பரிசுத்த வேத தியானம்Sharon Rose Ministries

(Let's Meditate Word of God)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்

________________________________________________________________________________________________________________________________

சிலுவையைப் பற்றி

(புனித வெள்ளியைக் குறித்த பரிசுத்த வேத தியானம்)

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. (1 கொரிந்தியர் 1:18)

சிலுவையை பற்றிய உபதேசம் என்பது சிலுவையை பற்றினதல்ல. ஆனால், கபால ஸ்தலம் என்கிற இடத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த பொழுது, அந்த சிலுவையில் அவர் நமக்காக பட்ட பாடுகள் என்ன, அவர் நமக்காக சிலுவையில் எவற்றையெல்லாம் செய்து முடித்தார், அப்படி ஆண்டவர் இயேசு கிறிஸ்து செய்து முடித்த காரியங்களால் நமக்கு அவர் உண்டாக்கின பாவ மன்னிப்பும், விடுதலையும், நன்மைகளும், ஆசீர்வாதங்களும், சாத்தானுக்கும் மரணத்திற்கும் எதிரான ஜெயமும், நம் ஆத்தும இரட்சிப்பும், நமக்கான பரிசுத்தமும், நீதியும், மாம்சமாகிய இந்த ஐம்புலன்கள் மற்றும் நாம் வாழும் இந்த உலகத்தின் மீதான ஜெயமும், நித்திய ஜீவனும் மற்றும் அநேக கிருபைகளுமாகிய இவைகளை பற்றிய உபதேசமே சிலுவையை பற்றின - அதாவது சிலுவையில் இவை  எல்லாவற்றையும் செய்து முடித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பற்றின உபதேசம், சத்தியம், சுவிசேஷம், போதனையாகும்.

இந்த உபதேசத்தை, சுவிசேஷத்தைக் குறித்த சில காரியங்களை மாத்திரம் இப்பொழுது இந்த தேவ செய்தியில் நாம் சற்றே தியானிப்போம்.

முதலாவதாக, இது  தேவ பெலனாயிருக்கிறது:

கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது. (ரோமர் 1:16)

கிறிஸ்துவின் சுவிசேஷத்தை விசுவாசிக்கிறவர்களுக்கு, அதாவது தெய்வமாகிய இயேசு கிறிஸ்து பூமியில் மனிதானாக பிறந்து வாழ்ந்து சிலுவையில் உலக மனிதர்கள் அனைவரின் பாவங்ககள், சாபங்கள் அனைத்தையும் தன் மீது சுமந்து தீர்த்து, மனிதன் பாவத்தினால் அடைய வேண்டிய தண்டனையை தன் மீது ஏற்றுக் கொண்டு சிலுவையில் இறந்து, அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்ததை  தனக்காகத்தான் என்று விசுவாசிக்கிறவர்களுக்கு - இந்த சுவிசேஷம், சிலுவையை பற்றின உபதேசம் அவர்கள் இரட்சிக்கப்பட்டு தேவ பிள்ளைகளாக மாற தேவ பெலனாக இருக்கிறது.

இரண்டாவதாக, இதை கைக்கொள்ளும்போது - கடைப்பிடிக்கும் போது:

நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே. (1 கொரிந்தியர் 15:2)

ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் மனிதனாய் நமக்கு முன் மாதிரியாய் வாழ்ந்து காண்பித்திருக்கிறார். அவரை போலவே நாமும் வாழும்படியாக, அவருடைய  வார்த்தைகளின் படி, அவருடைய போதனையின் படி இந்த உலகத்தில் வாழும் பொழுது நாம் இரட்சிக்கப்படுவோம். மட்டுமல்ல, தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் அப்படியே வாழும் போது, அவருடைய இரண்டாம் வருகையில் நம் இரட்சிப்பு பூரணமடைந்து ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோடு என்றென்றும் வாழும்படியாக நித்திய ஜீவனை அவரிடத்திலிருந்து பெற்றுக் கொள்வோம்.

மூன்றாவதாக, இது மறைபொருளாக, மறைக்கப்பட்ட காரியமாக இருக்கும்:

எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும். (2 கொரிந்தியர் 4:3)

சிலுவையை பற்றின இந்த உபதேசம், அதாவது  கிறிஸ்துவின் சுவிசேஷத்தினால் தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்ள, ஏற்றுக் கொள்ள விரும்பாமல், இந்த சுவிசேஷத்தை நிராகரித்து கெட்டுப் போக விரும்புகிறவர்களுக்கு இந்த உபதேசம் மறைக்கப்பட்ட இரகசியமாய், அறிந்து புரிந்து கொள்ள முடியாத மறை பொருளாகவே இருக்கும். இப்படிப்பட்டவர்கள்  சிலுவையை பற்றின உபதேசத்தை விசுவாசிக்கமுடியாத அவ்விசுவாசிகளாய் இருப்பார்கள். மேலும், சாத்தான் அவர்கள் மனதை குருடாக்கி ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பற்றின இந்த சுவிசேஷத்தின் வெளிச்சம் அவர்களுக்கு பிரகாசமாயிராதபடிக்கு செய்து அவர்களை ஆவிக்குரிய வாழ்விலே என்றும் குருடர்களாகவே இருக்கும்படி செய்கிறான். அதினிமித்தம்,சிலுவையை பற்றின இந்த உபதேசம் கடைசிவரை அவர்களுக்கு பைத்தியக்காரத்தனமாகவே இருக்கிறது.  இதையே கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனம் விளக்குகிறது:

தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். (2 கொரிந்தியர் 4:4)

தேவன் தம்முடைய அளவற்ற ஞானத்தினால், பைத்தியமாகத் தோன்றுகிற இந்த சிலுவையை பற்றின உபதேசத்தை கொண்டு அதாவது சிலுவையில் எல்லாவற்றையும் செய்து முடித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பற்றின சுவிசேஷத்தை  கொண்டு, அதை விசுவாசிக்கிறவர்களை தம் பிள்ளைகளாக்கி கொள்ள, இரட்சித்துக் கொள்ள தேவனுக்கு பிரியமாயிருந்தது. இதையே கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனம் நமக்கு விளக்குகிறது:

எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்கத் தேவனுக்குப் பிரியமாயிற்று. (1 கொரிந்தியர் 1:21)

எனவே நாம் இந்த சிலுவையை பற்றின உபதேசத்தை, அதாவது சிலுவையில் எல்லாவற்றையும் செய்து முடித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பற்றின சுவிசேஷத்தை விசுவாசித்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அளிக்கும் ஆத்தும இரட்சிப்பையும் மற்றும் மேற்சொன்ன அனைத்து ஆசீர்வாதங்களையும், பலன்களையும் பெற்றுக் கொள்வோம். அதிசீக்கிரமாக இந்த உலகத்திற்கு மீண்டும் இரண்டாம் முறையாக வர இருக்கிற நியாயாதிபதி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு நாம் ஆயத்தமாவோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே தம்முடைய பரிசுத்த ஆவியானவராலே இதை நம்மில் செய்து நிறைவேற்றுவாராக. ஆமென்.

ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். (எபிரெயர் 2:14-15)

அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார். (ஏசாயா 53:12)

உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடேகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து; நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார். (கொலோசெயர் 2:13-15)

(பிதாவாகிய தேவனுடைய) அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய (இயேசு கிறிஸ்துவினுடைய) இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் (இயேசு கிறிஸ்துவுக்குள்) நமக்கு உண்டாயிருக்கிறது. (எபேசியர் 1:7)

நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார். (2 கொரிந்தியர் 5:21)

மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். (கலாத்தியர் 3:13)

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது. (ரோமர் 1:17)

தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் (இயேசு கிறிஸ்துவில்) இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். (1 யோவான் 5:11)

கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார். (எபிரெயர் 9:28)

 

Print

Joomla SEF URLs by Artio