_____________________________________________________________________________________________________________________________________________

பயந்தவர்கள்Sharon Rose Ministries

தேவ செய்தி - மார்ச் 2017 (Message - March 2017)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்

_____________________________________________________________________________________________________________________________________________

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

அவர் (கர்த்தர்) தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார். (சங்கீதம் 145:19)

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் நம்முடைய ஒரு முக்கியமான  வேண்டுதலும், எதிர்பார்ப்பும், ஆசையும் மேற்கண்ட வசனத்தின் பின் பகுதி தான் அது. நாம் தேவனாகிய கர்த்தரை, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நோக்கி கூப்பிடும்பொழுதெல்லாம் அதை அவர் கேட்டு, நும்முடைய விருப்பத்தின்படி செய்து, நம்மை பாவ சாபங்களிலிருந்து, வியாதிகளிலிருந்து, வேதனைகளிலிருந்து, பிசாசின் பிடியிலிருந்து, பிரச்சனைகளிலிருந்து  இரட்சிக்க வேண்டுமென்பதே நம்முடைய இருதயத்தின் ஏக்கமுமாயிருக்கிறது. பரிசுத்த வேதம் மேற்கண்ட வசனத்தின் முதல் பகுதியில் இதற்கு தெளிவான வழிமுறையையும் நமக்கு விளக்கி சொல்கிறது. அது "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பயந்திருப்பதே".

பொதுவான பயத்தைக் குறித்து நாம் எல்லோருமே அறிந்திருக்கிறோம். பரிசுத்த வேதம் கர்த்தருக்கு பயப்படுகிற பயம் அல்லாத பயத்தைக் குறித்து சொல்வதை கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்களின் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம்.

...பயமானது வேதனையுள்ளது, .... (1 யோவான் 4:18)
மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; ... (நீதிமொழிகள் 29:25)

ஆனால், பரிசுத்த வேதம் போதிக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பயந்திருப்பது என்பது முற்றிலும் வேறுபட்டது, மட்டுமல்ல, இந்த பயம் நமக்கு எப்பொழுதும் மிகவும் தேவையாக இருக்கிறது. ஆச்சரியமான இந்த பரிசுத்த வேத சத்தியத்தை, உண்மையை நாம் சற்றே ஆழமாக தியானித்து அறிந்து கொள்ளலாம், முதலாவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பயப்படுதல் என்றால் என்ன? பரிசுத்த வேதம் சொல்கிறது:

தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; ... (நீதிமொழிகள் 8:13)
நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான்; தன் வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்பண்ணுகிறான். (நீதிமொழிகள் 14:2)

அப்படியானால், தீமையை வெறுக்காமல், தீமையை வெறுத்து அதை விட்டு விலகாமல்  கர்த்தருக்கு பயப்படுகிறேன் என்பது பொய்யும், நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளுகிறதுமாகும். மட்டுமல்ல, அது கர்த்தர் போதிக்கிற போதனையாக இல்லாமல்  மனுஷர் போதனையாக, கற்பனையாக (Commandment) இருக்கிறது என்றும் பரிசுத்த வேதத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே சொல்லி எச்சரித்திருக்கிறார்.

இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது. (ஏசாயா 29:13)
...சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவிகொடாமல், (தீத்து 1:13)
மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் ... (மாற்கு 7:7)

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பயப்படுகிற பயத்தை எப்படி உணர்ந்து, அறிந்து, பெற்றுக்கொள்வது?

என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு, நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். (நீதிமொழிகள் 2:1-5)

அதாவது, பரிசுத்த வேதத்தில் உள்ள கர்த்தருடைய வார்த்தைகளுக்கு கீழ்படிந்து, அவைகளை கைக்கொண்டு நாம் அனுதினமும் வாழும்போது, பரிசுத்த வேதத்தின் மூலமாகவே  கர்த்தர் தம்முடைய ஞானத்தினால் (Wisdom), அறிவினால் (Knowledge), புத்தியினால் (Understanding) நம்மை நிரப்புகிறார். இப்படி தேவ ஞானத்தை, அறிவை, புத்தியை பெற்றுக் கொள்ளும்போது நாம் கர்த்தருக்கு பயப்படுகிற பயத்தை அறிந்து, உணர்ந்து பெற்றுக்கொள்வதோடு , அது நமக்குள் என்றும் நிலைத்துமிருக்கிறது. பரிசுத்த வேதத்திலிருந்து இதை விளக்கும் சில வசனங்கள்:

கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு. (நீதிமொழிகள் 9:10)
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; ... (சங்கீதம் 111:10)
மனுஷனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார்... (யோபு 28:28)
கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும். (நீதிமொழிகள் 2:6)
(அவர் வாயினின்று: கர்த்தருடைய வாயின் வார்த்தைகளிலிருந்து, வசனங்களிலிருந்து, பரிசுத்த வேதத்திலிருந்து அறிவும் புத்தியும் வரும்.)

மேலும், கர்த்தருக்கு பயப்படுகிற பயத்திற்கு உரிய ஏராளமான சிறப்புகளையும் அல்லது மகிமையையும்,  அப்படி பயந்து நடக்கும் போது அதற்குரிய  பலன்களையும் மற்றும் கர்த்தர் அருளும் அசீர்வதங்களையும் குறித்து பரிசுத்த வேதத்தின் வசனங்களின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; ... (சங்கீதம் 19:9)
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள். (நீதிமொழிகள் 1:7)
கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம். (நீதிமொழிகள் 10:27)
கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். (நீதிமொழிகள் 14:26)
கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். (நீதிமொழிகள் 14:27)
கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை. (நீதிமொழிகள் 15:33)
கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது. (நீதிமொழிகள் 19:23)
தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம். (நீதிமொழிகள் 22:4)
கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை. (சங்கீதம் 34:9)
எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான். (நீதிமொழிகள் 28:14)
(எப்பொழுதும் பயந்திருக்கிறவன்: எப்பொழுதும் தீமையை வெறுத்து அதை விட்டு விலகுகிறவர்கள் பாக்கியவான்கள் - ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்)

மட்டுமல்ல, இந்த பரிசுத்த வேத தியானத்தின் வசனமாகிய மேலே கண்ட சங்கீதம் 145:19ன் படி, கர்த்தருக்கு பயந்து நாம் இருக்கும் போது நம்முடைய விருப்பத்தின்படி அவர் செய்து, நாம் அவரை நோக்கி கூப்பிடும் பொழுதெல்லாம் அவர் நம் வேண்டுதலை, ஜெபத்தைக் கேட்டு நம்மை இரட்சிக்கிறார்.

பரிசுத்த வேதத்தில், கர்த்தருடைய தாசனாகிய தாவீது சொல்கிறார்:

உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன். (சங்கீதம் 119:120)

ஆதலால்,

... கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் உங்களிடத்தில் இருக்கக்கடவது, எச்சரிக்கையாயிருந்து காரியத்தை நடத்துங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்திலே அநியாயமும் முகதாட்சிணியமும் இல்லை, பரிதானமும் அவரிடத்திலே செல்லாது .... (2 நாளாகமம் 19:7)

...அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். (எபிரெயர் 12:28)

மிக சமீபமாயிருக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாவோம். ஆமென்.

 

Print

Joomla SEF URLs by Artio