_____________________________________________________________________________________________________________________________________________

  சுவிசேஷத்தினாலேSharon Rose Ministries

  தேவ செய்தி - ஏப்ரல் 2016 (Message - Apr 2016)

  தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்

  _____________________________________________________________________________________________________________________________________________

  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

  .... (இயேசு கிறிஸ்து) அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார். (2 தீமோத்தேயு 1:10)

  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, சிலுவையில் இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததினாலே, அதாவது மனித குலத்தின் மரண பயத்தை நீக்கும்படியாக தம்முடைய சிலுவை மரணத்தினாலே மரணத்தை  பரிகரித்தார். அதாவது, மரணத்தின் வல்லமையை ஒன்றுமில்லாமல் செய்து மரணத்திற்கு ஒரு முடிவுண்டாக்கினார். இதை மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்தின் முதல் பகுதி நமக்கு விளக்குகிறது. இதை பரிசுத்த வேதம் அடுத்து வரும் வசனங்களில்  தெள்ளத் தெளிவாக நமக்கு போதிக்கிறது.

  ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். (எபிரெயர் 2:14-15)

  இச்செய்தியின்  தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள பரிசுத்த வேத வசனத்தின் இரண்டாம் பகுதி,  மேலும் ஒரு உண்மையின் உச்சத்தை அதாவது சத்தியத்தை நமக்கு போதிக்கிறது. அது, இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மரணத்தை பரிகரித்ததின் பலனை இவ்வுலக மக்கள் அதாவது மனுக்குலம் முழுதும் பெற்று அனுபவிக்க மிக எளிமையான வழியை நமக்கு ஏற்படுத்தினார். அது என்ன வழி?

  கர்த்தரும், இரட்சகரும், மீட்பரும், ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவை பற்றிய சுவிசேஷத்தின் மூலமாக அதை எல்லோருக்கும் உரியதாக வெளியரங்கமாக்கினார். இப்படி வெளியரங்கமாகப்பட்ட சுவிசேஷத்தை நம்பி, ஏற்றுக்கொண்டு விசுவாசிப்பதன் மூலம் மனுக்குலமும் மரண பயத்தை, மரணத்தை வென்று ஜீவனையும், அழியாமையையும் பெற்றுக் கொண்டு என்றென்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு அவருடைய ராஜ்யத்தில்  வாழலாம்.

  அப்படியானால், சுவிசேஷம் என்றால் என்ன? சுவிசேஷம் என்ற வார்த்தைக்கு நற்செய்தி என்பது அர்த்தம். சுவிசேஷத்தை ஒற்றை வரியில் விளக்கி சொல்வதானால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை, அவருடைய போதனைகளை குறித்து பரிசுத்த வேதத்தில் சொல்லப்பட்டுள்ள யாவும் சுவிசேஷமே.

  பரிசுத்த வேதத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியிலும், புதிய ஏற்பாட்டு பகுதியிலும் இந்த சுவிசேஷம் நிறைந்து இருக்கிறது. பரிசுத்த வேதத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் எப்படி வந்து பிறப்பார், எங்கு பிறப்பார், எப்பொழுது பிறப்பார் என்று அவருடைய பிறப்பைக் குறித்த காரியங்கள், அவருடைய வளர்ப்பு, அவருடைய ஊழியம் - அதாவது மக்களுக்கு அவர் செய்த நன்மைகள், அதிசயங்கள், அற்புதங்கள் என அவருடைய ஊழியம், சிலுவையில் அவர் படப்போகும் பாடுகள், அந்த பாடுகளினால் உலக மக்களுக்கு உண்டாகும் மாபெரும் பாக்கியங்கள், சிலுவையில் அவருடைய இறப்பு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுதல், இந்த உலகத்திற்கு அவர் மீண்டும் வருகிற அவருடைய இரண்டாம் வருகை, அதைத் தொடர்ந்து இந்த பூமியில் அவர் ஆட்சி செய்து அமைக்கப் போகும் அவருடைய ராஜ்யம் - அரசாங்கம் என இவை அனைத்தும் தீர்க்கதரிசனங்களாக முன்னறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மற்றும் பூமியில் அவருடைய ஆளுகை மட்டுமே இனிமேல் நிறைவேறப் போகிறது. இதைத் தவிர ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை குறித்து முன்னறிவிக்கப்பட்ட யாவும் நிறைவேறிற்று.

  பரிசுத்த வேதத்தின் புதிய ஏற்பாட்டுப் பகுதியில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தாமே போதித்த அவருடைய போதனைகள் மிக விசேஷமானவைகள். அதைத் தொடர்ந்து அவருடைய இரண்டாம் வருகை, பூமியில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆளுகையை குறித்து இன்னும் ஏராளமான காரியங்கள் நமக்கு வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இவை யாவுமே சுவிசேஷமே. இந்த சுவிசேஷத்தை பல விதங்களில் முக்கியப்படுத்தி, பெயரிட்டு பரிசுத்த வேதம் நமக்கு போதிக்கிறது. அவைகளில் சிலவற்றை கீழ்க்கண்ட வசனங்களின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

  இயேசுகிறிஸ்துவைப்பற்றிய பிரசங்கமாகிய என் சுவிசேஷத்தின்படியே ... (ரோமர் 16:26)

  தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம். (மாற்கு 1:1)

  இயேசுகிறிஸ்துவைக்குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர், (ரோமர் 1:4)

  ...தமது குமாரனுடைய சுவிசேஷத்தினாலே என் ஆவியோடு நான் சேவிக்கிற தேவன் எனக்குச் சாட்சியாயிருக்கிறார். (ரோமர் 1:9)

  மேலும், சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார். (கலாத்தியர் 1:11-12)

  ....சத்தியவசனமாகிய சுவிசேஷத்தினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்தச் சுவிசேஷம் உலகமெங்கும் பரம்பிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக் கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன்தருகிறதாயிருக்கிறது; (கொலோசெயர் 1:6)

  ...சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே. (ரோமர் 10:15)

  ...அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள். (லூக்கா 16:16)

  எனவே மரணத்தை ஜெயித்து, ஜீவனையும், அழியாமையையும் நாம் பெற்றுக்கொள்ள நாம் செய்ய வேண்டியதெல்லாம் இந்த சுவிசேஷத்தை நம்பி, விசுவாசித்து ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் போதனையின்படி, பரிசுத்த வேதத்தின் படி  முடிவு வரை நாம் நடப்பதே. அதையே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் சொல்கிறார்:

  காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார். (மாற்கு 1:15)

  ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 8:51)

  என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான் 5:24)

  மட்டுமல்ல, நாம் பெற்ற  இந்த பெரும் பாக்கியத்தை மற்றவர்களும் பெற்றுக் கொள்ளும்படியாக நாம் செய்ய வேண்டியதையும் ஆண்டவர் இயேசு தாமே நமக்கு போதிக்கிறார்:

  பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். (மாற்கு 16:15)

  இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை நம்பி விசுவாசித்து, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக, கர்த்தராக, தெய்வமாக ஏற்றுக்கொள்ள விரும்பாதவர்கள், தங்களுக்கு ஜீவன் அதாவது நித்திய ஜீவன், அழியாமை உண்டாக விருப்பம் இல்லாதவர்கள். எனவே தான், ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொன்னார்:   

  அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை. (யோவான் 5:40)
  எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும். (2 கொரிந்தியர் 4:3)

  வேறொரு சுவிசேஷம் இல்லையே; ... (கலாத்தியர் 1:7)
  ஏனெனில், சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது; கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை. (எபிரெயர் 4:2)


  எனவே, தேவ கிருபையினாலே

  ...அந்தச் சுவிசேஷம் உலகமெங்கும் பரம்பிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக் கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன்தருகிறதாயிருக்கிறது; (கொலோசெயர் 1:6)

  இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. (யோவான் 20:31)

   

  Print Email