IST (GMT+5.5)

இரண்டல்ல, மூன்று

 

ஆவி (The Spirit), ஆத்துமா (The Soul), சரீரம் (The Body) – இவற்றிற்கிடையேயான தனித்தன்மைகள்

பெரும்பான்மையான மக்கள், உயிரோடு வாழும் ஒரு மனிதனை இரு பகுதிகள் கொண்டவனாகவே பார்க்கிறார்கள்: ஆத்துமா மற்றும் ஆவியை உடையவனாக. ஆத்துமா, மனிதனுக்குள் இருக்கும் பார்வையில் புலப்படாத, மனோரீதியான ஒரு பகுதி எனவும், சரீரத்தை பார்வையில் புலப்படக்கூடிய, மனிதனின் வெளித்தோற்ற அமைப்பு எனவும் எண்ணுகிறார்கள். உண்மைதான், சரீரம் என்பது மனிதனின் ஒரு வெளிக்கூடு. ஆனால், ஆத்துமா உண்மையில் மனிதனின் ஒரு பகுதியா என்பது ஒரு கேள்வி. ஆவியும், ஆத்துமாவும் ஒன்றுதானா அல்லது இருவேறு பகுதிகளா? ஆத்துமா ஆவிக்கு சமமானதா அல்லது வேறுபட்டதா? இதற்கு மனிதனின் பதில் – இரண்டும் ஒன்றுதான், பெயரில் தான் வித்தியாசமே தவிர ஆவியும் ஆத்துமாவும் ஒரே மாதிரியான பகுதிகள் என்பதே.

இருந்தபோதிலும், மனிதனின் இந்த பதில் நம்பத்தகுந்தல்ல. நம்பத்தகுந்த வேதத்தில், இந்த கேள்விக்குரிய விடையை நாம் பார்ப்போம். தேவனுடைய வார்த்தை, மனிதனை ஆவி,சரீரம் என்று இரண்டு பகுதிகளாக பிரிக்கவில்லை.மாறாக மூன்று பகுதிகளாக பிரிக்கிறது – ஆவி, ஆத்துமா, சரீரம். 1 தெசலோனிக்கேயர் 5:23 சொல்கிறது – “ உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.” இந்த வசனம் ஆவியையும், ஆத்துமாவையும் தனித்தனியே குறிப்பிட்டிருப்பத்தின் மூலம் இவற்றிகிடையேயான தனித்தன்மையை,  இவை இரண்டும் ஒன்றல்ல என்பதையும் தெளிவாக்குகிறது. அப்படியில்லதிருந்தால் ஆவி ஆத்துமா (Spirit and Soul) என்று சொல்லியிருக்காமல் ஆவி-ஆத்துமா (Spirit-Soul) என்பது போல சொல்லியிருக்கலாம். தேவனாகிய கர்த்தர் இதை சொல்லியிருப்பதினால், மனிதனின் ஆவி மற்றும் ஆத்துமா தனித்தன்மைகளை கொண்டது என நாம் அறியலாம். இவைகளிலிருந்து, மனிதன் இருபகுதிகளாக அல்ல, மூன்று பகுதிகளாக – ஆவி, ஆத்துமா மற்றும் சரீரம் என மூன்று பகுதிகளாகவே இருக்கிறான் என்று உறுதியான ஒரு முடிவுக்கு வர முடியும்.

ஆவி மற்றும் ஆத்துமாவின் தனித்தன்மைகள், வேறுபாடுகளின் முக்கியத்துவம் என்ன? இதை அறிந்துகொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம், இது விசுவாசிகளின் ஆவிக்குரியவாழ்வில் மிக அதிகமான செயல்பாடுகளை கொண்டிருக்கிறது. விசுவாசிகள் தங்கள் ஆவியை பற்றி, தங்கள் ஆவியின் எல்லையை பற்றி அறிந்து கொள்ளாவிட்டால், ஆவிக்குரிய வாழ்க்கையைப் பற்றி எப்படி அறிந்து கொள்ள முடியும்? ஆவிக்குரிய வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்ளவிட்டால் ஆவிக்குரியவனாக எப்படி வாழ முடியும்? முக்கியத்துவம் கொடுத்து இதைப்பற்றி அறிந்துகொள்ள விரும்பாமலும், அறியாமையிலும் இருப்பதே ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ச்சியே இல்லாமல் போவதற்கு காரணமாக அமைகிறது.

நாம் மேற்கண்ட வேதபகுதியான 1 தெச 5:23 மட்டுமல்லாமல் இன்னும் பல பகுதிகள், மனிதனை ஆவி ஆத்துமா,சரீரம் என்று மூன்றாக பிரிக்கிறது. உதாரணமாக, எபிரேயர் 4:12 கூறுகிறது – ” தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.” இங்கே வேதம், மறுபடியும் மனிதனை ஆவி ஆத்துமா, கணுக்களையும் ஊனையும் - (கணுக்கள், ஊன் - இது மனிதனின் சிந்தையையும், சித்தத்தையும் குறிக்கும் சரீர பகுதிகள்) அதாவது சரீரம் என்று மூன்றாக பிரிக்கிறது. இதிலிருந்து, ஆவியும் ஆத்துமாவும் தனித்தனியே பிரிக்கப்படுவதினால், உறுதியாக இவை இரண்டும் ஒன்றல்ல.

சிருஷ்டிக்கப்பட்ட மனிதன்

ஆதியாகமம் 2:27 சொல்கிறது – “ தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.“
 

இதிலே, “ மண் “ என்பது மனிதனனின் சரீரத்தை குறிக்கிறது. “ நாசியிலே ஊதப்பட்ட ஜீவசுவாசம்” மனிதனின் ஆவியை குறிக்கிறது. “ ஜீவாத்துமா “ மனிதனின் ஆத்துமா. இதிலிருந்து ஒரு முழுமையான மனிதன் இம்மூன்று பகுதிகளினாலே உருவாக்கப்படுகிறான்.

மேற்கண்ட வசனத்தின்படி, ஜீவசுவாசமானது-ஆவி மனித சரீரத்தோடு இணைந்தபொழுது ஆத்துமா உருவானது. ஆவி சரீரத்தில் நுழைந்தபொழுது ஆத்துமா உருவாக்கப்பட்டது. சரீரம் உயிரற்றதாயிருந்தது, ஆனால் ஜீவ ஆவி (Spirit of Life) சரீரத்தை தொடர்புகொண்ட போது மூன்றாவதாக ஒன்று உண்டாக்கப்பட்டது – அதுவே ஆத்துமா.  ஆவி இல்லாமல் சரீரம் உயிரற்றது. ஆவியால் மட்டுமே ஒன்று வாழ முடியும். ஆவி சரீரத்தில் இருக்கும்பொழுது – உயிருள்ள ஒன்றிலிருந்து இன்னொன்று உருவாக்கப்பட்டது (Something organic is produced), அதுவே – ஆத்துமா.

தேவனுடைய ஜீவசுவாசமே மனிதனின் ஜீவனுக்கு ஆதாரம். கர்த்தராகிய இயேசு சொன்னார் – “ ஆவியே உயிர்ப்பிக்கிறது “ (யோவான் 6:63). ஜீவசுவாசமே மனிதனுக்கு ஜீவனை கொடுக்கிறது, இதைத்தொடர்ந்து,  ஜீவசுவாசமே ஆவி. இந்த ஆவியும், சரீரமும் ஒன்றாக இணையும்பொழுது – அதன் விளைவு ஆத்துமா. வேதவசனம்  சொல்கிறது – “ மனுஷன் ஜீவாத்துமாவானான்.“  இதன் பொருள், ஆதாமின் ஆவியும் சரீரமும் ஒன்றாக இணைந்தபொழுது, மூன்றாவதாக உண்டாக்கப்பட்டதே  – ஆத்துமா. ஆதாமின் ஆவியும் சரீரமும் மூன்றாவதாக ஆத்துமாவோடு இணைந்தன.  எனவே தான் வேதம் (1 கொரிந்தியர் 15:45) இதை “ ஜீவாத்துமா “ என்றழைக்கிறது.  விசுவாசிகளான நாம், கர்த்தருடைய உயிர்த்தெழுதலின் ஜீவனில் பங்குபெரும் போது, ஆவி நம்மை முழுவதும் ஆண்டு கொள்ளத் தொடங்குகிறது. இதனிமித்தமாகவே, கர்த்தரில் விசுவாசிக்கிற யாவரும் உயிர்பிக்கிற ஆவியாகிய பிந்தின ஆதாமோடு (கர்த்தராகிய இயேகிறிஸ்துவோடு) இணைக்கப்படுகிறார்கள் (1 கொரிந்தியர் 15:45).

(சீனாவின் மிகச்சிறந்த தேவமனிதர்களில் ஒருவரான Watchman nee அவர்களின் “ The Christian Life and Warefare “ என்ற புத்தகத்தின்  முதல் அதிகாரத்தில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது. இதன் ஆங்கில பதிப்பை இணையதளத்தின் “ ministrybooks.org “ என்ற முகவரியில் படிக்கலாம்.)

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மிக சமீபித்திருக்கிறது.

Print Email