IST (GMT+5.5)

    பரிசுத்த வேத தியானம்Sharon Rose Ministries

    (Let's Meditate Word of God)

    தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்

    ________________________________________________________________________________________________________________________________

    முதற்பலனானார்

    (கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை குறித்த பரிசுத்த வேத தியானம்)

    நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாள் நல்வாழ்த்துக்கள்

    கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

    மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். (1 கொரிந்தியர் 15:21-22)

    மேற்கண்ட பரிசுத்த வேத வசனம் விளக்கும் சத்தியம் என்ன? மனுஷனால் தான் மரணம் முதன் முதலில் பூமியில் உண்டானது. எப்படி, எந்த மனுஷன் அதற்கு காரணமானவன் என்று பார்க்கும் போது, பரிசுத்த வேதம் அதற்கு நமக்கு விடையையும் தெளிவாக அறிவிக்கிறது. அதை கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்களின் மூலமாக அறிந்து கொள்வோம்.

    பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய். நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார். (ஆதியாகமம் 3:17-19)

    தேவனாகிய கர்த்தர் படைத்த முதல் மனிதனாகிய ஆதாம், தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல், அதை மீறி நடந்ததினால் பாவம் செய்தான். அதன் விளைவாக மரணமாகிய சரீர அழிவு உண்டானது. மண்ணிலிருந்து உண்டாக்கப்பட்ட மனிதன் மண்ணுக்குத் திரும்பி மண்ணோடு மண்ணாக வேண்டும். அதாவது, இனி பிறக்கும் மனுக்குலம் ஒரு நாள் மரணத்தை சந்தித்தே ஆக வேண்டும்.

    ஆனால், மனிதன் தான் செய்த பாவத்தால் மரணத்துக்கு காரணமானாலும், தேவனாகிய கர்த்தரின் உள்ளம் அந்த மரணத்தை ஜெயிக்கவும், அந்த ஜெயத்தை மனிதனுக்கு அளித்து அவனை மரணத்தை ஜெயிக்கிறவனாக மாற்றவும் சித்தம் கொண்டதினால், பிதாவாகிய தேவன் தன் சொந்த பிள்ளையை, ஒரே மகனை -ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை சிலுவையில் மனிதனின் பாவம் போக்கும் பலியாக தந்து, அவரை மரணத்தை ருசிபார்க்கவும் வைத்து, மூன்றாம் நாள்  அவரை தமது வல்லமையினால் உயிரோடு எழுப்பினார். இப்போது, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுக்கு மரணத்தின் மீது ஜெயத்தைத் தரவும் பிதாவாகிய தேவன் சித்தங் கொண்டார். எனவே மரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்ததில் தேவ குமாரனாம் இயேசு கிறிஸ்து முதலாவதானார், அதாவது முதற்பலனானார். அவருக்கு பின் அவருடைய பிள்ளைகளாகிய நாமும் அவரால் நித்திரையில் இருந்து எழுப்பப்படுவோம். அதாவது  மரணத்தை ஜெயித்து உயிரோடு எழுப்பப்படுவோம்.

    ....கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, (1 கொரிந்தியர் 15:3-4)

    தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது. (அப்போஸ்தலர் 2:24)

    கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார். (1 கொரிந்தியர் 15:20)

    மூன்றாம் நாளிலே தேவன் அவரை எழுப்பிப் பிரத்தியட்சமாய்க் காணும்படி செய்தார். (அப்போஸ்தலர் 10:40)

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் இதை பூமியில் வாழ்ந்த போது, சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னரே அதை தம் வார்த்தையினாலேயே வெளிப்படுத்தினார்.

    நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார். (யோவான் 10:17-18)

    மரணத்தின் மீதான இந்த ஜெயத்தின் உச்சமாக, ஆண்டவர் இயேசு கிறிஸ்து, மரணத்துக்கு நியாயத்தீர்ப்பு செய்கிறதையும் பரிசுத்த வேதம் விளக்குகிறது:

    பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம். (1 கொரிந்தியர் 15:26)

    அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். (வெளிப்படுத்தின விசேஷம் 20:14)

    எனவே தான், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே மரணத்தை ஜெயித்தவர். அவராலேயே மரணத்திற்கு நாம் நீங்கலாக முடியும் என்பதை விளக்கும் பரிசுத்த வேதத்தின் சில வசனங்கள்:

    நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாயிருக்கிறார்; ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு. (சங்கீதம் 68:20)

    அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், ... அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான். (லூக்கா 1:78-79)

    இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது ... (மத்தேயு 4:15)

    மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். (வெளிப்படுத்தின விசேஷம் 1:18)

    மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை. (ரோமர் 6:9)

    இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; (யோவான் 11:25)

    உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். (யோவான் 11:26)

    நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார். (2 தீமோத்தேயு 1:10)

    மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான். (அப்போஸ்தலர் 17:31)

    ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒருவரால் மட்டுமே மரணம் ஜெயிக்கப்பட்டதினால், பரிசுத்த வேதம் இயேசு கிறிஸ்துவுக்குள் மரிக்கிற, இறக்கிற அவருடைய பிள்ளைகளின் மரணத்தை "நித்திரை" என்றே, அதாவது தற்காலிகமான உறக்கம் என்றே அழைக்கிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவருக்காகவே தன் ஜீவனையும் விட்ட ஸ்தேவானின் மரணத்தை பரிசுத்த வேதம் நித்திரை என்றே அழைப்பதை காணலாம்.

    அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள். அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான். (அப்போஸ்தலர் 7:59-60)

    மேலும், கிறிஸ்து இயேசுவுக்குள் மரிப்பவர்களுக்கு, அதாவது ஆண்டவராகிய இயேசு நம் உள்ளத்திற்குள் இருந்து நாம் உண்மையும் உத்தமுமாய் அவருடைய பிள்ளைகளாய் அவருக்கு சாட்சிகளாய் முடிவு வரை அதாவது நம் மரணம் வரை வாழும் போது, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே நமக்கு ஜீவனாய் இருக்கும் போது, மரணம் நமக்கு ஆதாயம் என்றே பரிசுத்த வேதம் நமக்கு போதிக்கிறது.

    கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம். (பிலிப்பியர் 1:21)
    (For to me to live is Christ, and to die is gain. (Philippians 1:21) - KJV)

    முக்கியமாக, மேற்சொன்ன படி கிறிஸ்து இயேசுவுக்குள் மரிக்கிறவர்களை குறித்து, நாம் மற்றவர்கள் மரணத்தை அடையும்போது நம்பிக்கை இழந்து கலங்குகிறதைப் போல கலங்க வேண்டியதில்லை என்று சொல்லி, மிகப்பெரிய நம்பிக்கையையும், உறுதியையும், வாக்குத்தத்தையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் மூலமாக பரிசுத்த வேதம் நமக்கு அளிக்கிறது. அது:

    அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார். (1 தெசலோனிக்கேயர் 4:13-14)

    மரணத்தின் மீது ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்கு அளிக்கும் ஜெயத்தினால் நாமும் தைரியமாக சொல்லலாம்.

    மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? (1 கொரிந்தியர் 15:55)

    (O death, where is thy sting? O grave, where is thy victory? (1 Corinthians 15:55) - KJV)

    Print Email