• Messages
  • Text
  • தேவனுடைய ராஜ்யம் நமக்குள்ளே - (பகுதி 1)

தேவனுடைய ராஜ்யம் நமக்குள்ளே


(பகுதி 1)

தேவனுடைய ராஜ்யம் என்றால் என்ன? அதை நாம் நமக்குள்ளே எப்படி கொண்டிருக்க முடியும்?

மிக சுருக்கமாக சொல்வதானால், தேவனுடைய பிரமாணங்களை, கட்டளைகளை நமக்குள்ளே, நம் இருதயத்திலே கொண்டிருந்து அந்த கட்டளைகளின் படி நாம் வாழ்வதாகும். அதாவது, நாம் நம்மை முற்றிலுமாக கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுத்து (Absolute Surrender), நம்மில் தேவனாகிய கர்த்தர் முழுமையாக ஆளுகை செய்வதாகும். தேவனுடைய ராஜ்யத்தில் தேவனே ஆளுகை செய்கிறார்.

தேவனுடைய ராஜ்யம் எப்படிப்பட்டது?

தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது. (ரோமர் 14:17)

தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது. (1 கொரிந்தியர் 4:20)

பின்பு குழந்தைகளையும் அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீஷர்கள் அதைக் கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள். இயேசுவோ அவர்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (லூக்கா 18:15-17)

இந்த உலகத்தில், நம்முடைய சரீரத்தில் நாம் வாழும் பொழுதே தேவனுடைய ராஜ்யத்தை நமக்குள்ளே கொண்டிருக்க முடியும் என்று வேதம் நமக்கு சொல்லுகிறது.

தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், (எபிரெயர் 6:5)

இனி இந்த உலகத்தில் வரப்போகிற தேவனுடைய ராஜ்யத்தை, இப்பொழுதே நாம் நமக்குள் கொண்டிருந்து தேவனோடு அனுதினமும் நடக்க வேண்டியதும், நம் தேவனாகிய கர்த்தரையும் அவருடைய வழிகளையும் நாம் அறிந்து கொள்வதும் இந்த கடைசி நாட்களில் நம் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிக அவசியமானதும், கர்த்தர் நம்மிடத்தில் எதிர்பார்க்கிற காரியமுமாய் இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு ஆவிக்குரிய வாழ்க்கை நம்மிடம் இல்லாதே போனால், கர்த்தரின் இரண்டாம் வருகை மிக அருகிலிருக்கிற இந்த கடைசி நாட்களில் விசுவாச துரோகம், கள்ள தீர்க்கதரிசனம், கள்ள அப்போஸ்தலர்கள், கள்ள போதகர்கள்,கலப்பட வேதம், இயற்கையின் கால சூழ்நிலைகளில் உருவாகப்போகும் பயங்கர மாற்றங்கள் (மத்தேயு 24ம் அதிகாரம் முழுவதும், லூக்கா 21ம் அதிகாரம் முழுவதும்),கடைசி நாட்களின் கொடிய கால மனிதர்கள் (2 தீமோத்தேயு 3:1-5) என அனைத்து சோதனைகளையும் வென்று (மத்தேயு 24:13), நல்ல போராட்டத்தை போராடி உலகத்தை ஜெயிக்கிற ஜெயமாகிய நம் விசுவாசத்தைக் காத்து (லூக்கா 18:8) கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாயிருப்பது இயலாமல் போய்விடும்.

தேவனுடைய ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதாக இராமல், ஆவிக்குரியதாக இருக்கிறது என்று வேதம் சொல்கிறது.

இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார். (யோவான் 18:36)

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த பொழுது, இந்த உலகத்தில் இருந்த அதே நேரத்தில் ஆவிக்குரிய உலகத்திலும் அவரால் சஞ்சரிக்க, நடக்க முடிந்ததை கீழ் காணும் வேத வசனம் சொல்கிறது.

பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்? பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. (யோவான் 3:12-13)

மனிதனை தேவாதி தேவன் படைத்த பொழுது அவனை ஆவி, ஆத்துமா, சரீரம் என படைத்தார். கண் காண்கிற வெறும் உடல் மட்டுமல்ல மனிதன்.

ஒரு மனிதன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தனக்காக, தன் பாவங்களை, சாபங்களை, பாடுகளை, வேதனைகளை தன் மீது சுமந்து கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தி இறந்து உயிர்த்தெழுந்ததை விசுவாசித்து, பாவ மன்னிப்பாகிய மீட்பை பெற்று, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரையே தன் சொந்த இரட்சகரும் தெய்வமுமாய் ஏற்றுக் கொள்ளும்பொழுது அவனுடைய ஆவி தேவனாகிய கர்த்தரால், தேவனுடைய வார்த்தையால் உயிர்பிக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு தேவனுடையதாகிறது. இதுவே இரட்சிப்பும், மறுபடியும் பிறப்பதுமாகும் (New Birth is instant).

அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே. (1 பேதுரு 1:23)

ஆனால், ஆத்துமா பரிசுத்தமாவது என்பது இந்த இரட்சிப்பை தொடர்ந்து, நம்மில் ஒவ்வொரு நாளும் நடக்கும் ஒரு காரியமாகும் (Progressive Process). ஆத்துமாவை முழுமையாய் விளக்கி கூறுவது கடினமான காரியம் என்றாலும் வேதத்தின் படி நாம் புரிந்து கொள்வதானால் இப்படியாக கூற முடியும். அதாவது, நம் சிந்தை (our Mind), உணர்வுகள் (our Emotion), சுய சித்தம் (our Will) ஆகியவற்றை உள்ளடக்கியது ஆத்துமா. ஆனால், இந்த ஆத்துமா உடலின் ஐம்புலன்களின் ஆசை , இச்சைகள் மற்றும் இந்த உலகத்தின் காரியங்களினால் மிகப்பெரும் தாக்கத்திற்கு உள்ளாவதால் , இரட்சிக்கப்பட்ட பின் பரிசுத்த ஆவியானவரால் ஆளுகை செய்யப்படும் நம் ஆவியோடு இணைந்து செயல்படமுடியாமல் போகிறது. தேவனுடைய ராஜ்யத்தை நமக்குள்ளே கொண்டிருந்து கர்த்தரோடு சஞ்சரித்து நடக்க நம் ஆவியும் ஆத்துமாவும் பரிசுத்த ஆவியானவரோடு இணைந்து நடப்பது அவசியம். அப்பொழுது மட்டுமே நாமும் நம் ஆண்டவரைப் போல இந்த உலகத்தில் இந்த சரீரத்திற்குள் இருக்கும்போதே இந்த இரு உலகங்களிலேயும் நடக்க முடியும்.

அப்படியானால், நம் ஆவியும் ஆத்துமாவும் பரிசுத்த ஆவியானவரோடு இணைந்து, இசைந்து வாழ்வது எப்படி? வேதம் இப்படி சொல்கிறது...

ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். (எபிரெயர் 4:16)

நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். (2 கொரிந்தியர் 3:18)

ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள். (2 கொரிந்தியர் 4:18)

மேலும், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இவ்வாறு கூறினார்... பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 1:51)

இரட்சிக்கப்பட்ட பின் நம் ஆவி பரிசுத்த ஆவியானவரோடு இணைந்து இருந்தாலும், மேற்சொன்னபடி ஆத்துமாவுக்கு உண்டாகும் தாக்கத்தினால் நம் ஆவியும் பரிசுத்த ஆவியானவரோடு முழுமையாக இணைந்து, இசைந்து செயல்பட இடையுறு உண்டாகிறது. நம் ஆத்துமாவில் உள்ள அவ்விசுவாசம், உடலின் ஐம்புலன்களின் ஆசை , இச்சைகள் மற்றும் இந்த உலகத்தின் காரியங்களினால் உண்டாகும் இடையுறுகளுக்கு இடையில் சிக்கி தவிக்கிற நிலை உண்டாகிறது. அதாவது நம் ஆவியைப்போலவே நம் ஆத்துமாவும் பரிசுத்தமாக இருந்து இரண்டும் இசைந்து செயல்பட முடியாமல் போவதே, ஆவியோடு ஆத்துமா பொருந்தி போக முடியாததே பெரும் தடையாக உள்ளது.

இந்த தடைக்கு காரணம், ஆவிக்குரிய காரியங்களும், இந்த உடல் மற்றும் உலகத்திற்குரிய காரியங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து போகவே முடியாது. மட்டுமல்ல ஒன்றை ஒன்று எதிர்க்கிறது. ஒன்றை ஒன்று தவிர்க்கிறது. ஆத்துமாவில் உண்டாகிற இந்த தடையினால் மிக சிறிய அளவிலேயே நாம் தேவனோடு நடக்க முடிகிறது. இதன் காரணமாக, நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் சிறு குழந்தைகளாய் நாம் இருக்க நேரிடுகிறது. வேதத்தில் ஆத்துமாவில் உண்டாகிற இத்தகைய தடைகளை கீழ்க்கண்ட வசனங்கள் நமக்கு இப்படியாக சொல்கிறது.

மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று. நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை. பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா? (1 கொரிந்தியர் 3:1-3)

இப்படிப்பட்ட கிறிஸ்தவ வாழ்க்கையில் நம் கர்த்தரோடு நமக்கு மிக ஆழமான உறவோ, ஐக்கியமோ இருப்பதில்லை. இந்நிலையில் நாம் இருந்தால் தேவனுடைய ஆசரிப்பு கூடாரத்தில் வெளிப்பிரகாரத்தில் (Outer Court) நின்று நாம் ஆண்டவரை தொழுது கொள்ளுகிறவர்களாகவே நாம் இருப்போம். இத்தகைய நிலையையே ஆண்டவர் கீழ்க்கண்டவாறு எச்சரிக்கிறார்..

அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். (மத்தேயு 7:22-23)

இந்நிலையில் ஆத்துமாவை கர்த்தருக்கு ஏற்ற விதமாய் காத்து கொள்வது எப்படி? ஆத்துமா பரிசுத்தமாக்கப்படுவதற்கும்,சத்தியத்திற்கு கீழ்படிந்து நடப்பதற்கும் தொடர்பு உள்ளதை வேதம் கீழ்க்கண்டவாறு விளக்குகிறது.

ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்; (1 பேதுரு 1:22)

சத்தியத்திற்கு கீழ்ப்படிய, சத்தியம் எது? உண்மையான அன்பினால், இயேசு கிறிஸ்துவின் கீழ்க்கண்ட கற்பனைகளை (the Great Commandment) நிறைவேற்றுவதே.

இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. (மத்தேயு 22:37-39)

நாம் கீழ்ப்படிய வேண்டிய சத்தியம் எது, ஆத்துமாவை எப்படி கர்த்தருக்கு ஏற்ற விதமாய், பரிசுத்தமாய் காத்து கொள்வது என்பதை இப்போது, நாம் வேதத்தின் படி அறிந்து கொள்ள முடியும். நம்முடைய ஆவியில் கர்த்தரோடு இணைந்து நடக்க ஆத்தும பரிசுத்தம் என்பது மிக அவசியமானதும், எவ்வளவு நெருக்கமாக நாம் கர்த்தரோடு நடக்க முடியும் என்பது இதை சார்ந்தும் இருக்கிறது. ஆத்தும பரிசுத்தம் இல்லாவிட்டால் நம் ஆவியில் கர்த்தர் வெளிப்படுத்தும் காரியங்களை நம் ஆவி நம் ஆத்துமாவிற்கு தெரிவிப்பது கடினமாகிறது.

நம் ஆத்துமா பரிசுத்தமாகி கொண்டே இருக்கும்பொழுது திரை விலகி, ஆவிக்குரிய உலகம் மிக நிஜமாகிறது. நம் ஆவியும் ஆத்துமாவும் பரிசுத்தமாக இணைந்து இருக்கிற இந்த நிலை, தேவனுடைய ராஜ்யத்தை நமக்குள்ளே கொண்டிருந்து, நாம் அதில் நடக்க மிக மிக முக்கியமானதாகும்.

இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். (மத்தேயு 5:8)

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மிக சமீபித்திருக்கிறது. தாமதிக்காமல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு இரட்சிப்பை பெற்று கொள்வோம். தேவனுடைய ராஜ்யத்தை இப்பொழுதே நமக்குள் கொண்டிருந்து, கர்த்தரோடு அனுதினமும் நடக்க தேவன் தாமே நமக்கு கிருபை செய்வாராக.ஆமென்.

(தொடரும்...) PDF ஆக இங்கே பதிவிறக்கம் செய்யலாம்.

Print Email