2020 - புத்தாண்டு தேவ  செய்தி Sharon Rose Ministries

ஜனவரி 2020 (New year Message - January 2020)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


Part 2, Part 3 2020- ஆண்டு தேவ செய்திகள்


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

இம்மானுவேல் என்ற  மகிமை நிறைந்த தம்முடைய நாமத்தின்படியே நம்மோடிருக்கும் தேவனாகிய கர்த்தரை  நன்றியோடு துதித்து, விசுவாசத்தோடு  இந்த புதிய ஆண்டை ஆரம்பிப்போம்.  (மத்தேயு  1:23)

அன்பின் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

இந்த புதிய வருடத்திற்குரிய பரிசுத்த வேத சத்திய தியானமாக நாம் கீழ்காணும் வேத வசனங்களை சற்றே விரிவாக தொடர் செய்திகளாக தியானிக்க இருக்கிறோம். சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை நடத்துகிற சத்திய ஆவியானவர் (யோவான் 16:13) தாமே நம் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வாராக.

(மத்தேயு 1:23) ... அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.

(வெளிப்படுத்தின விசேஷம் 22:11) ... நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.

மேற்கண்ட பரிசுத்த வேத வசனங்களில், முதல் வசனம் நமக்கு மெய்யான அனுபவமாயிருக்குமானால் மட்டுமே இரண்டாவது வசனத்திற்கு நாம் கீழ்படிந்து நடப்பதும், பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம், பரிசுத்த வேதத்தின்படி இன்னும் அதிக நீதியான கிரியைகள் என நம் வாழ்வில் மெய்யாவதும் சாத்தியம்.

பரிசுத்தம் என்பது நம் ஆவி, ஆத்துமா மற்றும் சரீரம் என மூன்று வகையிலும் தொடர்புடையது. அதே போல், பரிசுத்தத்திற்கு எதிரான காரியங்களும், அசுத்தங்களும் அவ்வாறே தொடர்புடையது. எனவே தான் பரிசுத்த வேதம் போதிக்கிறது:

சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. (1 தெசலோனிக்கேயர் 5:23)

அடுத்ததாக,  தேவனுடைய பார்வையில் நீதி என்பது என்ன? தேவ நீதி என்றால் என்ன, அது எப்படிப்பட்டது என்பதையும் தேவ நீதிக்கு, நீதியின் கிரியைகளுக்கு எதிரான சுய நீதி எப்படிப்பட்டது என்பதையும் தியானிக்க இருக்கிறோம். பரிசுத்த வேதத்தில் சுய நீதியைக் குறித்து விளக்கப்பட்டிருக்கிறது:

நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது. (ஏசாயா 64:6)

இந்நிலையில், பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம், பரிசுத்த வேதத்தின்படி இன்னும் அதிக நீதியான கிரியைகள் என கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு தயாராவதைக் குறித்த சத்தியத்தை அடுத்தடுத்த செய்திகளில் தொடர்ந்து விரிவாக காண்போம்.

தேவனாகிய கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.

2019 கிறிஸ்துமஸ் தேவ செய்தி

Print

Joomla SEF URLs by Artio