___________________________________________________________________________________________________________________________________

துன்பப்பட்டால்... Sharon Rose Ministries

தேவ செய்தி - ஆகஸ்டு  2018 (Message - August 2018)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்

___________________________________________________________________________________________________________________________________

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

(யாக்கோபு 5:13) உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்;...

நம் துன்ப நேரங்களில், முதலாவது நாம் செய்ய வேண்டியது ஜெபம். ஒரு வேளை இது செய்வதற்கு மிகவும் கடினமான காரியமாக, துன்ப நேரத்தில் ஜெபிக்கவெல்லாம் முடியுமா என்று ஆச்சரியமான காரியமாக நமக்கு தோன்றலாம். ஆனால், முதலில் ஜெபத்திலிருந்து நாம் ஆரம்பிக்கும் போது தான் அந்த துன்ப நேரத்திலும் நாம் சரியாக செயல்பட ஆரம்பித்து, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினால்   அந்த துன்பம் நம்மை வென்றுவிடாமல் நாம் அந்த துன்பத்தை ஜெயங்கொள்ள முடியும். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. பரிசுத்த வேதத்தில் நாம் கீழ்க்கண்ட வசனத்தை கவனிப்போம்:

(லூக்கா 22:44) அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.

மிகுந்த திகிலூட்டும் சிலுவைப்பாடுகள், அதன் முடிவில் சிலுவையில்  தன் உயிரையும் கொடுக்க வேண்டும்  என்று அறிந்திருந்த அந்த சூழ்நிலையில் தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து  மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்.  அப்படியானால், நாம் துன்பப்பட்டாலும் நம் துன்பத்தின் நடுவிலும் ஜெபிக்க வேண்டும், ஜெபிக்கவும் முடியும், அதையே நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு முன் மாதிரியாக செய்து காட்டினார்.

நம் வேண்டுதல்கள், மன்றாட்டுகள், ஸ்தோத்திரத்தோடு கூடிய விண்ணப்பங்கள், கண்ணீர் நிறைந்த நம் இருதயத்தின் கதறல்கள், உள்ளத்தின் பெருமூச்சுகள் மற்றும் தேவனாகிய கர்த்தருக்கு துதி, ஸ்தோத்திரங்களை ஏறெடுத்து  நன்றி செலுத்துதல் என இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியதே ஜெபம்.  நாம், தனித்திருந்து தேவனுடைய பாதத்தில் அமர்ந்திருந்து செய்கிற ஜெபம், உபவாசித்து செய்கிற ஜெபம், குடும்பமாக செய்கிற ஜெபம், கர்த்தருடைய பிள்ளைகளாய் இணைந்து செய்கிற ஜெபம், கர்த்தருடைய சபையாக செய்கிற ஜெபம் என பல வழிகளில் தேவனாகிய கர்த்தரிடத்திலே ஜெபத்தை ஏறெடுப்பது அவசியமாகும்.

நாம் ஜெபம் செய்வதற்கு தேவையான மிக பிரதான காரியம் விசுவாசம். தேவனாகிய கர்த்தரை, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ஜெபிக்க வேண்டும் என்பதையே  பரிசுத்த வேதம் போதிக்கிறது:

(எபிரெயர் 11:6) விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.

மேலும், நாம் ஜெபிக்கவே முடியாத மனநிலையில்,  நம்மை விசுவாசத்தில் பெலப்படுத்தி,  ஜெபத்திற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிற ஒரே காரியம் பரிசுத்த வேதத்தை வாசிப்பதும், தியானிப்பதும் ஆகும். இதற்கு மாற்றாக வேறொரு காரியம் இல்லை. எனவே  நாம் பரிசுத்த வேதத்தை வாசிக்கும் போது, தியானிக்கும் போது  பரிசுத்த  ஆவியானவர் நமக்குள் பலமாக, மகிமையாக கிரியை செய்வதையும்,  அந்த துன்ப நேரத்தை, வாழ்வின் கடின நேரங்களை வெற்றி கொள்ள நமக்கு பிரத்தியட்சமாக உதவி செய்து நம்மை ஜெயங்கொள்ள வைப்பதையும் நாமே கண்கூடாக கண்டு, உணர்ந்து, அனுபவிக்க  செய்து,  நம்மை கர்த்தருக்கு சாட்சியாக இருக்க வைப்பார்.

(ரோமர் 8:26) அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.

பரிசுத்த வேதத்திலிருந்து சில வசனங்களின் மூலமாக,, இப்படிப்பட்ட துன்ப நேரங்களில், நெருக்கப்படுகிற நேரங்களில் ஏறெடுக்கப்பட்ட ஜெபங்களிலிருந்து நாம் நம் ஜெபத்திற்கான கர்த்தருடைய ஆலோசனையை அவருடைய ஆவியானவர் மூலமாக அறிந்து கொள்ளுவோம்.

(சங்கீதம் 142:1) கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன்.

(சங்கீதம்142:2) அவருக்கு முன்பாக என் சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; அவருக்கு முன்பாக என் நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்.

(2 நாளாகமம் 33:12) இப்படி அவன் நெருக்கப்படுகையில், தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான்.

(2 நாளாகமம் 33:13) அவரை நோக்கி, அவன் விண்ணப்பம்பண்ணிக்கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார்; கர்த்தரே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான்.

(சங்கீதம் 18:6) எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று.

(சங்கீதம் 86:7) நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர்.

(யோனா 2:1,2) அந்த மீனின் வயிற்றிலிருந்து, யோனா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:  என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.

(யோனா 2:7) என் ஆத்துமா என்னில் தொய்ந்துபோகையில் கர்த்தரை நினைத்தேன்; அப்பொழுது என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத்தில் வந்து சேர்ந்தது.

(எபிரெயர் 5:7) (இயேசு கிறிஸ்து) அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,

ஒரு வேளை, துன்ப நேரங்களில் வாழ்வின் கடின நேரங்களில் நாம் அதுவரை செய்து வந்த ஜெபத்தை உடனே நிறுத்தும் போதும், இனி என்னால் ஜெபிக்க முடியாது, ஜெபிக்க மாட்டேன் என்று சொல்வதும் - நம்மை விழுங்க நினைத்து  கெர்ச்சிக்கிற சிங்கம் போல் நம்மை  சுற்றித்திரிகிற பிசாசுக்கு முழுமையாக கதவை திறந்து விடுவது போலாகும். இதன் விளைவாக, துன்பங்களும், வாழ்வின் கடின நேரங்களும் நம்மை வென்று  விடும்.  அந்த வெற்றி சில நேரங்களில்  நம்மை மட்டுமல்ல, நம்  ஆத்துமாவையும் மரணத்திற்கு உள்ளாக்கி விடும். அதாவது நரக அக்கினிக்கு சென்று சேர்வதாகும். இதை விட நம் வாழ்வில் பெரும் நஷ்டம் வேறொன்றில்லை. எனவே, ஜெபம் அவ்வளவு முக்கியமானது.

ஆனால்,  துன்ப நேரங்களில் நாம்  செய்யும் ஜெபத்தின் முடிவிலே நமக்கு ஒரு நம்பிக்கை உண்டு. அது என்ன? பரிசுத்த வேதத்தில் கர்த்தர் சொல்கிறார்:

(சங்கீதம் 50:15) ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.

 தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.

Print Email