IST (GMT+5.5)

    _____________________________________________________________________________________________________________________________________________

    வாசல், வழி, ஜீவன்Sharon Rose Ministries

    கிறிஸ்துமஸ் தேவ செய்தி - டிசம்பர் 2016 (Message - Dec 2016)

    தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்

    _____________________________________________________________________________________________________________________________________________

    கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

    நாம் உட்பிரவேசிக்க வேண்டிய வாசலாய், இந்த பூமியில் நாம் வாழும் நாட்களெல்லாம் நாம் நடக்க வேண்டிய வழியாய், அந்த வழியில் நாம் கைக்கொள்ள வேண்டிய சத்தியமாய்,  நம் ஜீவனாய், முடிவிலே நமக்கு நித்திய ஜீவனாய் இருக்கிற,  இந்த பூமிக்கு வந்த நம் இரட்சகரும், மீட்பரும், ஆண்டவரும், ஒரே கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவையே உயர்த்திக் கொண்டாடி அன்பின் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை சாரோனின் ரோஜா ஊழியங்களின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே என்றும் நமக்கு வாசலாய், வழியாய், சத்தியமாய், ஜீவனாய், நித்திய ஜீவனாய் இருப்பாராக. ஆமென்.


     

    ... இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான் 10:7)
    நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். (யோவான் 10:9)

    மேற்கண்ட பரிசுத்த வேத வசனங்களிலிருந்து - ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே இந்த உலக வாழ்க்கையில் நாம் உட்பிரவேசிக்க வேண்டிய வாசல் என்றும், அப்படி பிரவேசிக்கும் போது நாம் இரட்சிக்கப்படுவதையும் மட்டுமல்லாமல் சிறந்த ஆவிக்குரிய வாழ்க்கையின் உணவும் நமக்கு கிடைக்கிறதையும் விளக்குகிறது.

    மேலும், பரிசுத்த வேதம் நமக்கு இந்த வாசல் எப்படிபட்டதென்பதையும், வெகு சிலரே இதைக் கண்டடைவதையும்  குறித்தும் போதிக்கிறது

    இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; ...(மத்தேயு 7:13)
    ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். (மத்தேயு 7:14)

    அதே சமயம், நாம் உட்செல்லக் கூடாத ஒரு வாசலைக் குறித்து பரிசுத்த வேதம் நம்மை எச்சரிக்கவும் செய்கிறது. அது :

    கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். (மத்தேயு 7:13)

    ஆண்டவர் இயேசு கிறிஸ்தென்னும் வாசல் வழியாய் உட்சென்று, இந்த உலக வாழ்க்கை முடிவு வரை தொடர்ந்து நடக்கவேண்டிய நம் வழியாய் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே இருக்கிறார் என்பதை கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்கள் நமக்கு விளக்கிச் சொல்கிறது.

    தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான். (யோவான் 14:5)
    அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14:6)

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வழிகளைக் குறித்து பரிசுத்த வேதம் சொல்கிறது:

    ... பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். (வெளிப்படுத்தின விசேஷம் 15:3)
    எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன். (சங்கீதம் 119:128)

    ஆகவே தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மிடத்தில் சொல்கிறார்:

    உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். (ஆகாய் 1:7)
    என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக. (நீதிமொழிகள் 23:26)
    ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள். (நீதிமொழிகள் 8:32)
    அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார். (யோபு 34:21)

    எனவே நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் திரும்புவோம், அவரே தம் வழிகளை நமக்கு போதிப்பார்.

    நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம். (புலம்பல் 3:40)
    திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும். (ஏசாயா 2:3)
    கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். (சங்கீதம் 25:4)
    அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். (சங்கீதம் 143:8)

    நாம் ஆண்டவருடைய வழியிலே நம்மை நடத்த அவரிடத்தில் வேண்டிக்கொள்ளும் போது, கிருபையாய் நமக்கு அவர் உதவி செய்து தம்முடைய உயர்ந்த வழியிலே நம்மை நிலைநிறுத்துகிறார்.

    அவர்கள் வழிகளை நான் பார்த்து, அவர்களைக் குணமாக்குவேன்; அவர்களை நடத்தி, திரும்பவும் அவர்களுக்கும் அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்பேன். (ஏசாயா 57:18)
    பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது. (ஏசாயா 55:9)

    இப்படியாக நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வழிகளில் நடக்கும் போதுதான் நாம் அவரை அறிந்து கொள்ள முடியும்.

    உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்; ... (யாத்திராகமம் 33:13)

    இப்படி நமக்கு வாசலாய், வழியாய் இருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே நமக்கு சத்தியமாய் இருக்கிறார். அப்படியானால் சத்தியம் என்றால் என்ன? பரிசுத்த வேதம் நமக்கு பதில் அளிக்கிறது:

    உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம். (யோவான் 17:17)

    அதாவது, அவருடைய வழிகளில் நடக்க நாம் அவருடைய சத்தியத்தில் நடக்க வேண்டும். அவருடைய போதனைகளைக் கைகொள்ள வேண்டும். அந்த போதனைகளை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே தம்முடைய வசனங்களினால் அதை பரிசுத்த வேதத்தின் மூலமாய் நமக்கு தந்திருக்கிறார்.

    சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. (யோவான் 6:68)
    ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம். (1 யோவான் 1:1)
    அந்த நாட்களுக்குப்பின்பு நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறாரென்பதை உரைத்தபின்பு, (எபிரெயர் 10:16)
    அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள். (எபிரெயர் 8:10)
    உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன். (சங்கீதம் 25:5)

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வழியும் அவருடைய சத்தியமும் இணைந்தே இருக்கும். அவருடைய வழியில் நடக்க அவருடைய சத்தியத்தை கைக்கொள்ள வேண்டும். அவருடைய சத்தியத்தைக் கைக்கொள்ளும்போது அவருடைய வழியில் நடக்கிறவர்களாயிருப்போம்.

    கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும். (சங்கீதம் 86:11)
    உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன். (சங்கீதம் 119:15)
    உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன். (சங்கீதம் 119:104)

    கடைசியாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே நமக்கு ஜீவனாக, நித்திய ஜீவனை கொடுப்பவராக இருக்கிறார்.

    இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். (யோவான் 11:25-26)
    அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14:6)
    குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். (1 யோவான் 5:12)
    நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள். (கொலோசெயர் 3:4)
    அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். (1 யோவான் 1:2)

    இந்த உலக வாழ்க்கையில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் போதனைகளை, சத்தியத்தைக் கேட்டு அவரையே தன் சொந்த இரட்சகாரக, ஆண்டவராக, ஒரே தெய்வமாக ஏற்றுக் கொள்ளும் போது, நாம் அதுவரை வாழ்ந்த தேவனுக்கு விரோதமான, பாவ வாழ்க்கைக்கு நாம் மரித்து அதாவது இறந்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாக, புதுப் படைப்பாக இருக்கிறோம்.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே நமக்கு, நமக்குள் ஜீவனாக இருக்கிறார்.

    கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; ... (கலாத்தியர் 2:20)
    அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; ... (எபேசியர் 2:5)

    இப்படியாக, நமக்கு ஜீவனாக மட்டுமல்ல, நித்திய ஜீவனையும் நமக்கு அருளிச் செய்து, என்றென்றும் நாம் தம்முடனே பரலோகத்தில் இருக்கும்படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு நித்திய ஜீவனையும் அருளிச் செய்கிறார். இதை விளக்கும் பரிசுத்த வேத வசனங்களில் சிலவற்றை கீழே காண்போம்.

    நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. (யோவான் 10:28)
    பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, ... (யோவான் 17:2)
    ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். (யோவான் 17:3)
    தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். (1 யோவான் 5:11)
    இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். (ரோமர் 6:22)

    எனவே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே நம் சொந்த இரட்சகராக, ஆத்தும மீட்பராக, ஒரே தெய்வமாக ஏற்றுக் கொள்வோம். அவரே நமக்கு வாசலாய், வழியாய், சத்தியமாய், ஜீவனாய் இருந்து,  அதி சீக்கிரமாய் சம்பவிக்கப் போகும் அவருடைய இரண்டாம் வருகைக்கு நம்மை ஆயத்தபடுத்தி அவருடைய வருகையில் நம்மை எடுத்துக் கொண்டு  நமக்கு நித்திய ஜீவனைத் தந்தருளி என்றென்றும் நாம் அவரோடிருக்கும்படி அவருடைய ராஜ்யத்தில், பரலோகத்தில் நம்மை கொண்டு சேர்ப்பாராக. ஆமென்.

    அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது. (எபேசியர் 3:12)
    நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம். (எபிரெயர் 10:39)
    அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம். (ரோமர் 5:2)

    Print Email