? வேதம் இப்படி சொல்கிறது:


“ இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது. “ (எபிரேயர் 9:22).


“ சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது; இரத்தம் ஜீவனுக்குச் சமானம்; ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம்; சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தந்தானே;....” (லேவியராகமம் 17:14)

" மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.(லேவியராகமம் 17:11)

பாவம் அவ்வளவு கொடியது. இன்னொரு உயிரைக் கொன்று அதின் இரத்தத்தினால் மன்னிப்பு உண்டாக்கவேண்டிய அளவுக்கு கொடியது. உலகத்தின் மனிதர்கள் அவ்வளவு பேரையும் மன்னிக்க எவ்வளவு இரத்தம் வேண்டும், எத்தனை உயிர்களை பலியாக்குவது? கன்னி மரியாளின் வயிற்றில் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் உருவாகி, பாவமில்லாத பரிசுத்தராய்ப் பிறந்த இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த இரத்தத்திற்கே அந்த வல்லமை உண்டு.


" அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை." (1 யோவான் 3:5)

 

"...இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்."(1 யோவான் 1:7)


தேவாதி தேவனாய் கர்த்தாதி கர்த்தாவாய் அண்ட சராசரங்களையும் படைத்து அரசாளும் பிதாவாகிய தேவன், மனிதனை நேசிக்கும் தம் மாசற்ற அன்பினால் கல்வாரி சிலுவையில் நித்திய ஜீவபலியாய் தம் ஒரேபேறான, சொந்த குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையே பலியாக்கி மனிதனுக்கு பாவத்திலிருந்து மன்னிப்பை, பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலையை உண்டாக்கினார். இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மனிதனை மீண்டும் தேவனோடு ஒப்புரவாக்கினார். தேவாதி தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் பரிந்து பேசும் மத்தியஸ்தரானார்.


“ தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16)


இனி, மனிதன் தானே விரும்பித்தான் பாவம் செய்ய முடியுமே தவிர பாவத்தின் அடிமைதனத்தினால் பாவம் செய்ய முடியாது.


சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். (எபிரேயர் 10:26-27)


இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும். (எசேக்கியேல் 18:4)


ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (மத்தேயு 10:38)


எனவே தான், பாவம் மன்னிக்கப்படவும், இரட்சிப்பு உண்டாகவும், சரீர மரணத்திற்கு பிறகு என்றென்றும் ஆத்துமா நரக அக்கினிக்கு தப்புவிக்கப்படவும் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே வழியாய் இருக்கிறார். அவர் சொல்லியிருக்கிறார் – “ நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.” (யோவான் 14:6)


இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக இரட்சிப்பை பெற்ற பின் இறுதி மூச்சு வரை அல்லது நாம் உயிரோடு இருக்கும்போதே அவருடைய இரண்டாம் வருகை சம்பவித்தால் அதுவரை, நம்மை பரிசுத்தமாக காத்துக்கொள்ள வேண்டும். நல்லவர்களாக அல்ல, பரிசுத்தவான்களாக வாழ நம்மால் மட்டுமே முடியாது. எனவே தான், இரட்சிக்கப்பட்டபின் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்திற்காய் ஜெபிக்கும் போது, கர்த்தரே நமக்குள் பரிசுத்த ஆவியானவராய் வந்து வாசம் பண்ணுகிறார். நாம் வேதத்தின் படி ஒவ்வொரு நாளும் நடந்து பரிசுத்தமாக வாழ நமக்கு உதவி செய்து காத்துக்கொள்கிறார். அதன் மூலம் நம் ஆவியையும், ஆத்துமாவையும், சரீரத்தையும் பரிசுத்தமாக, கறை, திறை பிழையற்றவர்களாய் இருக்கும்படியாய் காத்துக்கொள்கிறார்.


" இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக. (1 தெசலோனிக்கேயர் 3:13)"

“ இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் “ (மத்தேயு 28:20) என்றார் இரட்சகராகிய இயேசு. அப்படியே நம்மோடு இருந்து அவருக்குள் நம்மை காத்து, பரலோகத்தில் அவரோடு நாமும் நித்தியமாய் என்றென்றும் வாழ செய்வார்.

(1 தெசலோனிக்கேயர்5:23) “ சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.”

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மிக சமீபித்திருக்கிறது. இந்த கிருபையின் காலத்தில், தாமதிக்காமல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு இரட்சிப்பை பெற்று கொள்வோம். முடிவு வரை கர்த்தருடைய விசுவாசத்தில் நிலைத்திருந்து கர்த்தரின் ராஜ்யம் சேர கர்த்தர் தாமே நமக்கு கிருபை செய்வாராக.

 

Print Email