Message: J.Emmanuel JeevaKumar


இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவும், இரட்சிப்பும்

(Download this Message as PDF here)

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். ஆண்டவரின் விலைமதிப்பிலாத இந்த இரட்சிப்பின் செய்திக்கு உங்களை கொண்டு வந்து சேர்த்த தேவனுக்கே மகிமையை செலுத்துகிறேன். இந்த செய்தியை, நீங்கள் படிக்கும் முன்பதாக “Let’s Meditate” என்ற பகுதியில் உள்ள “பாவம் போக்க இயேசுவின் இரத்தம் எதற்கு?” என்ற செய்தியை நீங்கள் படித்த பின்பு இச்செய்தியை நீங்கள் படிக்கும்போது, நீங்கள் இன்னும் ஆழமாக இதை புரிந்து கொள்ள முடியும்.

இரட்சிப்பு என்ற வார்த்தையே – நாம் ஏதோ ஒரு பெரிய தீமையிலிருந்து, கஷ்டத்திலிருந்து, ஒரு சூழ்நிலையிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும், மீட்கப்பட வேண்டும், இரட்சிக்கப்படவேண்டும் என்று உணர்த்துகிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அளிக்கும் இரட்சிப்பு நம்மை – அதாவது நம் ஆவி, ஆத்துமா, உடல் என முற்றிலுமாக நம்மை பாவத்திலிருந்து, பாவ அடிமைத்தனத்திலிருந்து இரட்சிக்கிறது.

நம்மை பாவத்திலிருந்து, பாவ அடிமைத்தனத்திலிருந்து இரட்சிக்கிறது என்றால் நான் பாவியா? என்ற கேள்விக்கு “ஆம்” என்பதே பரிசுத்த வேதம் சொல்லும் பதில்.

(1 இராஜாக்கள் 8:46) பாவஞ்செய்யாத மனுஷன் இல்லையே; ...

(யோபு 14:4) அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ? ஒருவனுமில்லை.

(யோபு 4:17) மனுஷன் தேவனைப்பார்க்கிலும் நீதிமானாயிருப்பானோ? மனுபுத்திரன் தன்னை உண்டாக்கினவரைப்பார்க்கிலும் சுத்தமாயிருப்பானோ?

(யோபு 15:14) மனுஷனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும், ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?

(யோபு 25:4) இப்படியிருக்க, மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?

(சங்கீதம் 14:3) எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.

(நீதிமொழிகள் 20:9) என் இருதயத்தைச் சுத்தமாக்கினேன், என் பாவமறத் துப்புரவானேன் என்று சொல்லத்தக்கவன் யார்?

(பிரசங்கி 7:20) ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை.

(1 யோவான் 1:8) நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.

(1 யோவான் 1:9) நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் (இயேசு கிறிஸ்து) உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

(1 யோவான் 1:10) நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.

நம்முடைய கொள்கைகள், நல்ல பழக்கங்கள், சொந்த நெறிமுறைகள், சக மனிதரோடு ஒப்பீடு என இவற்றின் அடிப்படையில் பார்த்தால் நமக்கு நாமே சிறப்பானவர்களாக, நல்லவர்களாக தோன்றலாம் (ரோமர் 10:3). ஆனால், மகா பரிசுத்த தேவனுடைய பார்வையில் – முதல் மனிதன் ஆதாம் பாவம் செய்ததினால் பாவம் ஆட்கொண்ட இந்த உலகத்தில் (ரோமர் 5:12), பொல்லாங்கனாகிய சாத்தனுக்குள் விழுந்து கிடக்கும் இந்த உலகத்தில் (1 யோவான் 5:19) , உலகத்தின் அதிபதியாகிய சாத்தான் (யோவான் 14:30) எந்நேரமும் யாரை பாவத்தினால் விழுங்கலாமோ என்று சுற்றித்திரியும் இந்த உலகத்தில் (1 பேதுரு 5:8) – பிறந்தது முதல் கடைசிவரை நல்லவர்களாய் வாழுவதே நம்மால் இயலாத சூழ்நிலையில், நம் சொந்த முயற்சியினால் மட்டுமே மகா பரிசுத்த தேவனுடைய பார்வையில் பரிசுத்தமாய் வாழ்வது என்பது முற்றிலும் கூடாத காரியம். மனிதனின் பார்வையில் நாம் நல்லவர்களாக சில காலம் வாழலாம் அல்லது அப்படி நடிக்கலாம். ஆனால், நம் இருதயத்தை, மனதை பார்க்கிற கர்த்தருக்கு முன்னால் நாம் ஏமாற்றமுடியாது. ஒவ்வொரு நாள் இரவும் படுக்கையில் அந்த நாளின் நம் செய்கைகளை நினைவுக்கு கொண்டு வந்தாலே உயிருள்ள மனசாட்சி உள்ள ஒவ்வொருவருக்கும் நம் நிலையைப்பற்றி நம் மனமே சாட்சி சொல்லும். இந்த நிலையில், தேவனாகிய கர்த்தருடைய பார்வையில் நம் நிலை எப்படி இருக்கும்? சற்று சிந்தித்து பார்ப்போம்.

இச்சூழ்நிலையில், இந்த வினாடி வரை செய்த அத்தனை பாவங்களையும் மன்னித்து, அத்தனை பாவங்களிலிருந்தும் நம்மை விடுவித்து இரட்சிப்பது யார்? பரிசுத்தமாய், தேவனாகிய கர்த்தருக்கு பிரியமாய், அவருடைய பிள்ளையாய் வாழ்வது எப்படி? அப்படி வாழ்ந்தால் நமக்கு என்ன பலன்? அதற்கு யார் நமக்கு கடைசி வரை உதவி செய்வார்? இந்த கேள்விகள் அனைத்திற்கும் ஒரே பதில் – இரட்சகராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே.

(அப்போஸ்தலர் 4:12) அவராலேயன்றி (இயேசு கிறிஸ்துவினாலேயன்றி) வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.

(ரோமர் 10:9) ... கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.

(ரோமர் 10:10) நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.

(ரோமர் 10:13) ... கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே கல்வாரி சிலுவையில் மனுக்குலத்தின் பாவங்களையெல்லாம் தன் மீது சுமந்து, பாவமில்லாத அவர் நமக்காக பாவமாகி, பரிசுத்த இரத்தம் சிந்தி அந்த இரத்தத்தினாலே நமக்கு இரட்சிப்பை உண்டுபண்ணினார். நாம் அதை விசுவாசித்து, “ இயேசுவே நீரே என் பாவங்களை சுமந்து தீர்த்து எனக்கு இரட்சிப்பை உண்டாக்கினீர், நீர் ஒருவரே என் கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிறீர் என்று நான் முழு மனதோடு விசுவாசித்து உம்மை என் உள்ளத்திலே ஏற்றுக்கொள்கிறேன். என் பாவங்களையெல்லாம் மன்னித்து உம் பரிசுத்த இரத்தத்தினாலே என்னை கழுவி, என்னை உம் பிள்ளையாக்கியருளும்” என்று வேண்டிக்கொள்ளும் போது தம்முடைய மாறாத மாசற்ற அன்பினால் நம்மை நம் பாவங்களற சுத்திகரித்து, நம்மை இரட்சித்து தம் சொந்த பிள்ளையாக ஏற்றுக்கொண்டு பிதாவாகிய தேவனோடு நம்மை ஒப்புரவாக்குகிறார். அந்த வினாடி முதல் சர்வ வல்ல தேவனுடைய பிள்ளைகள் நாம். இது எப்பேர்ப்பட்ட பாக்கியம்.

(ஏசாயா 53:5) நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; ...

(1 யோவான் 1:7) ... அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

(1 யோவான் 2:2) நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.

(யோவான் 3:16) தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

இயேசு கிறிஸ்துவை விசுவாசியாதவர்களைக் குறித்து:

(யோவான் 3:17-18) உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பை பெற்றுக்கொண்டபின், பழைய பாவ வாழ்க்கைக்கு கல்வாரி சிலுவையிலே அவரோடு நாமும் மரித்தவர்களாய் அவைகளையெல்லாம் விட்டொழித்து - ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினாலே அவருக்குள் மீண்டும் புதிதாய் பிறந்தவர்களாய் அவருக்கேற்ற பரிசுத்த வாழ்க்கை வாழ்வதே இனி நம் வாழ்வின் நோக்கம். அவருக்கேற்ற பரிசுத்த வாழ்க்கை என்பது பரிசுத்த வேதத்தின் படி அனுதினமும் பரிசுத்தமாய் நடந்து, அவருடைய கற்பனைகளை கைக்கொண்டு, கடைசி மூச்சு வரை இந்த விசுவாசத்திலே நிலைத்திருப்பதே ஆகும். இதற்கு நாம் செய்ய வேண்டிய மிகமுக்கிய காரியம் ஒன்று உண்டு. அது, கர்த்தரிடத்திலே அவருடைய பரிசுத்த ஆவியினால் நம்மை அபிஷேகிக்க வேண்டிகொள்வதே. கர்த்தரே பரிசுத்த ஆவியானவராய் நமக்குள்ளே வந்து வாசம் பண்ணுவார். இந்த பரிசுத்த ஆவியானவரின் பெலத்தாலேயே நாம் அனுதினமும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பிரியமாய் வாழ முடியும்.

(யோவான் 14:17) உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.

(யோவான் 15:26) பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்.

(யோவான் 16:13) சத்தியஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.

(எபேசியர் 1:13) நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.

(2 தெசலோனிக்கேயர் 2:13) கர்த்தருக்குப் பிரியமான சகோதரரே, நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு, ஆதிமுதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலே, நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.

(2 தெசலோனிக்கேயர் 2:16-17) நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்திய ஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாய் நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும், உங்கள் இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் நற்கிரியையிலும் உங்களை ஸ்திரப்படுத்துவாராக.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மிக சமீபமாயிருக்கிறது. இந்த கிருபையின் காலத்தில் தாமதமில்லாமல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பை பெற்றுக்கொள்ளுங்கள். நித்திய நித்தியமான நரக அக்கினி தண்டனைக்கு தப்பிக்கொள்ள ஜாக்கிரதையாயிருங்கள்.

(எபிரேயர் 9:28) கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.

(1 தெசலோனிக்கேயர் 5:23) சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.

Print

Joomla SEF URLs by Artio