IST (GMT+5.5)

    பரிசுத்த வேத தியானம்Sharon Rose Ministries

    (Let's Meditate Word of God)

    தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்

    ________________________________________________________________________________________________________________________________

    புத்தாண்டு தேவ செய்தி  - 2015

    கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

    ....கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. (சங்கீதம் 105:3)

    உங்கள் அனைவருக்கும் அன்பின் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். இந்த புதிய ஆண்டிலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை  நாம் இன்னும்  அதிகமாய் தேடி தொழுது கொள்ளுவோம், அவர் பாதம் பணிந்து ஆராதிப்போம். அவருடைய கட்டளைகளை, கற்பனைகளை கைக்கொண்டு அவரில் இன்னும் அன்பு கூறுவோம். அப்பொழுது மேற்கண்ட வாக்குத்தத்தத்தின்  படி நம் ஆவி, ஆத்துமா ஏன் சரீரமும் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிழும்.

    மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்தின் படி, வாக்குத்தத்தத்தின் படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தேடுவது என்றால் என்ன, தேடி கண்டடைதல் எப்படி, கண்டடையும் போது நடப்பது என்ன என்பதையெல்லாம் பரிசுத்த வேத வசனங்களின் படி நாம் சற்று தியானிப்போம்.

    1) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தேட பரிசுத்த வேதம் கூறும் வழி அல்லது முதல் ஆலோசனை என்ன?

    என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். (நீதிமொழிகள் 8:17)

    மேற்கண்ட ஆலோசனையின் படிஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தேட  நாம் செய்ய வேண்டியது அதிகாலையில் பரிசுத்த வேத தியானமும், ஜெபமும்.

    நான் உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என்முகத்தை அவருக்கு நேராக்கி, (தானியேல் 9:3)

    2) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தேட பரிசுத்த வேதம் இரண்டாம் ஆலோசனை என்ன?

     கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். (ஏசாயா 55:6)

    அப்படியானால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எப்பொழுது நமக்கு மிக சமீபத்தில் அல்லது மிக அருகிலிருக்கிறார்?

    தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார். (சங்கீதம் 145:18)

    ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை, உண்மையாய் உள்ளத்தின் ஆழத்திலிருந்து, முழு உள்ளத்தோடு தேடும் போது அவர் நம்மோடு இடைப்படுவார், நம்மோடு பேசுவார், தம்மை நமக்கு வெளிப்படுத்துவார்.

    3) நாம் தேடும் போது அவர் என்ன செய்கிறார்?

    நான் அந்தரங்கத்திலும், பூமியின் அந்தகாரமான இடத்திலும் பேசினதில்லை; விருதாவாக என்னைத் தேடுங்களென்று நான் யாக்கோபின் சந்ததிக்குச் சொன்னதுமில்லை; நான் நீதியைப்பேசி, யதார்த்தமானவைகளை அறிவிக்கிற கர்த்தர். (ஏசாயா 45:19)

    ஆண்டவர் இயேசு கிறிஸ்து, தம்முடைய நீதியை, தம்முடைய  வழிகளை, நம்மைக் குறித்த அவருடைய சித்தத்தை, இன்னும் நம் ஆவிக்குரிய, பூமிக்குரிய வாழ்க்கைக்கு தேவையான அனைத்து காரியங்களையும் நமக்கு வெளிப்படுத்தி, போதிப்பார். ஆலோசனை தருவார். வழிநடத்துவார். மட்டுமல்ல, தம்முடைய இரண்டாம் வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்துவார்.

    4) நாம் அவரை தேடும் போது, நாம் நிச்சயமாகவே அவரை கண்டடைவோம் என்பதைக் குறித்து பரிசுத்த வேதம் நமக்கு உறுதி அளிக்கிறது. மட்டுமல்ல, நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தேடும் பொழுது அவர் நமக்கு எப்படிப்பட்டவராய் இருக்கிறார்?

    உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள். (எரேமியா 29:13)

    தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். ... (யாக்கோபு 4:8)

    மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். (லூக்கா 11:9)

    ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். (லூக்கா 11:10)

    கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள். (சங்கீதம் 9:10)

    தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர். (புலம்பல் 3:25)

    எனவே, மேற்சொன்ன படி இந்த புதிய ஆண்டில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை இன்னும் அதிகமதிகமாய் தேடி அவரை இன்னும் நெருங்கி சேருவோம். அப்பொழுது அவர் நம்மை தம் மார்போடு அணைத்துக் கொண்டு, நம்மை தம்மைப் போல மறுருபப்படுத்துவார். அப்பொழுது, நம் இருதயம் வாழும், மகிழும், அப்பொழுது நாமும் அறிக்கை செய்வோம்:

    என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது. (லூக்கா 1:47)

    அப்பொழுது

    ....தேவனைத் தேடுகிறவர்களே, உங்கள் இருதயம் வாழும். (சங்கீதம் 69:32)

    Print Email