_____________________________________________________________________________________________________________________________________________

  வேர் கனி கொடுக்கும்Sharon Rose Ministries

  தேவ செய்தி - டிசம்பர் 2016 (Message - Dec 2016)

  தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்

  _____________________________________________________________________________________________________________________________________________

  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

  ... நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும். (நீதிமொழிகள் 12:12)

  சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு எதிரான, அவருடைய பரிசுத்த வேதம் போதிக்கும் அவருடைய வழிகளுக்கு எதிரான ஒரு நிலையிலிருந்து - அதாவது தேவனாகிய கர்த்தரை, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறியாத நிலையிலிருந்து, மனம் போன போக்கில் தன் இஷ்டப்படி வாழ்ந்து பாவம் செய்து வாழ்கிற நிலையிலிருந்து நீதிமான் என்ற நிலைக்கு வருவதெப்படி? நீதிமானாக  ஆவது எப்படி? பரிசுத்த வேதம் இதை நமக்கு விளக்கிச் சொல்கிற சில வசனங்களை கீழே காண்போம்:

  • கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார். (ரோமர் 3:26)
  • அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை. (ரோமர் 3:22)
  • விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார். (ரோமர் 10:4)
  • இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். (ரோமர் 5:1)
  • விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது. (ரோமர் 1:17)
  • உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள். (1 கொரிந்தியர் 6:11)

  கல்வாரி சிலுவையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து "என் பாவ, சாப, நோய்கள் எல்லாவற்றையும் தன் மீது ஏற்றுக்கொண்டு தன் பரிசுத்த இரத்தத்தை சிலுவையில் சிந்தி என் பாவத்தின் தண்டனைக்கு தன்னை பலியாக்கி, என் பாவ, சாப, நோய்கள் எல்லாவற்றிற்கும் பரிகாரம் செய்து, என் மீதிருந்த பிசாசின் கிரியைகளை அழித்து ஜெயங்கொண்டு என்னை மீட்டார்" என்று முழு மனதோடு நம்பி விசுவாசித்து - ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக, மீட்பராக, தெய்வமாக ஏற்றுக்கொள்ளும் போது தேவ கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு நாம் இயேசு கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாக்கப்படுகிறோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்காக எல்லா நீதியையும், நியாயப் பிரமாணத்தையும் நிறைவேற்றி முடித்து, அவரே நம்முடைய நீதியாயிருக்கிறார்.  இதையே மேற்கண்ட  பரிசுத்த வேத வசனங்கள் போதிக்கின்றன. இங்கே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை,  அவர் நமக்காய் சிலுவையில் செய்து முடித்தவைகளை நம்பி விசுவாசித்து ஏற்றுகொள்வதை தவிர நாம் வேறு எதையும் செய்யவில்லை. நாம் இதற்கு எந்த விலையும் கொடுக்கத் தேவையில்லை. தேவ கிருபையால், ஆண்டவர் இயேசுவின் இரத்தத்தால் எல்லாம் இலவசமாய், மிக எளிமையான வழியில் நமக்கு அருளப்பட்டிருக்கிறது. இப்படியாகவே நாம் இருக்கும் எந்த நிலையிலிருந்தும் இயேசு கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாக்கப்படுகிறோம். அவரே நம்முடைய நீதியாயிருக்கிறார்.

  • இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; (ரோமர் 3:24)
  • ... அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்பதே. (எரேமியா 23:6)
  • அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார். (1 கொரிந்தியர் 1:31)

  இந்நிலையில், ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார்:

  •  முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். (மத்தேயு 24:13)

  அப்படியானால், நீதிமான்களாக்கப்பட்ட நாம் கடைசிவரை அந்தக் கிருபையை தக்கவைத்து காத்துக்கொள்வது எப்படி? பரிசுத்த வேதத்தில் கர்த்தரே இதற்கு பதில் அளித்திருக்கிறார்:

  • என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். (எசேக்கியல் 18:9)

  ஆகவே, நம் ஆயுளின் முடிவு வரை அல்லது கர்த்தராகிய  இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும், பரிசுத்த வேதத்தின் படி நடந்து, ஆண்டவர் இயேசுவின் போதனைகளைக் கைகொண்டு அவருக்கு முன்பாக உண்மையாய் நடந்து கொள்ளும் போது, கர்த்தரே நம்மை நீதிமான் என்று அழைத்து நம்மை பரலோகம் கொண்டு சேர்ப்பார், அங்கே நமக்கு பலன் அளிப்பார்.

  இப்படியாக நாம் இந்த பூமியில் நீதிமான்களாக வாழும் போது நாம் கனி கொடுக்கிறவர்களாக இருப்போம் என்று பரிசுத்த வேதம் சொல்கிறது:

  • ... கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள். (ஏசாயா 37:31)

  அது என்ன கனி? அது ஆவியின் கனிகள், அவைகள் :

  • ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; ... (கலாத்தியர் 5:22-23)

  ஒரு மரம் அதன் கனியைத் தருவது என்பது சரி, நாம் எப்படி கனி கொடுக்க முடியும்? கனி கொடுப்பது என்றால் என்ன?அதற்கும் பரிசுத்த வேதம் பதில் தருகிறது.

  • ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். (எபேசியர் 5:9)
  • நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம். (ஏசாயா 32:17)

  அந்தக் கனிகள் பரிசுத்த ஆவியானவரால் நமக்கு அருளப்பட்டு, அவைகள் நமக்குள்ளிருந்து நல்ல குணமாக, நீதியாக, உண்மையாக வெளிப்படும். இதையே பரிசுத்த வேதம்  கனி கொடுப்பது என்றழைக்கிறது.

  இப்படியாக, நாம் நீதிமான்களாக இந்த உலகத்தில் வாழும்போது, இந்த உலகத்திலேயும் தேவன் நமக்கு அருளும் ஆசீர்வாதங்கள், பலன்களில் சிலவற்றை கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்களின் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம்.

  • கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனி கொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான். (எரேமியா 17:7-8)
  • துன்மார்க்கருடைய புயங்கள் முறியும்; நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார். (சங்கீதம் 37:17)
  • நீதிமான் கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்; செம்மையான இருதயமுள்ளவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள். (சங்கீதம் 64:10)
  • அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன். (சங்கீதம் 112:6)
  • ... நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார். (சங்கீதம் 146:8)
  • நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும். (நீதிமொழிகள் 4:18)
  • நீதிமான்களுடைய ஆசை நன்மையே; ...(நீதிமொழிகள் 11:23)
  • துன்மார்க்கத்தினால் மனுஷன் நிலைவரப்படான்; நீதிமான்களுடைய வேரோ அசையாது. (நீதிமொழிகள் 12:3)
  • நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள். (நீதிமொழிகள் 24:16)
  • ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள். (நீதிமொழிகள் 28:1)
  • ...ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை. (ஏசாயா 57:1)

  ஒருவேளை, மேற்கண்டபடி தேவ கிருபையினால் நாம் நீதிமான்களாக்கப்பட்டு ஆனால் சில காலங்களுக்கு பிறகு மீண்டும் துணிந்து பாவம் செய்து வழி தப்பி, பின் வாங்கிப்போவோமானால் நம் முடிவைக் குறித்து  தேவனாகிய கர்த்தர் பரிசுத்த வேத வசனங்களின் மூலமாக எச்சரித்து சொல்கிறார்:

  • விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார். (எபிரெயர் 10:38)
  • நீதிமான் தன் நீதியைவிட்டுத் திரும்பி, அநியாயஞ்செய்தால், அவன் அதினால் சாவான். (எசேக்கியல் 33:18)
  • மனுபுத்திரனே, நீ உன் ஜனத்தின் புத்திரரை நோக்கி: நீதிமான் துரோகம்பண்ணுகிற நாளிலே அவனுடைய நீதி அவனைத் தப்புவிப்பதில்லை; துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்தைவிட்டுத் திரும்புகிற நாளிலே அவன் தன் அக்கிரமத்தினால் விழுந்துபோவதுமில்லை; நீதிமான் பாவஞ்செய்கிற நாளிலே தன் நீதியினால் பிழைப்பதுமில்லை. (எசேக்கியல் 33:12)
  • நீதிமான் தன் நீதியைவிட்டு விலகி, அநீதிசெய்து அதிலே செத்தால், அவன் செய்த தன் அநீதியினிமித்தம் அவன் சாவான். (எசேக்கியல் 18:26)

  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால், அவருக்குள் முடிவு வரை நீதிமான்களாய் வாழ அவரே நமக்கு கிருபை செய்வாராக. ஆமென்.

  • அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன். (மத்தேயு 13:43)

   

   

  Print Email