IST (GMT+5.5)

_____________________________________________________________________________________________________________________________________________

திடன் கொள்ளுங்கள்Sharon Rose Ministries

கிறிஸ்துமஸ் தேவ செய்தி - டிசம்பர் 2017 (Message - December 2017)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்

_____________________________________________________________________________________________________________________________________________

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் யாவருக்கும்

அன்பின் கிறிஸ்துமஸ்  நல்வாழ்த்துக்களை

            சாரோனின் ரோஜா ஊழியங்களின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

பரிசுத்த வேதத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே கூறின ஒரு நல் வார்த்தைதான் இந்த கிறிஸ்துமஸ் தின தேவ செய்தியாயிருக்கிறது. அந்த நல்வார்த்தை "திடன் கொள்ளுங்கள்" என்பதே. திடன் கொள்ளுங்கள் என்ற வார்த்தைக்கு "தைரியமாயிருங்கள் (be strong), ஆறுதலடையுங்கள் (be of good comfort), உற்சாகமாயிருங்கள் (be of good cheer)" என்று பொருள்.  பரிசுத்த வேதத்திலே கீழ்க்கண்ட பகுதிகளில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெவ்வேறு சூழ்நிலைகளில் சொல்லியிருக்கிற  இந்த சத்தியத்தை  நாம் சற்றே ஆழ்ந்து தியானிப்போம்.

(மத்தேயு 9:2) ... மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
(மத்தேயு 9:22) ...மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். ...
(மத்தேயு 14:27) ...திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.

முதலாவது, பாவம் போக்கும் பரிகாரியாக, உலகத்தின் பாவம் முழுவதையும் தன் மீது சுமந்து தீர்க்கும் பலி ஆடாக (atonement), தேவ ஆட்டுக்குட்டியாக (யோவான் 1:29) இந்த உலகத்திற்கு அவர் வந்து சிலுவையில் தம் இரத்தம் சிந்தினதினால் மாத்திரமே பாவ மன்னிப்பை (எபிரெயர் 9:22) நாம் பெற்றுக்கொள்ள முடிகிறது. எனவே நம் பாவம் மன்னிக்கப்படுவதைக் குறித்து, நாம் பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக் கொள்வதைக் குறித்து நாம் நிச்சயமாக திடன் கொள்ள முடிகிறது.

இரண்டாவதாக, பாவம் எப்படி ஆன்மாவின் அல்லது ஆத்மாவின் நோயாக இருக்கிறதோ (சங்கீதம் 41:4), அதைப்போலவே அந்த பாவத்தினாலும், சாபத்தினாலும், பொல்லாத பிசாசினாலும் நம் உடலும் பலவித நோய்களாலும், வியாதிகளாலும் பாதிக்கப்பட்டு பாடுபடுகிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தாமே நம் நோய் தீர்க்கும் பரிகாரியாகவும் (healer)  இருக்கிறார் (1 பேதுரு 2:24). "அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம்" என்று பரிசுத்த வேதத்தில் எழுதியிருக்கிறபடியே (ஏசாயா 53:5),  நம் நோய்களை, வியாதிகளை தம் மீது சிலுவையில் சுமந்து தீர்த்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நம் உடலுக்கும் சுகமும், ஆரோக்கியமும், பெலனும் உண்டாயிருக்கிறதினாலே நம் உடல் சுகத்தைக் குறித்தும் நாம் நிச்சயமாக திடன் கொள்ள முடிகிறது.

மூன்றாவதாக, சாயங்காலத்திலே தனிமையில் ஜெபம் செய்வதற்காக ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன் சீஷர்களை படகில் அக்கரைக்கு அனுப்பிவிட்டு ஒரு மலை மீது ஏறி தனித்திருந்தார். இரவில் நடுக்கடலில் சீஷர்கள் படகில் பயணித்துக் கொண்டிருந்த போது, எதிர்காற்று வீசி படகு தடுமாறி அலைக்கழிக்கப்பட்டுகொண்டிருந்தது. அப்போது, ஆண்டவர் இயேசு கிறிஸ்து தாமே அந்நேரத்திலே கடலின் மீது நடந்து சீஷர்களிடத்தில் வந்தார். அவர் கடலின் மீது நடந்து வருகிறதை கண்ட சீஷர்கள் பயந்து அலறினார்கள். ஆனால், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோ அவர்களோடு பேசி "திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள்" என்றார்.  நாமும் நம் வாழ்க்கையில் பலவித போராட்டங்களினால் அழைக்கழிக்கப்படும்போது, பயத்தில் கலங்கி நிற்கும் போது, உதவி செய்யவும் யாரும் இல்லாத தனிமையில் தவிக்கும் போது நம்மைத் தேடி நம் சூழ்நிலையின் நடுவில் வந்து நின்று "திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள்" (ஏசாயா 35:4) என்று சொல்லி நமக்கு எல்லா உதவியும் செய்ய நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எப்பொழுதும் அன்போடும், ஆவலோடும் நமக்காக காத்துக் கொண்டிருக்கிறார். எனவே நாம் கலங்கி தவிக்காமல், மீட்கப்பட்டு நல்வாழ்வு வாழ்வோம் என்று  நிச்சயமாக திடன் கொள்ள முடிகிறது.

இப்படியாக நம்மை எல்லாவிதத்திலும் திடப்படுத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக இந்த உலகத்தில் முதன்முறையாக வந்ததை நினைவு கூர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகிற இந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன? பரிசுத்த வேதத்தில் கீழ்க்கண்ட வசனம் இப்படியாக சொல்கிறது:

(மத்தேயு 10:49)  ...திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார்...

நாம் செய்ய வேண்டியது எல்லாம் நாம் எவ்வளவு மோசமான, கைவிடப்பட்ட, எந்த  நிலையில் இருந்தாலும், நம்மை திடப்படுத்திக் கொண்டு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம் சொந்த இரட்சகராக, மீட்பராக, கர்த்தராக, ஒரே மெய்த் தெய்வமாக பற்றிக் கொள்ளும்படி அவரை சேர்வது தான். அப்படி நாம் அவரை சேரும் பொழுது, அவரையே பற்றிக்கொள்ளும் பொழுது  நாம் மேலே தியானித்தபடி ஆண்டவர் இயேசு கிறிஸ்து தாமே  எல்லா விதத்திலும் நம்மை அவருக்குள்  திடப்படுத்தி, அவருக்குள் நம்மை நிலை நிறுத்துவார் (1 பேதுரு 5:10). மட்டுமல்ல, நம் ஆத்ம மீட்பராகவும்   முடிவுவரை  நம்மை அவருக்குள் பாதுகாத்து இந்த உலகத்தை ஜெயிக்க வைத்து, அதி சீக்கிரமாக சம்பவிக்க போகும் தம் இரண்டாம் வருகையில் நம்மை அவரோடு சேர்த்துக்கொண்டு என்றென்றும் அவரோடு நாம் வாழ நமக்கு நித்திய ஜீவன் அளிப்பார். காரணம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே சொல்லியிருக்கிறார்:

(யோவான் 16:33) ... ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.


Print Email