IST (GMT+5.5)

    கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

    தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். (லூக்கா 2:10-11)

    உலக இரட்சகராகிய (யோவான் 4:42 , 1யோவான் 4:14) இயேசு கிறிஸ்துவின் அன்பின் நாமத்தில், உலகத்திற்கு அவர் முதல் முறை வந்து அதன் மூலம் தேவ அன்பு உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டதின் (1யோவா 4:9) வாழ்த்துக்களை - கிறிஸ்துமஸ் பண்டிகையின் - நல் வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

    உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக... என்று நாமும் தேவனை துதிப்போம். (லூக்கா 2:14)

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இரண்டாவது முறையாக இந்த உலகத்திற்கு வெகு சீக்கிரமாய் வர இருக்கிற இந்த கடைசி காலங்களின் கடைசி நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் இந்த பண்டிகை கொண்டாட்டங்களுக்கு ஆயத்தமாவதை விட, கிறிஸ்து இயேசுவின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாவதே நம்மை (நம் ஆத்துமாவை) நியாயத்தீர்ப்புக்கு, நித்திய நரக அக்கினிக்கு தப்புவிக்கும்.

    நாம் ஆயத்தமாவது எப்படி? சுருக்கமாய் சொல்வதானால்,

    1.கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உபதேசங்களை, கட்டளைகளை கைக்கொண்டு அவரில் அன்பு கூர வேண்டும்.

    இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. (மத்தேயு 22:37-39)

    நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல. (1யோவான் 5:3)

    நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு; நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கற்பனை இதுவே. (2யோவான் 1:6)

    2. பிதாவிற்கு ஏற்ற கனிகளை கொடுத்தல்

    ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. (கலாத்தியர் 5:22-23)

    ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். (எபேசியர் 5:9)

    3. பிதாவாகிய தேவனுடைய சித்தம் நிறைவேற்றி நம் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக அவருக்கே மகிமையை செலுத்த வேண்டும்.

    இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல. (மத்தேயு 18:14)

    ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். (மத் 28:19-20)

    தேவனுடைய வார்த்தையாகிய (யோவான் 1:1) பரிசுத்த வேதம் நம் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது.ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் பிதாவாகிய தேவன் பரிசுத்த ஆவியானவரை நமக்கு அருளிச் செய்திருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் தாமே தேவ வார்த்தையின் படி, கட்டளைகளின் படி நாம் நடக்க நமக்கு உதவி செய்து நம்மை பெலப்படுத்தி, நம்மை கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாக்க முடியும் (யோவான் 15:5). நம் சுய முயற்சியால் நாம் ஒரு நாளும் ஒன்றும் செய்ய முடியாது.

    நாம் அவருடைய (தேவனுடைய) குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது. (1யோவான் 3:23)

    முதல் முறை, இந்த உலகத்திற்கு நம் பாவங்களற நம்மை மீட்டு இரட்சிக்க தம் இரத்தம் சிந்தி கல்வாரி சிலுவையில் இறந்து உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தேவனுடைய ஒரே குமாரனாக, நம் சொந்த இரட்சகராக, ஒரே தெய்வமாக முழு இருதயத்தோடு விசுவாசித்து ஏற்று கொண்டால் அவர் தம் பரிசுத்த இரத்தத்தால் நம்மை கழுவி, பரிசுத்த ஆவியானவரால் நம்மை நிறைத்து தம் அன்பு பிள்ளைகளாக்கி கொள்வார். அவரை நோக்கி வேண்டிகொள்வோமா? ஏனெனில், தம்மிடத்தில் வருகிற ஒருவரையும் அவர் புறம்பே தள்ளுகிறதில்லை (யோவான் 6:37).

    கிருபையாக, நம் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவே ராஜாதி ராஜாவாக, கர்த்தாதி கர்த்தராக, இந்த உலகத்தை நியாயந்தீர்க்க நியாதிபதியாக வருகிற தம்முடைய இரண்டாம் வருகைக்கு, நம்மை ஆயத்தப்படுத்தி அவர் வருகையில் நம்மை அவரோடு எடுத்துகொண்டு நம்மை என்றென்றும் அவரோடு வாழ செய்வார்.

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மிக சமீபமாய் இருக்கிறது.

    நாம் ஆயத்தமாயிருப்போம்.

     

    PDF ஆக பதிவிறக்கம் செய்ய

     

    Print Email