_____________________________________________________________________________________________________________________________________________

இருதயமேSharon Rose Ministries

தேவ செய்தி - பிப்ரவரி 2016 (Message - Feb 2016)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்

_____________________________________________________________________________________________________________________________________________

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

(1 சாமுவேல் 13:14) ....கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி, ....

மேற்கண்ட பரிசுத்த வேத வசனம் - தேவனாகிய கர்த்தருடைய தாசனாகிய தாவீதை தேவன் தம்முடைய திட்டத்திற்கென தெரிந்தெடுக்கும் போது, அவரைக் குறித்து தேவனாகிய கர்த்தர் சொன்ன வார்த்தையே. இது எவ்வளவு பெரிய பாக்கியம். அதாவது தாவீதின் இருதயம் தேவனுடைய இருதயத்தோடு இசைந்திருந்தது.

ஆவிக்குரிய வாழ்க்கை, அதாவது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு பிரியமாய் வாழுகிற கிறிஸ்தவ  வாழ்க்கை ஆரம்பிக்கிற இடம் மனிதனின் இருதயமே.  சிந்தை (அ) மனமோ, அல்லது உணர்ச்சிகளிலோ அல்ல. மற்றொரு வார்த்தையில் சொல்வதானால், இருதயமாகிய மனிதனின் ஆவி. அதனால் தான் கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஆவிக்குரிய வாழ்க்கையாக இருக்கிறது.

எதற்காக? தேவன் ஆவியாயிருக்கிறார். அவரைத் தொழுது கொள்ளுகிற, பணிந்து ஆராதிக்கிற மனிதனும் ஆவியிலேயே அவரைத் தொழுது கொள்ள வேண்டும் என்பது அடிப்படை சத்தியமும் தேவையுமாகும். தேவன் மனிதனை ஆவி, ஆன்மா (அ) ஆத்துமா மற்றும் உடல் என்றே உண்டாக்கியிருக்கிறார். தேவனாகிய கர்த்தரை, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக, தெய்வமாக ஏற்றுக் கொள்ளும் போது அவரிடத்தில் நாம் முதலில் ஒப்புக் கொடுப்பதும், ஆண்டவர் நம்மிடத்தில் எதிர்ப்பார்ப்பதும்  நம் இருதயத்தைத் தான். அப்படி ஒப்புக்கொடுத்த பின் ஆண்டவர் இயேசு கிறிஸ்து விசுவாசத்தினால் நமக்குள் வந்து நம்மோடு என்றும் தங்கியிருப்பதும் நம் இருதயத்தில் தான் (எபேசியர் 3:17).

ஒரு மனிதனின் இருதயம் எப்படி இருக்கிறதோ அப்படியே அவன் இருக்கிறான். அதாவது - அவன் சொல், செயல், விருப்பங்கள், அனைத்தும் அவன் இருதயத்தை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது. இதையே பரிசுத்த வேதம் நமக்கு போதிக்கிறது:

(நீதிமொழிகள் 23:7) அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்; ...

அப்படியானால், நம் இருதயத்தை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு ஏற்றதாய் மாற்ற, அவர் வந்து என்றும் தங்கியிருக்கும் இடமாய் மாற்ற, அவருடைய இருதயத்தோடு இசைந்திருக்கும் இருதயமாய் மாற்ற  நாம் என்ன செய்ய வேண்டும்? எப்படி நம் இருதயம் பரிசுத்தமாகும்? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலை பரிசுத்த வேதத்தின் கீழ்க்கண்ட சில வசனங்களின் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த பரிசுத்த வேத வசனங்களின் படியே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினிடத்தில் வேண்டிக் கொள்ளும் போது அவர் நம் இருதயத்தை சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறார்.

(சங்கீதம் 51:10) தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.

(நீதிமொழிகள் 4:23) எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.

(அப்போஸ்தலர் 15:9) விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமுமிராதபடி செய்தார்.

(எசேக்கியல் 11:19) அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஏக இருதயத்தைத் தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக் கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன்.

(கொலோசெயர் 3:10) தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே.

(1 பேதுரு 3:4) அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவாலேயன்றி,  நாமாகவோ அல்லது வேறு ஏதாவது ஒரு காரியத்தை செய்தோ நம் இருதயத்தை பரிசுத்தமாக்க முடியாது என்பதையும் பரிசுத்த வேதம் நமக்கு போதிக்கிறது.

(நீதிமொழிகள் 20:9) என் இருதயத்தைச் சுத்தமாக்கினேன், என் பாவமறத் துப்புரவானேன் என்று சொல்லத்தக்கவன் யார்?

(யோபு 15:14) மனுஷனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும், ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?

தேவன் இல்லாத தன் இருதயத்தை மனிதன் நம்புகிறதைக் குறித்து பரிசுத்த  வேதம் நமக்கு எச்சரித்து சொல்வது:

(நீதிமொழிகள் 28:26) தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ....

ஏனென்றால்

(எரேமியா 17:9) எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?

நம் இருதயத்தை தேவன் தாமே பரிசுத்தமாக்கி முடிவு வரை காத்துக் கொள்வாராக. அப்பொழுது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வந்து வாசம் பண்ணி என்றும் தங்கியிருக்கும் அவருடைய ஆலயமாய் நாம் இருக்கும்படி, அவருடைய இருதயத்தோடு இசைந்திருக்கும் இருதயமாய் நம் இருதயம் இருக்கும்படி அவர் நமக்கு கிருபை செய்வார். ஆமென்.

(1 கொரிந்தியர் 3:16) நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?

(1 கொரிந்தியர் 3:17) .... தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.

(மத்தேயு 5:3) ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.

(மத்தேயு 5:8) இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.

(1 கொரிந்தியர் 6:17) அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்.

 

Print

Joomla SEF URLs by Artio