கிறிஸ்துமஸ் நற்செய்திSharon Rose Ministries

 

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


வந்தார், வருகிறார்


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம்; .... (வெளிப்படுத்தின விசேஷம் 11:17)

உலக இரட்சகர் கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சாரோனின் ரோஜா ஊழியங்களின் சார்பாக இனிய அன்பின் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

நம் ஆண்டவர் அருமை இரட்சகர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பற்றி மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்தில் நாம் வாசிக்கிறபடியே, அவரே முதல் முறை இந்த உலகத்திற்கு வந்தார். மீண்டும் இரண்டாம் முறையாக அதிசீக்கிரத்தில் இந்த உலகத்திற்கு வரப்போகிறார். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிற இந்த காலத்தில் நாம் அவருடைய முதலாம் வருகையை  - கிறிஸ்து பிறப்பு நன்னாளை  கொண்டாடுகிறோம். நாம் ஒரு பாக்கியம் பெற்ற விசேஷித்த சந்ததியாய், தலைமுறையாய் இருக்கிறோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கே மகிமையையும் நன்றியையும் செலுத்துவோம்.

முதல் முறை பூமிக்கு ஆண்டவர் மனு உருவெடுத்து வந்த போது கீழ்காணும் பரிசுத்த வேத வசனங்களின் படி வந்தார்:

  • பாவம் போக்கும் கிருபாதார பலியாக அதாவது தேவ ஆட்டுக்குட்டியாக ( 1 யோவான் 4:10, யோவான் 1:29)
  • உளையான பாவச்சேற்றிலிருந்து, பாவ அடிமைத்தனத்திலிருந்து, அந்தகாரத்திலிருந்து, பிசாசின் பிடியிலிருந்து மீட்கும் மீட்பராக (1 பேது 2:9, ஏசாயா 9:2, ரோமர் 3:24, 1 கொரிந்தியர் 1:31)
  • நம் ஆத்துமாவை இரட்சிக்கும் இரட்சகராக (லூக்கா 2:11, மத்தேயு 1:21)
  • நமக்கும் காணக்கூடாத சர்வ வல்லமை பொருந்திய பிதாவாகிய தேவனுக்கும் மத்தியஸ்தராக (1 தீமோத்தேயு 2:5)
  • நமக்கு வழியாக, சத்தியமாக, நித்திய ஜீவனாக (யோவான் 14:6)


இரண்டாம் முறையாக அதிசீக்கிரத்தில் இந்த உலகத்திற்கு வரப்போகும்  ஆண்டவர் இயேசு கிறிஸ்து இம்முறை எதற்கு, எப்படி  வருகிறார்?

  • தம்மையே நம்பி, விசுவாசித்து பரிசுத்தமாக வாழும் தம் பிள்ளைகளுக்கு, தம் நீதிமான்களுக்கு அவர் வாக்குபண்ணினபடியே தாம் இருக்கும் இடத்திற்கு (பரலோகத்திற்கு) அழைத்து செல்ல - ஆண்டவராக (யோவான் 14:3)
  • துன்மார்க்கருக்கு, ஆண்டவரை ஏற்க மறுக்கிறவர்களுக்கு, அவரை மறுதலிக்கிறவர்களுக்கு  பலனளிக்க - நியாதிபதியாக (யோவான் 5:22)
  • இந்த பூமியிலே தேவனுடைய ராஜ்யத்தை அமைத்து ஆளுகை செய்ய - ராஜாதி ராஜாவாக, கர்த்தாதி கர்த்தராக  (வெளிப்படுத்தின விசேஷம் 19:16)        

இச்சூழ்நிலையில், இந்த கிறிஸ்துமஸ் விழாக்காலத்தில், நன்னாளில் மட்டுமல்ல - அவருடைய வருகை மட்டும், நாம் செய்யும்படி நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மிடத்தில் எதிர்பார்ப்பது என்ன? அவர் தம் உள்ளத்தை மகிழ்ச்சியாக்குவது எப்படி?

1. நம்மைச் சுற்றி வாழும் எளியவர்களுக்கும், கைவிடப்பட்டவர்களுக்கும் ஒதுக்கப்பட்டவர்களுக்கும், தேவையோடிருப்பவர்களுக்கும் நம்மாலான எல்லாவித உதவிகளையும் செய்வது.

அதற்கு ராஜா (இயேசு) பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் ... (மத்தேயு 25:40)

2. நம்மைச் சுற்றி வாழும் மக்களுக்கு உலக இரட்சகர் (யோவான் 4:42, 1 யோவான் 4:14), இரட்சிப்பின் அதிபதி (எபிரேயர் 2:10) கர்த்தர் இயேசு கிறிஸ்துவை அறிவிப்பது

சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ. (1 கொரிந்தியர் 9:16)

3. கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு நாமும் ஆயத்தமாகி மற்றவர்களையும் ஆயத்தப்படுத்துவது.

...நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. (வெளிப்படுத்தின விசேஷம் 22:11-12)

இந்த விசேஷித்த நாட்களில், மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்தின் படி வாழ தீர்மானித்து நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு எண்ணில்லா நன்றிகளையும், துதி ஸ்தோத்திரங்களையும் ஏறெடுப்போம். ஏனென்றால்,

நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென். (வெளிப்படுத்தின விசேஷம் 1:6)

MerryChristmas-JVK-Resized


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print

Joomla SEF URLs by Artio