(Part 2) 2020 - புத்தாண்டு தேவ  செய்தி Sharon Rose Ministries

பிப்ரவரி 2020 (New year Message - Part 2 - February 2020)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


Part 1, Part 3 2020- ஆண்டு தேவ செய்திகள்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

இம்மானுவேல் என்ற  மகிமை நிறைந்த தம்முடைய நாமத்தின்படியே நம்மோடிருக்கும் தேவனாகிய கர்த்தரை  நன்றியோடு துதித்து, விசுவாசத்தோடு  இந்த புதிய ஆண்டை தொடர்வோம். (மத்தேயு  1:23)

(வெளிப்படுத்தின விசேஷம் 22:11) ...  நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.

மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்தையே நாம் தியானித்துக் கொண்டிருக்கிறோம். இந்த செய்தியில்,  கீழ்காணும் ஒரு பகுதியை தியானித்து அறிந்து கொள்வோம். சத்திய  ஆவியானவர் தாமே நமக்கு உதவி செய்வாராக. ஆமென்.

(வெளிப்படுத்தின விசேஷம் 22:11) ... நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; ...

சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்பட்ட தேவ நீதியை விசுவாசித்து கிருபையினால் நாம் நீதிமான்களாக்கப்படுவது  ஒருபுறம் (ரோமர் 1:17, 3:22, 3:24), பரிசுத்த வேத கட்டளைகளை, நியாயங்களை கைக்கொண்டு நீதியாய் நடப்பது அல்லது நீதியை செய்வது என்பது மற்றொருபுறம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நாம் நீதிமான்களாக்கப்படுதல் ஒருபுறம், நாம் நீதியை நடப்பிப்பது மற்றொரு புறம். இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளுகிற மிக முக்கியமான பரிசுத்த வேத சத்தியம் என்னவென்றால்  நாம் செய்கிற அல்லது நடப்பிக்கிற நீதியினால், நீதியான கிரியைகளினால்  தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக  நாம் நீதிமான்களாவது என்பது என்றும் இயலாத காரியம்.   காரணம்,  

(ஏசாயா 64:6) நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது.

(தானியேல் 9:18) என் தேவனே, உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளும்...நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம்.

எனவே, தேவ நீதியை விசுவாசிப்பதினால் - அதாவது கிறிஸ்து இயேசுவை விசுவாசிப்பதினால்  கிருபையைக் கொண்டு நாம்  தேவனால் நீதிமான்களாக்கப்படுகிறோம். அதன் பிறகு பரிசுத்த வேத கட்டளைகளை கைக்கொண்டு நீதியை நடப்பிக்கிறோம்.  இந்த இரண்டையும் நாம் செய்ய வேண்டியது மிக அவசியம். நாம் எப்படி நீதிமான்களாக்கப்படுகிறோம்? இதை  விளக்கும் பரிசுத்த வேத வசனங்களில் சிலவற்றை கீழே காண்போம்.

(ஏசாயா 50:8) என்னை நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருக்கிறார்; ...

(எரேமியா 33:16) ... அவர் எங்கள் நீதியாயிருக்கிற கர்த்தர் என்பது அவருடைய நாமம்.

(1 கொரிந்தியர் 1:31) அவரே (கிறிஸ்து இயேசுவே) தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.

(ரோமர் 3:22) அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.

(ரோமர் 3:24) இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;

(1 கொரிந்தியர் 6:11) உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.

(ரோமர் 8:30) எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.

(ரோமர் 8:33) தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.

(ரோமர் 5:1) இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.

(ஏசாயா 41:10) ...என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

(ஏசாயா 53:11) ...என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.

(ரோமர் 1:17) விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.

(பிலிப்பியர் 3:9,11) நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய்த் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்,... அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.

(ரோமர் 5:21) ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.

அடுத்ததாக, அநீதியும், பொல்லாங்கும் நிறைந்த (1 யோவான் 5:19)  இந்த உலகத்தில் நாம் வாழும்  வாழ்க்கையில் நாம் நீதிமானாயிருந்து, நீதியை நடப்பிப்பது என்பது அனுதின சவால் என்பதில்  சந்தேகமேயில்லை. ஆனால், இதை முற்றிலும் நமக்குள்ளும், நமக்கு வெளியிலும் சாத்தியமாக்குவது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு எளிதான காரியம். மட்டுமல்ல, உலகத்தை ஜெயிக்கிற ஜெயமாகிய நம்முடைய விசுவாசத்தினால் (1 யோவான் 5:4,5) நீதியை நடப்பிக்க நம்மால் முடியும் என்றும் ஆண்டவரே சொல்வதையும் கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்களில் காண்போம்.

(எரேமியா 32:27) இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?

(மத்தேயு 17:20) அதற்கு இயேசு: ...கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாதகாரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

(ரோமர் 10:10) நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.

கிறிஸ்து இயேசு சிலுவையில்  செய்து முடித்த எல்லாவற்றையும் எனக்காகவே  செய்து முடித்தார் என விசுவாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அது  நீதியாகவே எண்ணப்படும் என்று பரிசுத்த வேதம் நம்மை உற்சாகப்படுத்துகிறது.

(ரோமர் 4:3) வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.

(ரோமர் 4:5) ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.

(ரோமர் 4:23) அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதென்பது, அவனுக்காக மாத்திரமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.

நாம் நீதியை, நீதியின் கிரியைகளை செய்வதை குறித்து இன்னும் சற்று அறிந்து கொள்வோம்.  நீதி என்பது தேவனாகிய கர்த்தர் அருளிய பரிசுத்த வேதத்தில் அவர் நமக்கு போதித்து சொல்லியிருக்கிறவைகளை, அதாவது  அவருடைய கட்டளைகள் (statutes), அவருடைய கற்பனைகள் (commandments),  அவருடைய நியாயங்கள் (judgements), அவருடைய சாட்சிகள் (testimonies) அடங்கிய அவருடைய பரிசுத்த வேதத்தை  கைக்கொண்டு செய்வதும், நிறைவேற்றுவதுமே ஆகும்.

(சங்கீதம் 19:9) ... கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது.

(சங்கீதம் 119:138) நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள்.

(உபாகமம் 6:25) நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே நாம் அவர் சமுகத்தில் இந்த எல்லாக் கட்டளைகளின்படியும் செய்யச் சாவதானமாயிருந்தால், நமக்கு நீதியாயிருக்கும் என்று சொல்வாயாக.

(சங்கீதம் 23:3) அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.

(1 யோவான் 2:29) அவர் நீதியுள்ளவராயிருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியைச் செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள்.

(அப்போஸ்தலர் 10:35) எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.

(1 யோவான் 3:7) பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.

(1 யோவான் 3:10) இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல.

(சங்கீதம் 5:8) கர்த்தாவே, என் சத்துருக்களினிமித்தம் என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்குமுன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்.

(நீதிமொழிகள் 21:21) நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்.

(சங்கீதம் 106:3) நியாயத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும், எக்காலத்திலும் நீதியைச்செய்கிறவர்களும் பாக்கியவான்கள்.

(லூக்கா 1:6) அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.

(ஏசாயா 48:18) ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.

(எசேக்கியல் 18:5-9) என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

நீதியான கிரியைகளுக்கு ஓரிரு உதாரணங்களையும் பரிசுத்த வேதத்திலிருந்து காண்போம்.

(சங்கீதம் 112:9) வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.

(சங்கீதம் 82:3-4) ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள். பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.

(மத்தேயு 3:14-15) யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.

(1 பேதுரு 3:14) நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; ...

(யாக்கோபு 3:18) நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.

(யோவான் 7:18) ...தன்னை அனுப்பினவரின் (பிதாவாகிய தேவனுடைய) மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.

நீதியாய் நடப்பது, நீதியை செய்வது என்ற இந்த பாதையில், கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் ஒரு எச்சரிக்கையையும் நாம் அறிந்து கொண்டு அதை என்றும் மனதில் வைத்துக் கொள்வது அவசியம். அது:

(2 பேதுரு 2:21) அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே, நம் ஒவ்வொருவரையும் தம்முடைய நீதிமான்களாக்கி, நம்மை தம்முடைய பரிசுத்த வேதத்தின்படி நீதியை செய்கிறவர்களாக தம் வருகை வரையிலும் காத்து நடத்தி, தம்முடையை இரகசிய வருகைக்கு, எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு (1 தெசலோனிக்கேயர் 4:16-17)  ஆயத்தப்படுத்துவாராக. தம்  வருகையில் எடுத்துக்கொண்டு நீதியின் கிரீடத்தை, நித்திய ஜீவனை நமக்கு அருளிச் செய்வாராக.

(2 தீமோத்தேயு 4:8) இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.

(நீதிமொழிகள் 12:28) நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.

(ஏசாயா 56:1) கர்த்தர் சொல்லுகிறார்: நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள்; என் இரட்சிப்பு வரவும், என் நீதி வெளிப்படவும் சமீபமாயிருக்கிறது.

தேவனுக்கே சகல மகிமையும்  உண்டாவதாக. மாரநாதா, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே சீக்கிரமாய் வாரும்,  ஆமென்.


(இந்த தேவ செய்தியின் நிறைவு பகுதி அடுத்த மாத செய்தியில்)

Print

Joomla SEF URLs by Artio