IST (GMT+5.5)
Logo_Tamil_big_235x235 இன்றைய தியானம்

நான் தேவனுக்கு அடிமை


...எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே. (2 பேதுரு 2:19)

இந்த நாளின் மேற்கண்ட தியான வசனம், இந்த உலகத்தில் நாம் அடிமைகளாயிருக்க எத்தனையோ காரியங்களும், வாய்ப்புகளும் உண்டென்பதை உறுதியாக தெரிவிக்கிறது. அது, நம் சொந்த பழக்க வழக்கங்கள், கொள்கைகள், பாவ பழக்கங்கள், நேரடியாக பிசாசின் பிடியில் வல்லமையில் அகப்பட்டு அடிமையாயிருத்தல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆனால், பரிசுத்த வேதம் நமக்கு, ஒரு அடிமைத்தனத்தை குறித்து விளக்குகிறது. ஆச்சரியப்படத்தக்க விதத்தில் அது நமக்கு மிகவும் வேண்டியதாயும் இருக்கிறது. நாம் தேவ சித்தத்தை முழுமையாக நிறைவேற்றவும், தேவனாகிய கர்த்தருக்கு முழுமையாக நம்மை அர்பணித்து கீழ்படிவதற்கும் இந்த அடிமைத்தனம் மிக அவசியமாயிருக்கிறது.

அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள்.... (லூக்கா 1:38)

தேவாதி தேவன் மனுஷனாக, இயேசு கிறிஸ்துவாக இந்த உலகத்தில் வந்து பிறந்து மனுக்குலத்தை இரட்சிக்க, தனக்கு ஒரு சரீரத்தை உருவாக்கி பிறக்க கன்னிகையாகிய மரியாளை தம் சித்தத்தின் படி தெரிந்து கொண்டபோது,  அதற்கு மரியாள் தன்னை முற்றிலுமாய் அர்பணித்து தேவ சித்தம் தன் மூலமாய் நிறைவேற தன்னை முற்றிலும் தேவனுக்கு அடிமையாக அர்பணித்தார்கள். நம் ஒவ்வொருவரைக் குறித்தும் தேவ சித்தம் நிறைவேற, நம் மூலமாய் தேவ சித்தம் நிறைவேற நாமும் இதையே செய்வது அவசியமாய் இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் இதைத்தான் செய்திருக்கிறார். வேதம் சொல்கிறது,

கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். (பிலிப்பியர் 2:5-7)

மனிதனை பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி மீட்கும்படியாக, பிதாவாகிய தேவனுடைய சித்தத்திற்கு தன்னை முற்றிலும் ஒப்புக்கொடுத்து, அர்பணித்து தேவனுடைய ரூபமாயிருந்தும்  மனிதனைப் போல அடிமையின் ரூபம் கொண்டார்.

தேவனாகிய கர்த்தருக்கு அடிமையாயிருக்க, தேவ சித்தத்தை நிறைவேற்ற நாம் நம்மை ஒப்புக்கொடுக்கும் போது, நமக்கு மற்றுமொரு மிகப்பெரும் பாக்கியம் உண்டாகிறது. பரிசுத்த வேதத்தில் நம் கர்த்தர் இதை நமக்கு வாக்கு பண்ணுகிறார். அது இந்த பூமியில் பரிசுத்தமாய் வாழ்வதும், அதன் பின்பு கர்த்தரோடு என்றென்றும் வாழ நித்திய ஜீவனுமாகும்.

இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். (ரோமர் 6:22)


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email