IST (GMT+5.5)

    ______________________________________________________________________________________________________________________________

    பரிசுத்த வேத தியானம்Sharon Rose Ministries

    (Let's Meditate Word of God)

    தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்

    ______________________________________________________________________________________________________________________________

    கொள்கையின் விபரீதங்கள்

    கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

    ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு. (1 தீமோத்தேயு 6:20)

    மேற்கண்ட பரிசுத்த வேத வசனம், நாம் விட்டு விலக வேண்டிய காரியங்களைக் குறித்து நமக்கு போதித்து விளக்குகிறது. ஒன்று, சீர்கேடான வீண் பேச்சுக்கள், மற்றொன்று பொய்யான ஞானமாகிய கொள்கையின் விபரீதங்கள்.

    இந்த பொய்யான ஞானம் என்பது உலகத்திற்குரிய பல காரியங்களைக் குறித்த, சிற்றின்பங்களை குறித்த, பாவத்தைக் குறித்த, நிரந்தரமல்லாத காரியங்களை குறித்த, அதாவது இந்த உலக வாழ்விற்கு பிறகு உள்ள நித்தியமான, என்றென்றைக்குமான வாழ்விற்கு ஏற்றதாயிராத பலவற்றைக் குறித்த, ஏன் கடவுளையே குறித்த, இன்னும் பல காரியங்களைக் குறித்த, தேவனாகிய கர்த்தருடையதல்லாத, அவருடைய பரிசுத்த வேதம்  போதிக்காத மனிதனின் சுய கொள்கைகள் ஆகும். இதை சற்றே ஆழ்ந்து சிந்திப்போம். ஒவ்வொருவருடைய தனி மனித வாழ்விலும் இருக்கும், கடைபிடிக்கும், விட்டுக்கொடுக்க மறுக்கும் கொள்கைகள், அதே மனிதனின் சமுதாய அளவிலான கொள்கைகள் என எத்தனையோ கொள்கைகளை நாம் காண்கிறோம். ஆனால், கர்த்தருடைய பிள்ளைகளாய் நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று - இவை எல்லாமே தேவனாகிய கர்த்தருடைய பார்வையில் அவருக்கு ஏற்றவைகளா? கர்த்தருடைய பரிசுத்த வேதத்தை ஆதாரமாக, அஸ்திபாரமாக கொண்டாதா? என்பதே. அதனால் தான், பரிசுத்த வேதம் இவைகளை ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்கள் என்று விளக்குகிறது. காரணம், தேவனாகிய கர்த்தருடைய பார்வையில் அவருக்கு ஏற்றவைகளாய் இல்லாத,  கர்த்தருடைய பரிசுத்த வேதத்தை ஆதாரமாக, அஸ்திபாரமாக கொள்ளாத கொள்கைகளை எல்லாம் கடைபிடிக்கும் போது அதன் முடிவு விபரீதம் என்றே பரிசுத்த வேதம் நமக்கு எச்சரிக்கிறது. மேலதிகமாக, இப்படிப்பட்டவைகளை விட்டு நாம் விலக வேண்டும் என்றும் பரிசுத்த வேதம் நமக்கு வழிகாட்டி போதிக்கிறது.

    நாம் விட்டு விலக வேண்டியதும், செய்யக்கூடாததுமான இன்னும் சில காரியங்களை பரிசுத்த வேதத்திலிருந்து கீழே கொடுக்கப்பட்டிருக்கிற வசனங்களின் மூலமாக நாம் அறிந்து கொள்வோம்.

    ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால், அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும்பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி, கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு. (1 தீமோத்தேயு 6:3-5)

    சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவ பக்திக்கேதுவாக முயற்சிபண்ணு. (1 தீமோத்தேயு 4:7)

    புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும். (தீத்து 3:9)

    புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு. (2 தீமோத்தேயு 2:23)

    பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள். (1 தெசலோனிக்கேயர் 5:22)

    மேலும், நாம் வாழும் கடைசி காலத்தின் கடைசி நாட்களின் கொடிய மனிதர்களைக் குறித்தும், நாம் செய்ய வேண்டியதைக் குறித்தும் பரிசுத்த வேதம் எச்சரித்து சொல்லி அறிவுறுத்துகிறது.

    மேலும், கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. (2 தீமோத்தேயு 3:1-5)

    வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு. (தீத்து 3:10)

    அப்படியானால், நாம் யாரைப் பற்றிக்கொள்வது, எவைகளை பற்றிக் கொள்வது, நாமும் பற்றிக்கொண்டு மற்றவர்களுக்கும் அறிவிக்க வேண்டிய மெய்யான ஞானமும், நன்மையையும், பிரயோஜனமானதும் எது? அதி சீக்கிரத்தில் இரண்டாம் முறையாக பூமிக்கு வரப்போகிற ஆண்டவராகிய, இயேசு கிறிஸ்துவையும், அவருடைய வார்த்தைகளாகிய பரிசுத்த வேதத்தையுமே பற்றி கொள்வோம். காரணம், தேவனாகிய கர்த்தர் நமக்கு வாக்கு பண்ணியிருக்கிறார்:  

    ...நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. (எபிரெயர் 13:5)

    கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான். (உபாகமம் 31:8)

    ...எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார். (1 கொரிந்தியர் 1:24)

    (இயேசு கிறிஸ்து) அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது. (கொலோசெயர் 2:3)

    கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை.... (2 தீமோத்தேயு 3:15)

    எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன். (சங்கீதம் 119:128)

    நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக, அவர் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்தஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார். இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள். (தீத்து 3:5-8)

    ஆச்சரியப்படத்தக்க வகையில்,

    ....தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்கத் தேவனுக்குப் பிரியமாயிற்று. (1 கொரிந்தியர் 1:21)

    Print Email