IST (GMT+5.5)

பரிசுத்த வேத தியானம்Sharon Rose Ministries

(Meditate Word of God)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


பிரியமாயிருக்கிறேன்


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

 அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது. (மத்தேயு 3:17)

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்த போது தன்னுடைய ஊழியத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே, அதாவது பாடுபட்ட உலக மக்களின் கண்ணீர் துடைத்து, எண்ணற்ற அற்புதங்கள் செய்து, அவர்களுக்கு நம்பிக்கை அளித்து, அவர்கள் துன்பங்களை தீர்த்து, எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு தனி மனிதனின் பாவம் மன்னிக்கப்பட, சாபம் தீர வழி என்ன, இந்த பூமியில் வாழ்க்கை முடிந்த பின்பும் என்றென்றும் அழிவில்லாத நித்திய வாழ்விற்கு வழி யார், சத்தியம் என்றால் என்ன, நித்திய ஜீவன் யார் என்றெல்லாம் சொல்லி, இந்த உலக மக்களுக்கு தன் ஊழியத்தை ஆரம்பிக்கும் முன்னமே பிதாவாகிய தேவனிடத்தில் இருந்து அவர் பெற்ற சாட்சி தான் " இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் "  என்பதாகும்.

அப்படியானால், மேற்சொன்னபடி  எந்த காரியத்தையும், ஊழியத்தையும், இந்த பூமிக்கு தான் வந்த நோக்கத்தையும் நிறைவேற்றுவதற்கு முன்பதாகவே - அதாவது தேவ குமாரனாக, சர்வ வல்லமையுள்ள தேவனுடைய பிள்ளையாக இந்த பூமிக்கு வந்து தன்னையே சிலுவையில் பாவம் தீர்க்கும் பலியாக தந்து உலக மக்கள் அனைவரையும் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய அன்பின் உறவில் மீண்டும் நிலை நிறுத்தும் முன்பாகவே, ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்ன செய்தார் என்று தந்தையாம் கடவுள் அவர் மீது இவ்வளவு பிரியமாயிருக்கிறதை மேற்கண்ட வசனத்தின் மூலம் வெளிப்படுத்தினார்?

ஒரே ஒரு காரியம் தான். அது, தன் பிதாவோடு அவர் கொண்டிருந்த அன்பின் உறவு. அந்த உறவில் அவர் நிலைத்திருந்த விதம். தன் சித்தம், தனக்கென விருப்பம் என்று ஒன்று இல்லவே இல்லாமல், தன் பிதாவின் சித்தமே தன் வாழ்க்கையாய், பிதாவாகிய தேவனையே முழுமையாய் சார்ந்து இருந்த உறவு. பரிசுத்த வேதத்திலிருந்து இவற்றை விளக்கும் சில வேத வசனங்கள்:

அப்பொழுது நான்: இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது; என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன். மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தேன்; என் உதடுகளை மூடேன், கர்த்தாவே, நீர் அதை அறிவீர். உம்முடைய நீதியை நான் என் இருதயத்திற்குள் மறைத்துவைக்கவில்லை; உமது சத்தியத்தையும் உமது இரட்சிப்பையும் சொல்லியிருக்கிறேன்; உமது கிருபையையும் உமது உண்மையையும் மகா சபைக்கு அறிவியாதபடிக்கு நான் ஒளித்துவைக்கவில்லை. (சங்கீதம் 40:7-10)

என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன். (யோவான் 6:38)

அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். (யோவான் 5:19)

நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. (யோவான் 5:30)

என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார். (யோவான் 8:29)

இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது. (யோவான் 4:34)

இன்று, நம் வாழ்க்கையில் நாமும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சித்தம், அதாவது நம் வாழ்க்கையில் அவர் என்ன செய்ய விரும்புகிறாரோ, நாம் எப்படி இருக்க விரும்புகிறாரோ அப்படியே நாமும் இருந்து தேவ சித்தம் நிறைவேற்றும் போது, நாமும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு பிரியமாயிருப்போம். அப்பொழுது, நாமும் நம் கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் அன்பின் உறவில் நிலைத்திருப்போம், அவர் தம் அன்பில் நிறைந்து மகிழ்ந்திருபோம். இதுவே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இருதயத்தை மகிழ்விக்க, அவரை பிரியப்படுத்த மிக பிரதான வழி. இப்படி, நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு பிரியமாயிருக்கும் போது, கீழ்காணும் பரிசுத்த வேத வசனங்கள் விளக்கிச் சொல்லுகிறவைகளையும் நாம் நிறைவேற்றுகிறவர்களாக இருப்போம். அப்பொழுது, மிக அருகிலிருக்கிற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் அவரோடு எடுத்துக் கொள்ளப்பட்டு என்றென்றும் அவருடனே பரலோகத்தில் வாழ்ந்து மகிழ்ந்திருப்போம். பரிசுத்த ஆவியானவர் தாமே நமக்கு உதவி செய்வாராக. ஆமென்.

மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். (எரேமியா 9:24)

தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார். (சங்கீதம் 147:11)

அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார். (2 கொரிந்தியர் 9:7)

எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள். தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல. (ரோமர் 8:7-9)


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)

Print Email