IST (GMT+5.5)

    விசுவாச துரோகம்

    செய்தி:சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்

    Click here to download as PDF


    கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

    தேவனாகிய கர்த்தருடைய அன்பும் கிருபையும் சமாதானமும் உங்களில் நிலைத்திருப்பதாக. கர்த்தருடைய ஆவியானவரின் வழிநடத்துதல் உங்களுக்கு பரிபூரணமாய் உண்டாகியிருப்பதாக.

    இந்த தேவ செய்தி, கர்த்தருடைய வருகையை எதிர்நோக்கி இருக்கிற மிக பிரத்தியேகமான இந்த கடைசி கால சந்ததியான நமக்கு மிக அவசியமான செய்தியாகும். வரப்போகும் மிகப்பெரும் ஆபத்தான இந்த விசுவாச துரோகத்தை குறித்து நாம் தெளிவாக அறிந்திருந்து, உலகத்தை ஜெயிக்கிற ஜெயமாகிய நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற விசுவாசத்தை தேவ ஆவியானவரின் உதவியோடு காத்துக்கொள்வது அவசியமாயிருக்கிறது.

    தேவனாகிய கர்த்தர் துவக்குகிறதும் முடிக்கிறதுமான இந்த விலையேறப்பெற்ற விசுவாசம், ஆவியின் கனியாய், வரமாய், அபிஷேகமாய் நமக்கு அருளப்பட்டிருக்கிறது. இந்த விசுவாசத்தை வேதம் இப்படி விளக்குகிறது.

    எபிரேயர் 11:1

    விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    எபிரேயர் 11:3

    விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

    எபிரேயர் 11:6

    விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.

    ரோமர் 14:23

    விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே.

    ரோமர் 3:3

    சிலர் விசுவாசியாமற்போனாலுமென்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ?

    1 பேதுரு 1:7

    அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.

     

    ஆனால், உலகம் முற்றிலும் எதிர்மறையாக கண் காண்பவைகளின் மீதே முழு நம்பிக்கை வைக்க சொல்கிறது. இதில் எது உண்மை? எதை நாம் ஏற்றுக் கொள்வது ?

    கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து அவருடைய பரிசுத்த இரத்தத்தினாலே மீட்பை, இரட்சிப்பை பெற்று இயேசு கிறிஸ்துவுக்கு சொந்தமானவர்களாகிய நமக்கு வேத வசனமே சத்தியம். வேதத்தின் படி மட்டுமே நடக்க வேண்டியதே அவசியம். வேதம் சொல்கிறது :

    2 கொரிந்தியர் 4:18

    ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.

    2 கொரிந்தியர் 4:17

    மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.

    யோவான் 17:16-17

    (இயேசு தம்மை பின் பற்றுகிற தம் பிள்ளைகளை குறித்து கூறினார்)

    நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல..... உம்முடைய வசனமே சத்தியம்.

    இறுதிவரை, அதாவது மரணம் நமக்கு முந்தி நேரிட்டாலும் அல்லது கர்த்தருடைய வருகையை சந்தித்தாலும், அதுவரை நம்முடைய இந்த விசுவாசத்தில் நிலைத்திருந்து கர்த்தருடைய கற்பனைகளை கைக்கொண்டு அவருடைய பிள்ளைகளாய் வாழ்ந்தால் மட்டுமே அவருடைய இராஜியத்திற்குள் அவரோடு பிரவேசிக்க முடியும்.

     

    சரி, இதில் விசுவாச துரோகம் என்பது என்ன? எப்படி, எப்பொழுது நடக்கும்? வேதம் சொல்கிறது

    மத்தேயு 10:22

    என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.

    ஏன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பின்பற்றும்போது உலகம் நம்மை பகைக்கும்? காரணம், இனி வரும் நாட்களில் உலகம் கடவுள், அதிலும் மிகக்குறிப்பாக கர்த்தராகிய கிறிஸ்துவை நம்ப மறுக்கும். வெறுத்து ஒதுக்கும். இந்த நிலை பரவிப் பெருகி உலகம் முழுவதும் வியாபிக்கும். பிறகு வேறு எந்தக்காரியத்தில், அல்லது வேறு யாரிடத்தில் நம்பிக்கை வைக்கும்?

    ஆரம்பத்தில் - உழைப்பு, பணம், தன் வாழ்க்கை தன் சந்தோஷம், வாழ்க்கையில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் ‘எல்லா இன்பங்களையும்’ அனுபவிக்கும் மனப்போக்கு (இவை அனைத்தும் ஏற்கனவே ஆரம்பித்து தீவிரமாகிக்கொண்டிருப்பதை நம்மை சுற்றி நடப்பவைகளை கவனித்தாலே நாம் அறிந்து கொள்ள முடியும்) என ஆரம்பித்து மிக சரியான பாதையில் சென்று கர்த்தருடைய வேதம் சொல்லும் இலக்கையே (அந்தி கிறிஸ்துவையே) அடையும்.

    இப்படி, உலகமே ஒரே விதமாய் இலக்கை நோக்கி பயணிக்க, கர்த்தருடைய பிள்ளைகள் மட்டும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே விசுவாசித்து, அவருடைய கட்டளைகளை, கற்பனைகளை கைக்கொண்டு பரிசுத்தமாய் வாழும்போது, வேதத்திற்கு விரோதமான எந்த பாவ சந்தோஷங்களையும் வெறுத்து அதிலிருந்து தங்களை விலக்கி காத்துக்கொள்ளும் போது, உலகம் கர்த்தருடைய பிள்ளைகளை பகைக்கும்.

    1 பேதுரு 4:4

    அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடேகூட நீங்கள் விழாமலிருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களைத் தூஷிக்கிறார்கள்.

    1 பேதுரு 4:14 நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.

    மட்டுமல்ல, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே விசுவாசிக்கிற விசுவாசமே இவை அனைத்துக்கும் ஆதாரமானது என்பதால், அந்த விசுவாசத்தை சேதப்படுத்தும், அந்த விசுவாசத்திற்கு துரோகம் செய்ய தூண்டும் நாட்களும், நேரமும் மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருப்பதால் நாம் இதைக் குறித்து கவனத்தோடு காரியங்களை அறிந்து கொள்வது மிக அவசியமாகும்.

    அப்படிப்பட்ட நாட்களில், நீங்கள் விசுவாசித்திருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மறுக்க, மறுதலிக்க வைக்கிற காரியமே விசுவாச துரோகம். நம் இரட்சகரும், கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவை மறுதலிக்க, மறுக்க வைக்கும் இந்த சூழ்நிலை யாருக்கு கட்டாயமாக வேண்டும்? யாருக்கு இது மிகவும் உதவும்? உலகம் யாரை நம்பும்? இவை அனைத்திற்கும் ஒரே பதில் – அந்தி கிறிஸ்து (Anti Christ). வேதம் சொல்கிறது

     

     2 தெசலோனிக்கேயர் 2:3-4

    எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.

    பூமியிலுள்ள மனிதர்கள் யாவரும் காணப்போகும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பகிரங்கமான இரண்டாம் வருகைக்கு முன், இப்படிப்பட்ட விசுவாச துரோகம் நடந்து அந்தி கிறிஸ்து இந்த உலகத்தில் வெளிப்பட்டு ஏழு வருடம் ஆட்சி செய்ய வேண்டும். அவன் ஆட்சி காலத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் உங்கள் விசுவாசத்தை நீங்கள் மறுக்க, மறுதலிக்க வேண்டும். மட்டுமல்ல பிசாசு அல்லது சாத்தானின் மறு உருவமான அந்தி கிறிஸ்துவை நீங்கள் கடவுளாக ஏற்று வணங்க வேண்டும். அதாவது மனிதர்களின் இருதயத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இடத்தை கைப்பற்ற முயலும் பிசாசின் மறு உருவம் – அந்தி கிறிஸ்து. மெய்த் தேவனாகிய கர்த்தருடைய இடத்தில் தன்னை வைத்து வணங்க சொல்லும் சாத்தானின் மறு உருவம் – அந்தி கிறிஸ்து ஒரு மனிதனுக்குள் இருந்து கொண்டு இதை செய்ய சொல்லும் போது நீங்கள் அடையாளம் கண்டு கொள்ளலாம்.

    இதைத்தான் மேற்கண்டவேத வசனம் (2 தெசலோனிக்கேயர் 2:3-4) சொல்கிறது.

    நெருங்கி வரும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்மை காக்கபோவதும், கர்த்தருடைய ராஜ்யத்தில் நம்மை கொண்டு சேர்க்கப்போவதும் - பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு உலகத்தை ஜெயிக்கிற ஜெயமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே விசுவாசிக்கிற விசுவாசமே. இந்த விசுவாசத்தில் முடிவு வரை நிலைத்திருப்போம். என்றைக்கும் நிலைத்திருக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ராஜ்யத்தில் அவரோடு நித்தியமாய் வாழ்ந்து மகிழ்ந்திருப்போம்.

    எபிரெயர் 12:1

    ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;

    1 யோவான் 5:5

    இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?

    நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே இந்த விசுவாசத்தில் நம்மை முடிவு வரை காத்து கொள்வாராக! ஆமென்.

    Print Email